search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டயர் கில்லர் வேகத்தடையால் பொதுமக்கள் காயம்
    X

    'டயர் கில்லர்' வேகத்தடையால் பொதுமக்கள் காயம்

    • மாநகராட்சி சார்பில் ‘டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது.
    • வேகத்தடை காரணமாக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    தானே:

    தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவாஜி பாத் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் 'டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்(ஒன்வே) விதிகளை மீறி நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சரியாக வரும் வாகனங்கள் வேகத்தடையை எளிதாக கடந்து செல்ல முடியும். அதே நேரத்தில் விதியை மீறி எதிர்திசையில் இருந்து வாகனங்கள் சாலையில் நுழைய முயன்றால், வேகத்தடையில் உள்ள ராட்சத ஆணி வாகனத்தின் டயரை கிழித்து விடும். இந்த வேகத்தடை காரணமாக சிவாஜி பாத் சாலையில் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் டயர்களை கிழிக்க வைக்கப்பட்ட அந்த வேகத்தடை, அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து வருகிறது. இதுவரை அந்த வேகத்தடை காரணமாக 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சிவாஜி பாத் சாலை ரெயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்கின்றனர். பலருக்கு இந்த வேகத்தடை பற்றி தெரியாது. எனவே அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காலில் காயம் ஏற்படுகிறது" என்றார்.

    மிதேஷ் ஷா என்பவர் கூறுகையில், "மாநகராட்சியின் நோக்கம் சரியானது தான். ஆனால் அதற்கு முதலில் அவர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல விசாலமான, ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்வார்கள். சாலையில் செல்ல மாட்டார்கள்" என்றார்.

    இதுபோன்ற 'டயர் கில்லர்' வேகத்தடைகளை வைப்பதற்கு பதில் வாகனங்கள் விதி மீறலில் ஈடுபடும் பகுதியில், போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணியில் நிறுத்தலாம் என ராகுல் பிங்காலே என்பவர் கூறினார்.

    Next Story
    ×