search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்- சாக்ஷி மாலிக் மிரட்டல்
    X

    பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்- சாக்ஷி மாலிக் மிரட்டல்

    • மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.
    • பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி உள்ளனர். அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் ஆசிய, காமன் வெல்த்தில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கடந்த 7-ந்தேதி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 15-ந்தேதி வரை போராட்டத்தை மல்யுத்த வீராங்கனைகள் ஒத்தி வைத்தனர்.

    அன்றைய தேதியில் பாலியல் புகார் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சாக்ஷி மாலிக் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தால் தான் நாங்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்போம். தீர்வு கிடைக்காவிட்டால் புறக்கணிப்போம். இது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

    நான், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் ஒன்றாகவே இணைந்து நிற்கிறோம். ஒன்றாகவே இணைந்து நிற்போம். 15-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்வோம். எங்களை சமாதானப்படுத்த தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.

    பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரிஜ்பூஷன் சிங்கை வருகிற 15-ந்தேதிக்குள் கைது செய்யாவிட்டால் எங்களது போராட்டம் மீண்டும் நடைபெறும் ஜந்தர்மந்தரில் இருந்து 17-ந்தேதி போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம். புகார் கொடுத்தவர்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. பிரிஜ்பூஷன் சிங் தனது செல்வாக்கை பயன்படுத்தி விசாரணையில் தலையிடுகிறார். மிரட்டல் காரணமாக புகார் கொடுத்த மல்யுத்த வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×