search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இதுவரை காணாத பேரிடர் வயநாடு நிலச்சரிவு: கேரள முதல்வர் பினராயி விஜயன்
    X

    இதுவரை காணாத பேரிடர் "வயநாடு நிலச்சரிவு": கேரள முதல்வர் பினராயி விஜயன்

    • மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

    கேரள இன்று நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கடும் சவாலுக்கிடையில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணி சிக்கலாக உள்ளது. மேப்பாடி மருத்துவமனையில் 62 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. 42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    எதிர்பாராமல் நடைபெற்ற நிலச்சரிவு. மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை காணாத பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் நிலச்சரிவு குறித்து விசாரித்துள்ளனர். கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

    மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 108 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 60 குழுக்கள் களத்தில் உள்ளனர்.

    மீட்பு பணிக்கு வந்த 2 ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலையால் கோழிக்கோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீட்பு பணியில் கேரள போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்படைகளும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×