என் மலர்
இந்தியா

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமம் நீர் குடிப்பதற்கு ஏற்றது - யோகி ஆதித்யநாத்

- மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்.
இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரபிரதேச சட்டசபையில் பேசிய யோகி ஆதித்யநாத், "இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் புராண கால நதியான சரஸ்வதி ஒன்றாக கலக்கும் திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. சனாதன தர்மம், கங்கை நதி, இந்தியாவுக்கு எதிரானவர்கள் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போன்றது" என்று தெரிவித்தார்.