search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தி கேரளா ஸ்டோரி பட தயாரிப்பாளரை தூக்கில் போட வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் ஆவேசம்
    X

    'தி கேரளா ஸ்டோரி' பட தயாரிப்பாளரை தூக்கில் போட வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் ஆவேசம்

    • இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன.
    • ‘தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.

    மும்பை :

    இந்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

    கேரளாவில் மாயமான பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போல படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இந்த சினிமா திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன. மும்பையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பொதுமக்கள், தொண்டர்கள் இலவசமாக பார்க்க பா.ஜனதா தலைவர்கள் டிக்கெட் எடுத்து கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மும்பையை சேர்ந்த பா.ஜனதா மந்திரிகள் மங்கல் பிரதாப் லோதா, அதுல் பத்கால்கர், எம்.எல்.ஏ.க்கள் சுனில் ரானே, பரக் ஷா ஆகியோர் தொண்டர்கள் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக 'தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.

    இந்தநிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரை பொது வெளியில் தூக்கில் போட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜிதேந்திர அவாத் ஆவேசமாக கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அவர்கள் கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை, அந்த மாநிலத்தின் பெண்களை அவமதித்து உள்ளனர். அவர்கள் 32 ஆயிரம் கேரள பெண்கள் மாயமாகி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சேர்ந்தவர்கள் 3 பேர் தான். அந்த படத்தின் தயாரிப்பாளரை பொதுவெளியில் தூக்கில் போட வேண்டும்" என்றார்.

    Next Story
    ×