search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலி சான்றிதழ் கொடுத்து 73 பேர் மருத்துவ கவுன்சிலில் பதிவு- சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
    X

    போலி சான்றிதழ் கொடுத்து 73 பேர் மருத்துவ கவுன்சிலில் பதிவு- சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

    • சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
    • ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.

    திருப்பதி:

    வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிவதற்கு முன்பு இது போன்று ஏராளமானோர் போலி சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் ஆந்திராவில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சிபிஐ அதிகாரிகளின் சோதனையில் கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை சீனா, ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் இந்தியாவில் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தனர்.

    இருப்பினும் அவர்கள் போலி சான்றிதழ்களை தயாரித்து ஆந்திரா மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலி சான்றிதழ் பதிவு செய்வதற்கு மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

    இது குறித்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தபோது எப்.எம்.ஜி. தேர்வுக்கான போலி சான்றிதழ்கள் மற்றும் 15 முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

    மேலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மருத்துவ கவுன்சிலில் போலி சான்றிதழ்களை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 73 பேர் போலி டாக்டர்களாக செயல்பட்டு வந்து உள்ளனர்.

    இதேபோல் பீகார் மருத்துவ கவுன்சிலிலும் போலி சான்றிதழ் கொடுத்து பதிவு செய்து டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இதில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 7 டாக்டர்களை பிடித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது குற்றம், சதி செய்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் போலி சான்றிதழ் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×