search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபாநாயகர் யார்? வார இறுதியில் என்.டி.ஏ. ஆலோசனை கூட்டம்
    X

    சபாநாயகர் யார்? வார இறுதியில் என்.டி.ஏ. ஆலோசனை கூட்டம்

    • சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 24-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும் பான்மை இல்லாத நிலையில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2014, 2019 பாராளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று இருந்தது. அக்கட்சியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் இந்தூர் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சுமித்ரா மகாஜனும், 2-வது ஆட்சிக்காலத்தில் ராஜஸ்தானின் கோட்டா தொகுதி பா.ஜ.க. எம்.பி. ஓம்பிர்லாவும் பாராளுமன்ற சபாநாயகர்களாக செயல்பட்டனர்.

    ஆனால் தற்போது பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை (272) இல்லாத நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் (16), பீகாா் முதல்-மந்திரி நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் (12) உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

    கடந்த இரு தோ்தல்களைப் போல் இல்லாமல், இம்முறை எதிரணியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி வரை நடைபெறும் நிலை யில் முதல் இரண்டு நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனா். இதையொட்டி, இடைக்கால பாராளுமன்ற சபாநாயகர் நியமிக்கப்ப டுவாா்.

    பின்னா், வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற சபா நாயகர் தோ்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 25-ந் தேதி பிற்பகலுக்குள் வேட்பாளா் பெயா்களை எம்.பி.க்கள் பரிந்துரைக்க மக்களவைச் செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததில் 'கிங் மேக்கா்களாக' மாறிய தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் பாராளு மன்ற சபாநாயகர் பதவி யைப் பெற முனைப்புக் காட்டுவதாகவும், முக்கி யத்துவம் வாய்ந்த இப்பதவி யை விட்டுக் கொடுக்க பா.ஜ.க. விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வருகிற 22 அல்லது 23-ந்தேதி டெல்லியில் கூடி ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் கள், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஆலோசனை முடிவில் சபாநாயகர் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே பாராளு மன்ற சபாநாயகர் பதவிக்கான வேட்பாளா் தோ்வு குறித்து ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா் கே.சி.தியாகி கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் வலுவான கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. பா.ஜ.க.வால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை நாங்கள் ஆதரிப்போம்' என்றாா்.

    அதே நேரம், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் பட்டாபிராம் கொம்ம ரெட்டி கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக அமா்ந்து பேசி, பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும். கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளா் தோ்வு செய்யப்பட வேண்டும்' என்றாா்.

    இந்த இரு கட்சிகளும் மாறுபட்ட கருத்துகளை கூறியிருப்பதால், பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக தோ்வாகப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

    பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு தெலுங்குதேசம் வேட்பாளா் களமிறக்கப்பட்டால், 'இந்தியா' கூட்டணி ஆதரிக்கும் என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யு மான சஞ்சய் ரவுத் தெரிவித்தாா்.

    இது தொடா்பாக, மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற சபாநாகர் தோ்தல் முக்கியமானது; அப்பதவி பா.ஜ.க.வுக்கு கிடைக்குமேயானால், அதன் மூலம் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தங்களின் கூட்டணிக் கட்சிகளை பா.ஜ.க. உடைத்துவிடும்.

    தன்னை ஆதரிப்பவா்களுக்கு பா.ஜ.க. துரோகம் இழைக்கும் என்பதை நாங்கள் அனுபவபூா்வமாக உணா்ந்தவா்கள். பாராளுமன்றத் தலைவா் பதவிக்கு தெலுங்கு தேசம் தனது வேட்பாளரை களமிறக்க விரும்புவதாக அறிந்தேன். அது நடக்கும்பட்சத்தில், 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் ஆலோசித்து, தெலுங்கு தேசத்துக்கு ஆதரவளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இந்தியா கூட்டணி வேண்டுகோளை தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நிராகரித்துள்ளன. இதையடுத்து சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலாசித்து வருகிறார்கள்.

    இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடத்துவது போல இருக்கும்.

    இந்த நிலையில் சபாநாயகர் பதவிக்கு ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரி நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. அதே சமயத்தில் ஒடிசாவை சேர்ந்த மகதப் என்ற எம்.பி. பெயரும் சபாநாயகர் பதவிக்கு அடிபடுகிறது.

    துணை சபாநாயகர் பதவிக்கு கூட்டணி கட்சிக்கு வழங்க பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. வருகிற 22-ந்தேதி இதற்கெல்லாம் விடை கிடைத்துவிடும்.

    Next Story
    ×