என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 24 மந்திரிகள் நாளை பதவி ஏற்க ஏற்பாடு
- ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி.
- கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுடன் 8 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
இதுவரை மந்திரிகளுக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் மந்திரிசபையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த தலைவர்களான தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்டோரும் மந்திரி பதவி கேட்டு அடம் பிடித்து வருகின்றனர்.
இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரியான டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியே டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
மாநிலத்தில் அரசியல் ரீதியாக மிக முக்கியமான சமூகமான லிங்காயத்துகள், காங்கிரஸ் வெற்றிக்கு தங்கள் பெரும் பங்களிப்பைக் காரணம் காட்டி, முதல்-மந்திரி பதவிக்கு உரிமை கோரினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்-மந்திரி ஆக்கியதை தொடர்ந்து லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கே அதிக மந்திரி பதவிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.
ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.
முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மந்திரிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், டெல்லியில் 2 நாட்களாக முகாமிட்டுள்ளனர். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து, தங்கள் ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி தரும்படி கேட்டனர்.
அவரோ, தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து, ஆலோசிக்கும்படி தெரிவித்து விட்டார். இதையடுத்து, வேணுகோபால் வீட்டில் நேற்று 3 கட்டமாக கூடி ஆலோசனை நடத்தினர். இருவருமே, தங்கள் ஆதரவாளர்கள் பட்டியலை தனித்தனியாக தயாரித்து எடுத்து வந்திருந்தனர். இதை வழங்கி, இவர்களால் கட்சி வளர்ச்சிக்கு லாபம் என விளக்கினர்.
மற்றொரு பக்கம் டெல்லியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களுடன், நேற்று 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி.,க்களும் இணைந்தனர். மொத்தம் இருப்பதே, 24 பதவிகள். ஆனால், 50-க்கும் அதிகமானோர் மந்திரி பதவி கேட்டு, தங்கள் ஆதரவு தலைவர்களை சந்தித்து பேசினர். யாரை மந்திரி ஆக்குவது, எதன் அடிப்படையில் வழங்குவது, அவர்களால் கட்சிக்கு என்ன லாபம், எந்தெந்த சமுதாயத்துக்கு முக்கியத்துவம் தருவது என, பல்வேறு கோணங்களில் ஆலோசிக்கப்பட்டது.
அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட மேலிட தலைவர்கள், கார்கேவுக்கு பட்டியல் தயாரித்து அனுப்பினர். அவர் சிலரை மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளார். பின், பட்டியலை திருத்தி மீண்டும் அனுப்பி இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் இன்று காலை சந்தித்து, மந்திரிகள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதன் பின், அவர்கள் பெங்களூரு திரும்பினர்.
இதனிடையே டெல்லியில் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. அவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், நாளை காலை, 11:45 மணிக்கு புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா நடக்கும் என தெரிகிறது.
இதில் தேஷ்பாண்டே, லட்சுமண் சவதி, ஹெச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், தினேஷ் குண்டுராவ், விஜயானந்த் காஷப்பனவர், அசோக் பட்டண், பசவராஜ் ராயரெட்டி, சிவராஜ் தங்கடகி, கிருஷ்ண பைரேகவுடா.'ஹரிபிரசாத், சரண பிரகாஷ் பாட்டீல், மஹாதேவப்பா, ஈஸ்வர் கன்ரே, புட்டரங்கஷெட்டி, நரேந்திர ஸ்வாமி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன, சுதாகர், செலுவராயஸ்வாமி, வெங்கடேஷ் உட்பட மூத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும், 24 மந்திரி பதவிகளும் நிரப்பப்படும்' எனவும், காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்