என் மலர்
இந்தியா
நாய், பூனை கடிக்கு அலட்சியம் காட்டிய வாலிபர் பலி
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பகவான் மண்ட்லிக் கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார்.
- நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
மும்பை:
மும்பையை அடுத்த கல்யாணை சேர்ந்தவர் பகவான் மண்ட்லிக் (வயது 27). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரை தெருநாய் ஒன்று கடித்து விட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு பூனையும் அவரை கடித்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. உடனே அவர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.
இறுதியில் மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாக கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது
மேலும் அந்த மாநகராட்சியின் மருத்துவ சுகாதார அதிகாரி தீபா சுக்லா கூறுகையில், "எந்த விலங்குகள் கடித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முன்னெச்சரிக்கையாக உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்" என்று பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.
நாய், பூனை கடித்ததை தொடர்ந்து தடுப்பூசி போட்டு இருந்தால் வாலிபரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோய் இருக்காது.
இதில் அலட்சியம் காட்டிய வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.