search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய சிவசேனா தலைவர் மகன்.. பாரில் இருந்து புறப்பட்ட வீடியோ
    X

    மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய சிவசேனா தலைவர் மகன்.. பாரில் இருந்து புறப்பட்ட வீடியோ

    • அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
    • பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் வீடியோ வெளியாகி உள்ளது.

    மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த பெண் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாயமானார். இந்த காரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்ததும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.


    மதுபோதையில் கார் ஓட்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மிஹிர் ஷா தலைமறைவாகி இருக்கிறார். மிஹிர் ஷாவை அவரது காதலி மறைத்து வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், விபத்து நடைபெறும் முன் மிஹிர் ஷா பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

    வீடியோவின் படி மிஹிர் ஷா பாரில் இருந்து வெளியே வந்து நண்பர்களுடன் மெர்சிடிஸ் காரில் கிளம்பி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்திற்கு பிறகு மிஹிர் ஷா காரை மாற்றிக் கொண்டு பிஎம்டபிள்யூ காரை மதுபோதையில் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மிஹிர் ஷா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரது தந்தையும் அரசியல் தலைவருமான ராஜேஷ் ஷா மற்றும் வழக்கில் தொடர்புடைய பிஎம்டபிள்யூ காரின் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் மிஹிர் ஷா தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×