search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து
    X

    மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து

    • அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
    • விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத்திய பட்ஜெட் குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பு என்று நாம் போற்றும் விவசாயிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்துவிட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் விவசாயத்துறையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.

    அதாவது விவசாயத்துறைக்கு ரூ.8 ஆயிரத்து 468 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு ஆதரவு விலை, அறிவியலுக்கு மாறான பயிர் காப்பீட்டு திட்டம், வெள்ளம், வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி பற்றாக்குறை போன்றவை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. விவசாயிகளின் வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை.

    பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ.23 ஆயிரம் கோடி தேவை. ஆனால் மத்திய அரசு ரூ.5,300 கோடி வழங்குவதாக கூறியுள்ளது. இதில் 40 சதவீத கமிஷனை கழித்தால் ரூ.3 ஆயிரம் கோடி தான் கிடைக்கும். மேலும் பத்ரா திட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவடையும் வரை இந்த நிதியை செலவு செய்ய முடியாது. உணவு மானியம், நரேகா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.மத்திய அரசு கர்நாடகத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது.

    நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பது இந்த பட்ஜெட் காட்டுகிறது. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த திட்டங்களும் இல்லை. ஆதரவு விலை பற்றி கூறவில்லை. சிறுதானியங்களில் ராகியும் ஒன்று என்று கூறியுள்ளனர். அரசியல் நோக்கத்தில் தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறும்போது, "மத்திய பட்ஜெட் வளர்ச்சியை மையமாக வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரெயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தினருக்கு வருமான வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறுகையில், "பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தேசிய திட்டமாக அறிவித்து விரைவாக பணிகளை தொடங்க வேண்டும். இப்போது எந்த திட்டத்தை அறிவித்தாலும், அது தேர்தலுக்கு பிறகே அமலுக்கு வரும். இந்த விஷயத்தில் அடுத்து கர்நாடகத்தில் புதிதாக அமையும் அரசின் பங்கும் முக்கியமானது. சில ரெயில்வே திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன. அதை நிறைவேற்ற மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அறிவிக்கிறார்கள். தேர்தல் முடிந்த பிறகு அதை மறந்து விடுகிறார்கள். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது" என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில், "மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட், எதிர்காலத்தை மனதில் வைத்தும், ரூ.380 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல் அனைத்து தரப்பினருக்கும் பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×