search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்  ஜெகதீப் தன்கர்- பாஜக அறிவிப்பு
    X

    ஜெகதீப் தன்கர்    நரேந்திர மோடி

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர்- பாஜக அறிவிப்பு

    • ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.
    • இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

    குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி நடக்கிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக, மேற்கு வங்காள மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

    முன்னாக டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர், எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

    ஜெகதீப் தன்கர்-க்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய சிறந்த அறிவு இருக்கிறது. அவர் சட்டமன்ற விவகாரங்களை நன்கு அறிந்தவர். அவர் ராஜ்யசபாவில் ஒரு சிறந்த தலைவராக இருப்பார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவையின் நடவடிக்கைகளை வழிநடத்துவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும், பிரதமர் தமது பதிவில் கூறியுள்ளார்.

    ஜெகதீப் தன்கர் தனது பணிவுக்கு பெயர் பெற்றவர், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் பாடுபட்டவர். அவர் எங்கள் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாததால் ஜெகதீப் தன்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    Next Story
    ×