என் மலர்
இந்தியா

உடலுறவின்றி மனைவி வேறொருவரை காதலிப்பது கள்ளக்காதல் இல்லை - உயர்நீதிமன்றம்

- கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
- அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர்.
மனைவி ஒருத்தர் தன் கணவனை தாண்டி வேறொரு நபருடன் உடல் ரீதியிலான உறவில் இல்லாமல் காதலிப்பது கள்ளக்காதல் ஆகாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா, "கள்ளக்காதல் என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். தனது மனைவி வேறொருவரை காதலிப்பதால், அவளுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்ற கணவரின் வாதத்தை நிராகரித்தார்.
இவ்வழக்கில் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சத் தொகையாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்த போது நீதிபதி அலுவாலியா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
"ஒரு மனைவி உடல் ரீதியான உறவுகள் இல்லாமல் வேறொருவர் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும், மனைவி கள்ளக்காதல் கொண்டிருக்கிறாள் என்று கூறுவதற்கு அதுவே போதுமானதாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், "கணவரின் சொற்ப வருமானம் இடைக்கால ஜீவனாம்சத் தொகையை மறுக்க ஒரு அளவுகோலாக இருக்க முடியாது" என்றும் நீதிமன்றம் கூறியது. விண்ணப்பதாரர் தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர் என்பதை முழுமையாக அறிந்தே ஒரு பெண்ணை மணந்திருந்தால், அதற்கு அவரே பொறுப்பு.
ஆனால் அவர் ஒரு திறமையான நபராக இருந்தால், அவர் தனது மனைவியை பராமரிக்க அல்லது இடைக்கால ஜீவனாம்சத் தொகையை செலுத்த சம்பாதிக்க வேண்டும்.