search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2019 ஆண்டை விட மேற்கு வங்காளத்தில் பெரிய வெற்றியை பெறுவோம்- பிரதமர் மோடி
    X

    2019 ஆண்டை விட மேற்கு வங்காளத்தில் பெரிய வெற்றியை பெறுவோம்- பிரதமர் மோடி

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை.
    • பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 282 தொகுதிகளுக்கு 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காளத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் இன்று 4 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    காலை 11.30 மணிக்கு வடக்கு 24 பர்கான்சில் உள்ள பராக்பூரில் பாரதிய ஜனதா வேட்பாளர் அர்ஜூன் சிங்குக்கு ஆதரவாக மோடி ரோடு ஷோவில் ஈடுபட்டார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் பராக்பூர் நிலம் வரலாற்றை எழுதியது. சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்தது. திரிணாமுல் காங்கிரஸ் இங்கு என்ன செய்தது என்று பாருங்கள். வங்காள தேசத்தின் பொருளாதா ரத்தை வலுப்படுத்துவதில் மேற்கு வங்காளம் முக்கிய பங்காற்றிய காலம் ஒன்று இருந்தது.

    இன்று திரிணாமுல் காங்கிரஸ் ஊழல்களின் மையமாக மாறியுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஒரு காலத்தில் அறிவியல் கண்டு பிடிப்புகள் இருந்தன. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் முழுவதும் வெடிகுண்டு தயாரிக்கும் உள்நாட்டு தொழில் உள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ராமர் பெயரை எடுத்துக் கொண்டு ராம நவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டனர்.

    சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் காலம் இங்கு இருந்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி பாதுகாப்பின் கீழ் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் செழித்து வருகின்றனர்.

    மேற்கு வங்காளத்தில் 2019-ம் ஆண்டை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெறுவோம்.

    இன்று நான் மேற்கு வங்காள மக்களுக்கு 5 உத்தரவாதங்களை வழங்குகிறேன். நான் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது.

    எஸ்.சி., எஸ்.டி.க்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. நான் இங்கும் வரை நீங்கள் ராமரை வணங்குவதையும், ராமநவமி கொண்டாடுவதையும் யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை யாராலும் ரத்து செய்ய முடியாது. நான் இங்கு இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ.) ஒழிக்க முடியாது.

    மோடிக்கு எதிராக ஜிகாத் வாக்கு கேட்கிறார்கள். பாகீரதி நதியில் இந்துக்களை மூழ்கடிப்போம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். அவர்களின் தைரியத்தை கற்பனை செய்து பாருங்கள். அவர்களின் தைரியத்துக்கு யார் ஆதரவு கொடுத்தார்கள்.

    சந்தேஷ்காலி குற்றவாளிகளை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. அந்த கட்சியின் குண்டர்கள் சந்தேஷ் காலி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அச்சுறுத்தினார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    அதைத் தொடர்ந்து 1 மணியளவில் அவர் ஹூக்ளி சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். 3-வதாக பிரதமர் மோடி ஆரம்பாக்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அருப்குமாரை ஆதரித்து ஓட்டு சேகரித்தார்.

    இன்று மாலை 4 மணிக்கு அவுராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதி களுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை 10 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. நாளை நடைபெறும் தேர்தலில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி பீகார் செல்கிறார். மாலை 6.45 மணிக்கு பாட்னாவில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தி பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    Next Story
    ×