search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்
    X

    பாராளுமன்றம் வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு அமல்

    • எதிர்க்கட்சிகளின் பேரணி அறிவிப்பை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பாராளுமன்றத்தின் வெளியே உள்ள சாலையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

    அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அதில் பங்கு சந்தையில் அதானி குழுமம் பல முறைகேடுகளை செய்ததாக குற்றம்சாட்டியது. இதன் காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கடும் நஷ்டத்துக்கு உள்ளானார்கள்.

    மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமம் பங்குகள் மீது முதலீடு செய்து இருந்தன. இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினையை தொடர்ந்து எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

    அதானி குழும மோசடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் மனுதாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    அதானி விவகாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க எம்.பி.க்கள் ராகுல் காந்தி பிரச்சினையை கிளப்பினார்கள். இந்திய ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதானி குழுமம் விவகாரம் குறித்து எதிர்கட்சியினர் இன்று ஆலோசனை நடத்தினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேல்சபை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 18 எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    டி.ஆர்.பாலு (தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), சஞ்சய் ராவத் (சிவசேனா உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    அதானி விவகாரம் குறித்து கூட்டுகுழு விசாரணைக்கு மத்திய அரசு மறுத்து வருவதால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று புகார் அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து இன்று மதியம் 12.30 மணியளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எம்.பி.க்கள் ஊர்வலமாக சென்றனர்.

    காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். அவர்கள் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற பாதகைகளை வைத்து இருந்தனர்.

    அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு மனு ஒன்றை எதிர்கட்சிகள் அளிக்க உள்ளனர்.

    எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணி காரணமாக பாராளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். பல இடங்களில் தடைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    Next Story
    ×