search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Haryana CM
    X

    பசு பாதுகாப்பு கும்பலை யாரால் தடுக்க முடியும்? - அரியானா முதல்வர்

    • பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
    • அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்டது.

    அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.

    இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் சாபிரை தாக்கிய பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

    பசு பாதுகாப்பு கும்பலின் இந்த வெறிச்செயல் குறித்து பேசிய அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, "பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆதலால் இதனை கும்பல் கொலை என்று கூறுவது சரியல்ல. கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்? இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. இந்த சம்பவங்கள் துரதிஷ்டவசமானது" என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×