search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை- பிரதமர் மோடி பாராட்டு
    X

    200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை- பிரதமர் மோடி பாராட்டு

    • இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
    • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள், கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன. இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 75 நாட்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வரை 199 கோடியே 87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று 200 கோடி என்ற மைல்கல்லை கடந்தது.

    இந்த சாதனையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா மீண்டும் வரலாறு படைத்திருப்பதாக கூறிய அவர், தடுப்பூசி இயக்கத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பங்களித்தவர்களை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

    இந்த சாதனைக்காக பொதுமக்களுக்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, வயதுவந்தவர்களில் 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர். 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 82 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்த உள்ளனர். 68 சதவீதம் பேர் 2 தவணையும் செலுத்தி உள்ளனர். 12-14 வயதினரில் 81 சதவீதம் பேர் முதல் தவணையும், 56 சதவீதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள்.

    Next Story
    ×