search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேரணியில் வன்முறை: காங்கிரஸ் எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
    X

    பேரணியில் வன்முறை: காங்கிரஸ் எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

    • பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது.
    • முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராய்விஜயன் தலைமையில் மந்திரிகள் மக்களை நேரில் சென்று சந்திக்கும் நவ கேரள சதஸ் பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்கு கேரள மாநில காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அவர்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள தலைமை செயலகம் நோக்கி, இளைஞர் காங்கிரசாரும், மாணவர் அமைப்பினரும் நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, தண்ணீர் புகைவீச்சு போன்றவற்றில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நவ கேரள சதசின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநில காங்கிரஸ் சார்பில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை அருகே சென்ற போது திடீரென வன்முறை வெடித்தது. பேரணியில் பங்கேற்றவர்கள், போலீசார் மீது கற்களையும், கொடிக்கம்பங்களையும் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி யடித்தனர். அப்படியும் வன்முறை கட்டுக்குள் வராததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களை தொண்டர்கள் பத்திரமாக மீட்டு சென்றனர். பின்னர் எதிர்கட்சி தலைவர் சுதாகரன், ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கலவரம், சாலைமறியல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் எம்.பி.க்கள் சசிதரூர், கொடிக்குன்றில் சுரேஷ், அடூர் பிரகாஷ், கே.முரளீதரன், ஜெபி மாதர் மற்றும் ரமேஷ் சென்னிதலா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியது தொடர்பான புகாரில், முதல்-மந்திரி பினராய் விஜயனின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 16-ந்தேதி நவ கேரள சதஸ் பயணம், ஆலப்புழாவில் இருந்து அம்பழப்புழா தொகுதிக்கு சென்றபோது பொது மருத்துவமனை சந்திப்பில் நின்ற இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஜய் ஜூவல், மாணவர் காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஏ.டி.தாமஸ் ஆகியோர் முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் பிடித்து அங்கிருந்து அகற்றி உள்ளனர். அப்போது முதல்-மந்திரியின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரி அனில்குமார், மற்றொரு பாதுகாப்பு அதிகாரி சந்தீப் ஆகியோர் வேனில் இருந்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேரும், ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலப்புழா தெற்கு போலீசார், விசாரணை நடத்தி பாதுகாப்பு அதிகாரிகள் அனில்குமார் மற்றும் சந்தீப் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி, 326, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    Next Story
    ×