என் மலர்
இந்தியா
நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் நாளை முதல் தர்ணா போராட்டம்: மம்தா பானர்ஜி
- பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை வழங்காமல இழுத்தடிக்கிறது என மம்தா குற்றச்சாட்டு.
- மாநில அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக பேசினர்.
மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.
உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். பிப்ரவரி 1-ந்தேதிதான் கடைசி நாள் என மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்திருந்தார் மம்தா பானர்ஜி.
இந்தநிலையில் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்காவிடில் நாளை முதல் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "மத்திய அரசுக்கு பிப்ரவரி 1 வரை (இன்று) காலக்கெடு விதித்திருந்தேன். இன்றைக்குள் நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் நாளையில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். அவர்கள் நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால், அதை எப்படி பெற வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எல்லோருடைய ஆதரவையும் விரும்புகிறேன்" இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.