search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இலவச பஸ்சில் பெண்கள் பிரேக் டான்ஸ் - கேடிஆர் சர்ச்சை .. பாஜகவில் கரையும் பிஆர்எஸ்? - தெலுங்கானா அரசியல்!
    X

    இலவச பஸ்சில் பெண்கள் பிரேக் டான்ஸ் - கேடிஆர் சர்ச்சை .. பாஜகவில் கரையும் பிஆர்எஸ்? - தெலுங்கானா அரசியல்!

    • வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்

    தமிழகத்தைத் தொடர்ந்து தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தைக் கிண்டலடித்து பாரத் ராஷ்டிர சமிதி (BRS) தலைவர் கே.சந்திரசேகர ராவின் [KSR] மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் [KTR] சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    நேற்று முன் தினம் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய கேடிஆர், தெலுங்கானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சீதக்காவை குறிப்பிட்டு, 'ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஒரு பஸ்சை கொடுங்கள், மொத்த குடும்பமும் அதில் பயணம் செய்யட்டும். பெண்கள் பஸ்சில் காய்கறிகளை நருக்கட்டும், பிரேக் டான்ஸ் ஆடட்டும், டான்ஸ் வீடியோ எடுக்கட்டும்' என்று பேசினார். சமீப காலமாக பெண்கள் பஸ்சில் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோக்களை குறிப்பிட்டு இவ்வாறு வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், 'கட்சிக் கூட்டத்தில் நான் பேசியது சகோதரிகளை புண்படுத்தியிருந்தால் என்னை அவர்கள் மன்னிக்க வேண்டும். சகோதரிகளை அப்படிப் பேச வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல' என்று பதிவிட்டு தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதற்கிடையில் தற்போது டெல்லியில் உள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிஆர்எஸ் கட்சி விரைவில் பாஜகவோடு இணைக்கப்படும் என்று பேசியுள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஆர்எஸ் பாஜகவின் சேரும் என்றும் கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க உள்ளதாகவும், கேடிஆருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் ஹரிஷ் ராவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கத்துடன் பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றினார் கேசிஆர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் படுதோல்வியைச் சந்தித்தது பிஆர்எஸ். மக்களவைத் தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பிஆர்எஸ் பெறவில்லை. இந்த நிலையில்தான் பிஆர்எஸ் பாஜகவோடு இணைக்கப்படும் என்று ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.

    Next Story
    ×