search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு முழுவதும் விரைவில் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்க ஏற்பாடு
    X

    நாடு முழுவதும் விரைவில் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்க ஏற்பாடு

    • தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது.
    • குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அரசால் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ ஆணையமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.) விளங்குகிறது.

    மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட இந்த ஆணையம், ஆதார் விதிகளின் கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தனித்துவமான 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கி வருகிறது.

    அரசின் திட்ட நிதிகள், மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள் சட்டம், 2016 மூலம் இந்த ஆதார் எண் கொண்ட மக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்படுகிறது.

    2012-ல் எடுக்கப்பட்ட தரவுகளோடு இருக்கும் இந்த ஆதார் அட்டையின் விபரங்களை தற்போதைய நிலைக்கு மேம்படுத்தி கொள்ள ஆதார் அட்டை முகமம் மக்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.

    அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று புதிய விபரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விபரங்களை சேர்த்து கொள்ளலாம் என்று ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யூ.ஐ.டி.ஏ.ஐ.) அறிவுறுத்தி உள்ளது.

    தற்போது நாடு முழுவதும் 16 மாநிலங்களில் குழந்தைகளின் பிறப்பு சான்றுகளுடன் ஆதார் எண் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண்ணையும் ஒரே நேரத்தில் வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை யூ.ஐ.டி.ஏ.ஐ. மேற்கொண்டு வருகிறது.

    எனவே நாடு முழுவதும் அனைத்து பிறப்பு சான்றுகளும் விரைவில் ஆதார் உடன் வரும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது. குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் புதுப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆனாலும் அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் இன்னும் தனித்துவ அடையாள அட்டை பெறாத மாநிலங்களில் ஒன்றாக உள்ளன. தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் தொகை முழுமையாக பதிவு செய்யப்படாததால் லடாக் மற்றும் நாகலாந்திலும் இந்த பணிகள் முழுமை அடையவில்லை.

    கடந்த ஆண்டு பெறப்பட்ட 20 கோடி கோரிக்கைகளில் 4 கோடி மட்டுமே புதிய ஆதார் பதிவுக்காகவும் மீதமுள்ளவை தனிப்பட்ட விபரங்களை புதுப்பிப்பதற்காகவும் இருந்தன.

    இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ.) பல ஆதார் வைத்திருப்பவர்கள் புதிய முகவரிக்கு மாறியிருப்பதால் அல்லது தங்கள் மொபைல் எண்ணை மாற்றியதால் தங்கள் விபரங்களை தானாக முன் வந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த புதுப்பிப்பை ஆன்லைனில் எம் ஆதார் செயலி மூலமாக அல்லது ஆதார் மையங்களில் ரூ.50 செலவில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×