search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தீயாய் பரவும் பறவைக் காய்ச்சல்- 4 ஆயிரம் கோழிகள், வாத்துகள் அழிப்பு
    X

    தீயாய் பரவும் பறவைக் காய்ச்சல்- 4 ஆயிரம் கோழிகள், வாத்துகள் அழிப்பு

    • பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சதார் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • கால்நடை பராமரிப்புத் துறையினர், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிப்ரவரி 2ம் தேதி பண்ணையில் பறவைகள் இறக்கத் தொடங்கியதை அடுத்து, அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்தும் கோழி பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியால், பொகாரோ மாவட்டத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்துகள் உள்பட கிட்டத்தட்ட 4,000 பறவைகளை கொன்று அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லோஹாஞ்சலில் உள்ள பண்ணையில் புரதம் நிறைந்த கோழி இனமான கடக்நாத் இனத்தில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், 800 பறவைகள் இறந்ததாகவும், 103 பறவைகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ராஞ்சியில் உள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிபின் பிஹாரி மஹ்தா கூறுகையில், "பண்ணையின் ஒரு கி.மீ., சுற்றளவில் பாதிக்கப்பட்ட பகுதியில் கோழிகள் மற்றும் வாத்துகள் உட்பட மொத்தம் 3,856 பறவைகளை அழிக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இந்த நடவடிக்கை நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமையும் அழிப்பு பணி தொடரும்.

    கோழிகள் மற்றும் வாத்துகளை அழிக்கும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பண்ணையிலிருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளை பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 10 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோழி மற்றும் வாத்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் உஷார் நிலையில் இருப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) அருண்குமார் சிங் முன்னதாக தெரிவித்தார்.

    மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கவும், பெரிய பண்ணைகளில் கோழி, வாத்து மாதிரிகளை எடுக்கவும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மாதிரிகளை சேகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சதார் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான மேல் முதுகுவலி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சளி மற்றும் சளியில் இரத்தம் ஆகியவை மனிதர்களிடையே நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கால்நடை பராமரிப்புத் துறையினர், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×