என் மலர்
இந்தியா
உலகின் கோடீசுவர பிச்சைக்காரர்: மாத வருமானம் ரூ.75 ஆயிரம்- சொத்து மதிப்பு ரூ.7½ கோடி
- பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார்.
- நான் பேராசைக்காரன் இல்லை. கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்.
இன்றைய காலக்கட்டத்தில் உழைத்தாலே, தினமும் குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனால் மும்பையை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்தே, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது அவர் தான் உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டு இருக்கிறார்.
அவரது பெயர் பாரத் ஜெயின் (வயது 54). மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தினமும் 12 மணி நேரம் பிச்சை எடுப்பாராம். அதன் மூலம் தினசரி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 வரை கிடைக்குமாம்.
ஒரு ரூபாய் பிச்சை போட்டாலும், அதனை இன்முகத்துடன் வாங்கி கொள்வாராம். மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறார்.
பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார். அந்த வீட்டில்தான் அவரது குடும்பம் வசித்து வருகிறது. இதுதவிர 2 கடைகளையும் வாங்கி இருக்கிறார். அந்த கடைகள் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அவரது 2 பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர், இனியும் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் பாரத் ஜெயின், தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். தற்போது அவரது சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும்.
இது குறித்து அவர் கூறும் போது, 'நான் பேராசைக்காரன் இல்லை. நான் தாராளமாக வாழ்கிறேன். கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்' என்று கூறுகிறார்.
இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை பிச்சை எடுக்கும் தொழிலில் நிதி புரள்கிறது. மும்பையை சேர்ந்த சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். லட்சுமி தாஸ் என்பவரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி இருக்கிறது.
"என்னைப் பார்த்தால் பேசாமல் பிச்சை எடுக்கலாம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று கர்வத்துடன் கூறுகிறார் பணக்கார பிச்சைக்காரர் பாரத் ஜெயின்.