search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் பனி: இமாசலபிரதேசத்தில் அருவி உறைந்தது
    X

    இமாசலபிரதேச மாநிலத்தின் குலுவில் ஒரு அருவி, பனி விழுதுகளாய் உறைந்துள்ள காட்சி.

    வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் பனி: இமாசலபிரதேசத்தில் அருவி உறைந்தது

    • டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியசாக பதிவானது.
    • ஒடிசா மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    புதுடெல்லி :

    மார்கழி மாதத்தில் பனி அதிகமாக இருப்பது வழக்கமானதுதான். ஆனால், வடமாநிலங்களில் இந்த ஆண்டு பனி வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

    செயற்கைக்கோள் படங்களை பார்த்ததில், பஞ்சாப் மற்றும் அதைஒட்டிய வடமேற்கு ராஜஸ்தானில் இருந்து அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் வழியாக பீகார் மாநிலம் வரை பனிஅடுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனால், வடமாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. டெல்லியில், தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குளிர்காற்று வீசியது. அங்கு நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலை, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற குளிருக்கு பெயர் பெற்ற மாநிலங்களின் வெப்பநிலையை விட குறைவாக உள்ளது. இதனால், டெல்லி மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள்.

    டெல்லியில், காலையில் பனிமூட்டமாக காணப்பட்டது. 25 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் திணறின. எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    உத்தரபிரதேசத்தில், சாலையில் எதையும் பார்க்க முடியாதநிலையில் கோர விபத்து ஏற்பட்டது. ஒரு பஸ், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து நேபாளத்துக்கு சென்று கொண்டிருந்தது.

    ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் உன்னா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் எதுவும் தெரியாததால், எதிரில் வந்த லாரியுடன் மோதியது. இதில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 4 பேர் பலியானார்கள்.

    டெல்லியில் நிலவிய பனிமூட்டம், ரெயில், விமான போக்குவரத்தையும் பாதித்தது. 267 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றில், 82 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 140 பயணிகள் ரெயில்களும், 40 மின்சார ரெயில்களும் அடங்கும்.

    நேற்று முன்தினம் 88 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 30 விமானங்களின் போக்குவரத்து தாமதமானதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 5 விமானங்கள், வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன.

    டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியசாக பதிவானது. கடுமையான பனிப்பொழிவால், டெல்லியில் பள்ளிகளுக்கான விடுமுறை 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது. வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. காஷ்மீரில் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    வடமாநிலங்களில் கடும் குளிர் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், வாகனங்களில் விளக்கை போட்டுச் செல்லுமாறும் கூறியுள்ளது.

    ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை இருப்பவர்கள், காலை வேளையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×