search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிந்த தாய் யானையை தேடி சாலையில் வந்த வாகனங்களின் பின்னால் ஓடிய குட்டி யானை
    X

    பிரிந்த தாய் யானையை தேடி சாலையில் வந்த வாகனங்களின் பின்னால் ஓடிய குட்டி யானை

    • குட்டி யானை சாலையில் வந்த ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் சென்று வழிமறித்தது.
    • குட்டி யானை அடிக்கடி பிளிறியடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியது.

    திருவனந்தபுரம்:

    குழந்தைகள் செய்யக் கூடிய சுட்டித்தனம் பார்ப்பதற்கு அழகாகவும், ரசிக்கும் விதமாகவும் இருக்கும். அது மனித இனத்தில் மட்டு மல்லாது, விலங்கிலத்திலும் நடக்கும். அதுவும் பார்ப்பதற்கு ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

    இதன் காரணமாகத்தான் பலர் தங்களின் வீட்டில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வளர்க்கிறார்கள். சிறிதாக இருக்கும் போது அவை செய்யக்கூடிய சுட்டித தனத்தை ரசித்து பார்ப்பது மட்டுமின்றி, அவற்றின் மீது அளவுக்கு மீறிய பாசத்தை வைத்து வளர்க்கிறார்கள்.

    என்னதான் சுட்டித்தனம் செய்தாலும் தாயை தேடும் குழந்தைகள் போன்று, விலங்கினங்களும் தாயின் அரவணைப்பைத் தான் விரும்பும். இதனால் தான் விலங்கினங்கள் சிறிதாக இருக்கும் போது தாயை சுற்றிச்சுற்றி வந்தபடி இருக்கும். அப்படி இருக்கும் போது தாய் எங்காவது சென்றுவிட்டால் குட்டிகள் தவித்து விடும். அதனைப் போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு திருநெல்லி தோள்பேட்டை பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வனத்தில் இருந்து நேற்று ஒரு குட்டி யானை, தாயை பிரிந்து வழி தவறி அந்த பகுதியில் உள்ள சாலைக்கு வந்து விட்டது. அந்த குட்டி யானை சாலையில் வந்த ஒவ்வொரு வாகனத்தின் முன்பும் சென்று வழிமறித்தது.

    பின்பு அந்த வாகனத்தை சுற்றிச்சென்று தனது தாயை தேடியபடி இருந்தது. பஸ், கார், உள்ளிட்ட எந்த வாகனத்தையும் அந்த குட்டி யானை விடவில்லை. அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்திவிட்டு, வாகனத்ததை சுற்றிச்சென்று தனது தாயை தேடியபடி இருந்தது.


    மேலும் அந்த வாகனங்கள் கிளம்பி சென்ற போது, பின்னால் வெகு தூரம் துரத்திக் கொண்டு ஓடியது. தான் இருப்பதை தாய்க்கு காண்பிப்பதற்காக அந்த குட்டி யானை அடிக்கடி பிளிறியடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியது.

    அதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் குட்டி யானையின் தவிப்பை பார்த்து பரிதாபப் பட்டனர். சிலர் அதற்கு சாப்பிட உணுவ பொருட்களை கொடுத்தனர். ஆனால் அந்த குட்டி யானை அதனை சாப்பிடாமல் தனது தாயை தேடியபடியே இருந்தது.

    குட்டி யானை ஒன்று சாலையில் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தி நிதானமாக ஓட்டிச் சென்றனர். வெகு நேரத்திற்கு பிறகு அந்த குட்டி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

    குட்டி யானை ஒன்று தாயை பிரிந்து தவித்து வருவது பற்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தாயை பிரிந்து தவித்துவரும் குட்டி யானையை கண்காணித்து வருகின்றனர். அந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தாய் யானையை பிரிந்து வந்த குட்டி யானை, சாலையில் வாகனங்களை மறித்து தாயை பரிதவிப்புடன் தேடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×