search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீசாருடன் துப்பாக்கி சண்டை:  குண்டு காயத்துடன் காட்டுக்குள் தப்பிய மாவோயிஸ்ட்டுகள் 3பேரை பிடிக்க வேட்டை
    X

    தப்பி ஓடிய சுந்தரி மற்றும் லதா.

    போலீசாருடன் துப்பாக்கி சண்டை: குண்டு காயத்துடன் காட்டுக்குள் தப்பிய மாவோயிஸ்ட்டுகள் 3பேரை பிடிக்க வேட்டை

    • துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் போலீசார் கூறினர்.
    • போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட லதா, சுந்தரி ஆகிய 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்ட்டுகள் தப்பிச்சென்று விட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கம்பமலை பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக வன பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அரசு அலுவலகம் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் மாவோயிஸ்ட்டுகள் தடுப்பு பிரிவான தண்டர் போல்ட் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தாலுகா தலப்புழா பேரிளா சம்பாரத்து கிராமத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவரான அனீஸ் என்பவரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிகளுடன் நுழைந்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கோழிக்கோடு மாவட்ட ஊரக போலீஸ் சூப்பிரண்டு ஹேமலதா தலைமையிலான கேரள தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் அங்கு சென்று அனீசின் வீட்டை சுற்றி வளைத்தனர்.

    துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் போலீசார் கூறினர். ஆனால் வீட்டுக்குள் இருந்த மாவோயிஸ்ட்டுகள், போலீஸ் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் போலீசாரும் துப்பாக்கியால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தினர்.

    போலீசாரும், மாவோயிஸ்ட்டுகளும் துப்பாக்கியால் சுட்டபடி மோதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் மாவோயிஸ்ட்டுகள் வைத்திருந்த துப்பாக்கிகளில் குண்டுகள் காலியாகியதால், அவர்களால் தொடர்ந்து சுட முடியவில்லை.

    இதையடுத்து போலீஸ் படையினர் அனீசின் வீட்டுக்குள் புகுந்து, அங்கு பதுங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த சந்துரு(வயது369, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த உன்னிமாயா(31) ஆகிய 2பேரை தண்டர் போல்ட் மற்றும் கமாண்டோ படையினரிடம் சிக்கினர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட லதா, சுந்தரி ஆகிய 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்ட்டுகள் தப்பிச்சென்று விட்டனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் 3 பேரும் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

    அவர்களை பிடிக்க தண்டர்போல்ட் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பிச்சென்ற மாவோயிஸ்ட்டுகள் கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்பதால் அங்கும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சந்துரு மற்றும் உன்னிமாயா ஆகிய இருவரும் கல்பெட்டா முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் காவலில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    அதனை விசாரித்த நீதிபதி, மாவோயிஸ்ட்டுகளிடம் 5 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீஸ் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்பு இருவரையும் ரகசிய இடத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×