search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இது கொண்டாட அல்ல போராட வேண்டிய நேரம்: ஜாமினில் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்
    X

    இது கொண்டாட அல்ல போராட வேண்டிய நேரம்: ஜாமினில் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்

    • டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது
    • இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள் - உச்ச நீதிமன்றம்

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

    சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    இதனையடுத்து, இன்று சஞ்சய் சிங், டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

    திகார் சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் இடையே பேசிய அவர், "இது கொண்டாடுவதற்கான நேரம் அல்ல மாறாக போராட வேண்டிய நேரம். நமது கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு விரைவில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் விடுவிக்கப்படும் வரை, நாம் கொண்டாட மாட்டோம், நாம் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×