என் மலர்
இந்தியா
மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும்...! ஞாயிறும் வேலை பார்க்கணும் என்கிறார் L&T சேர்மன்
- ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?.
- வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள்.
இந்தியாவில் அரசு நிறுவனங்களில் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்களிலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. தனியார் நிறுவனங்களில் ஞாயிறு மட்டும் விடுமுறையாகும்.
உலகளாவிய போட்டியால் ஐ.டி. உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுடைய செயல்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களை குறைத்து அதிக நேரம் வேலை பார்க்க வைக்கலாமா என ஐ.டி. நிறுவனங்கள் எண்ணுகின்றன.
இன்போசிஸ் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்மறையான கருத்துகள் அதிக அளவில் வந்தன. சாதகமான கருத்துகளும் வந்தனர்.
கடந்த வாரம் அதானி வாரத்திற்கு 70 மணி நேர வேலை குறித்து பேசும்போது "உங்கள் வேலை வாழ்க்கை- சமநிலையை என்மீது திணிக்கக்கூடாது, எனது வேலை- வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன். ஒருவர் தனது குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார், மற்றொருவர் 8 மணி நேரம் அவர்களுடன் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார். அது அவர்களின் சமநிலை.
உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது நடக்காமல் இருக்கப்போவதில்லை. மேலும் உங்கள் குழந்தைகளும், உங்களுக்கு குடும்ப மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகம் இல்லை என்று அறிந்து அதையே பின்பற்றும். உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகம் பிடித்திருக்கும். இதை தாண்டி ஒரு உலகம் நமக்கு இல்லை. யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் 90 மணி நேரம் வேலைப் பார்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை கூட போட்டித் தன்மையுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
L&T நிறுவனம் ஏன் சனிக்கிழமை தனது பணியாளர்களை வேலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது குறித்து கேட்ட கேள்விக்கு எஸ்.என். சுப்ரமணியன் கூறியதாவது:-
உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வர்த்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.
சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு எஸ்.என். சுப்ரமணியன் தெரிவித்தார்.
இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறா்கள்.