search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்- பா.ஜ.க எம்.பி. வீட்டில் டெல்லி போலீஸ் விசாரணை
    X

    மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்- பா.ஜ.க எம்.பி. வீட்டில் டெல்லி போலீஸ் விசாரணை

    • பிரிஜ்பூஷன் சரண்சிங் இல்லாத சமயத்தில் தான் அவரது இல்லத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • பிரிஜ்பூஷன் மீதான பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு 137 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    பா.ஜனதா எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பணியாற்றி வந்தார்.

    பிரிஜ்பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து இருந்தும் இதுவரை அவரை கைது செய்யவில்லை. இதனால் பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்யக்கோரி ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை அவர்கள் கங்கை ஆற்றில் வீச போவதாக அறிவித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இதை தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் சிலர் போராட்டத்தை கைவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் உடனடியாக அவர்கள் மறுத்தனர்.

    இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங் வீட்டில் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹோண்டாவில் அவரது வீடு உள்ளது. இன்று காலை அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். பிரிஜ்பூஷன் சரண்சிங் இல்லாத சமயத்தில் தான் அவரது இல்லத்துக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வீட்டில் உள்ள வேலைக்காரர்கள் உள்பட 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பிரிஜ்பூஷன் மீதான பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு 137 பேரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளது.

    Next Story
    ×