search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நேருவின் ஹாட்ரிக் சாதனையை சமன் செய்த பிரதமர் மோடி...
    X

    நேருவின் 'ஹாட்ரிக்' சாதனையை சமன் செய்த பிரதமர் மோடி...

    • அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மாணவர் குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார்.
    • 2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, 3-வது முறை முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.

    சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியை வகித்தவர் என்ற நேருவின் 'ஹாட்ரிக்' சாதனையை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    இது தவிர இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு உள்ளது.

    அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர், இன்றைக்கு புதிய உச்சம் கண்டிருக்கிறார் என்றால், அது ஒன்றும் எளிதாக நடந்துவிடவில்லை. அதற்காக அவர் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானவை. கற்களும், முற்களும் நிறைந்தவை.

    குஜராத் மாநிலம் வட் நகரில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி முல்சந்த் மோடி - ஹீரா பென் தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தவர், நரேந்திர மோடி. குடும்பத்தில் 5 மகன்கள், ஒரு மகளை காப்பாற்றுவதற்காக தந்தை முல்சந்த் மோடி வட் நகர் ரெயில் நிலையத்தில் டீக்கடை நடத்தினார். தாயார் ஹீரா பென்னோ வீடு வீடாக சென்று கிடைத்த வேலையை செய்து கணவருக்கு உறுதுணையாக இருந்தார்.

    தந்தைக்கு உதவியாக நரேந்திர மோடியும் டீயை கையில் எடுத்துக்கொண்டு ரெயில் பெட்டிகளில் பயணிகளிடம் விற்பனை செய்தார்.

    பள்ளி பருவத்தில் சராசரி மாணவனாக இருந்த அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. தனது 8-வது வயதிலேயே அதில் உள்ள தேசிய தொண்டர் அணியில் சேர்ந்தார். ஆன்மிகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார்.

    10 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நிரந்தர உறுப்பினராக சேர்ந்த பிறகு, நரேந்திர மோடிக்கு மணி நகரில் உள்ள அந்த இயக்கத்தின் அலுவலகமே வீடாக மாறியது.

    அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மாணவர் குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார்.

    பின்னர் அரசியல் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவில் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது நடந்த போராட்டங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட நரேந்திர மோடிக்கு பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.


    1987-ம் ஆண்டு பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, நரேந்திரமோடியை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்தார். அடுத்த ஓராண்டிலேயே கட்சியின் குஜராத் மாநில பொதுச் செயலாளரானார். 1990-ம் ஆண்டு எல்.கே.அத்வானி நடத்திய ரத யாத்திரைக்கு வியூகம் வகுத்து கொடுத்தவரே நரேந்திர மோடிதான். 1998-ம் ஆண்டு குஜராத், இமாசல பிரதேச தேர்தல் பொறுப்பாளராகவும் அவர் செயல்பட்டார். அதன்பிறகு, இமாசல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொதுச் செயலாளராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார்.

    அதே ஆண்டு (1998) வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோது, நரேந்திர மோடிக்கு தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததால், அதற்கு அடுத்த நாள் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். பின்னர் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி, அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

    பின்னர், 2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, 3-வது முறை முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி ஏற்றார். இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்ட கால முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற சாதனையை படைத்த அவர், 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று 4-வது முறை முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

    இந்த நேரத்தில், குஜராத்தில் சோலார் மின் உற்பத்தியை அதிகரித்து, மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதுடன், இளைஞர்கள் போதையின் பாதைக்கு செல்லாமல் இருக்க போதைப் பொருட்களுக்கு தடை விதித்தார். மாநிலம் முழுவதும் தண்ணீர் வசதி, சாலை வசதி, விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தி மாநிலத்தை முன்னணிக்கு கொண்டுவந்து குஜராத் மாடலை நாடறியச் செய்தார்.

    அந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் அரசின் 10 ஆண்டு கால ஆட்சி முடிவடையும் தருவாயில் இருந்தது. எனவே, பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், சக்தி வாய்ந்த, பிரபலமான ஒரு தலைவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் அக்கட்சித் தலைமைக்கு ஏற்பட்டது.

    அதன் அடிப்படையில், 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்றார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று 'தூய்மை இந்தியா' திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கி வைத்து அதில் வெற்றியும் கண்டார்.

    2019-ம் ஆண்டு 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்தபோது, பிரதமர் நரேந்திரமோடி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். முக்கியமாக, முத்தலாக் மசோதா நிறைவேற்றம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, பொதுத் துறை வங்கிகள் 12 ஆக குறைப்பு, குடியுரிமை திருத்த சட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு, புதிய பாராளுமன்றம் திறப்பு, அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி, அயோத்தியில் பால ராமர் கோவில் திறப்பு என அடுக்கடுக்கான சாதனைகளை பா.ஜ.க. அரசு படைத்தது.


    இந்த சாதனைகளுடன் 18-வது பாராளுமன்ற தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் ஆதரவுடன் 293 இடங்களை கைப்பற்றி இப்போது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

    அரசியலில் தொடக்கம் முதலே வெற்றி ஒன்றையே கண்டு சந்தித்து வந்த பிரதமர் மோடி, தற்போது 3-வது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்து, நேருவின் சாதனையை சமன் செய்து புதிய வரலாறு படைத்துவிட்டார்.

    இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னென்ன வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Next Story
    ×