search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மலரும் நினைவுகள்:பாலகிருஷ்ணா ஜோடியாக... மீனா
    X

    மலரும் நினைவுகள்:பாலகிருஷ்ணா ஜோடியாக... மீனா

    • அஸ்வமேதம் தான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம்.
    • கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது.

    அஸ்வமேதம் இதுதான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம். மிகப்பெரிய நடிகர். எனவே எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

    படத்தில் பாலகிருஷ்ணா மருத்துவர் வேடம் எனக்கு. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது. அதுவரை பாலைவனம் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது எப்படி இருக்கும் என்று நேரில் பார்த்தது கிடையாது.

    எனவே முதல் முறையாக பாலைவனத்தை பார்க்கப் போகிறோம் என்று ஆசையும் இருந்தது. அதேநேரம் இன்னொரு மலையாள படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த படத்தின் காட்சிகள் கேரளாவில் மிகவும் உள்புற பகுதி களில் நடந்து கொண்டிருந்தது.

    படப்பிடிப்பு முடிந்து மறுநாள் நான் ஜெய்ப்பூர் செல்ல வேண்டும். ஜெய்ப்பூர் செல்வதும் எளிதல்ல. கொச்சியில் இருந்து விமானத்தை பிடித்து ஜெய்சல்மீர் செல்ல வேண்டும். அங்கிருந்து காரில் ஜெய்ப்பூர் பயணிக்க வேண்டும்.

    இந்த காலத்தை போல் அப்போதெல்லாம் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது. ஒருவருக்கொருவர் தகவல்கள் பரிமாறி கொள்வது கஷ்டம்.

    இந்த நாளில் இந்த இடத்துக்கு வருவேன் என்றால் அந்த இடத்துக்கு சென்று விட வேண்டும். மற்ற வர்களும் அதேபோல் அந்த இடத்துக்கு வந்து விட வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

    அதேபோல்தான் படக்கு ழுவினர் அனைவரும் ஜெய்ப்பூர் சென்று சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் எனது வரு கைக்காக காத்திருந்தார்கள்.

    நேரம் செல்ல செல்ல அவர்களுக்கும் சந்தேகம். மீனா வருவாளா... மாட்டாளா... என்று ஒருவருக்கொருவர் பேசி இருக்கிறார்கள்.

    இன்று வருவதாகத்தானே சொல்லி இருந்தார். ஏன் வரவில்லை என்று குழப்பத்தி லேயே இருந்திருக்கிறார்கள்.

    ஒரு நாள் போகாமல் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.

    இதெல்லாம் என்க்கும் தெரியும். எனவே அடித்து பிடித்து கேரளாவில் இருந்து ஜோத்பூர் சென்று அங்கிருந்து ஜெய்சல்மீர் போய் சேர்ந்து விட்டோம்.

    ஆனால் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்... இந்த இடத்துக்கு வந்து விட்டோம்... என்று இந்த காலத்தை போல் 'ரன்னிங் கமென்ட்ரி' எல்லாம் கொடுக்க முடியாது.

    ஒரு வழியாக ஜெய்சல்மீரில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் ஜெய்ப்பூர் போய் சேர்ந்தோம்.

    ஓட்டலில் எங்களை எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவினருக்கு என்னை பார்த்த பிறகுதான் நிம்மதி.

    வந்திட்டீங்களா மேடம். வாங்க... வாங்க... என்று உற்சாகமாக வரவேற்று அழைத்து சென்றார்கள். அதன் பிறகுதான் எல்லோரும் இரவு சாப்பாடே சாப்பிட்டோம்.

    மறுநாள் அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு தயாரானோம். காரில் படப்பிடிப்பு நடக்கப்போகும் இடத்தை சென்றடைந்தோம்.

    நாங்கள் சென்ற நேரம் பகல் 12.30 மணி போன இடம் பாலைவனம் ஆயிற்றே? மரங்களை எங்கே காண்பது? நிழலை எங்கு தேடுவது?

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொன்னிற போர்வை விரித்தது போல் மணல் மட்டுமே பரந்து விரிந்து கிடந்தது. ஆங்காங்கே ஒட்டகங்களில் ஒரு சிலர் பயணித்து கொண்டிருந்தார்கள்.

    காரைவிட்டு இறங்கியதும் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அனலை அள்ளி கொட்டுவது போல் காற்று வீசியது. பாலைவனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால் புடவை, உயரமான ஹீல்ஸ் வைத்த செருப்பும் வாங்கி சென்றிருந்தேன்.

    காட்சியை பற்றி விளக்கும் போது முதல் முறையாக ஸ்லோமோஷனில் ஹை ஸ்பீடில் படமாக்க இருந்தார்கள். அந்த மாதிரி காட்சியில் நடிப்பது வழக்கமாக நடிப்பதை விட டபுள் ஸ்பீடில் நடிக்க வேண்டும்.

    எனவே சேலை கட்டிக் கொண்டு உயரமான ஹீல்ஸ் போட்டு நடிப்பது ஆபத்து. வழுக்கி விழ நேரிடலாம் என்று சாதாரண சப்பல் அணிந்து கொண்டேன்.

    பாலைவன மணலில் இறங்கி நடந்தோம். சற்று தூரத்தில் ஒரு சிறிய கொட்டகை மட்டும் போட்டு இருந்தார். அந்த கொட்டகைக்குள் தான் சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது எல்லாம்.

    நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். உண்மையான வெயில் அனுபவத்தை பாலைவனத்தில் பெற முடியும். இப்படியும் ஒரு பிரதேசம் இருக்கத்தானே செய்கிறது என்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன்.

    நம்ம ஊரில் கோடை காலம் தொடங்கியதும் 100 டிகிரி வெயில் அடித்தாலே வெளியே நடமாட முடிவதில்லை. எப்போது முடியும் இந்த வாட்டி வதைக்கும் வெயில் என்று தவிப்போம்.

    ஆனால் பாலைவனம் எல்லா காலமும் இப்படித்தான் இருக்கு மாம் சிறிது தூரம் வெயிலில் நடந்தாலே எங்காவது சற்று நேரம் ஒதுங்கி நிற்க நிழல் இருக்காதா என்று தேடி ஓடுவோம்.

    எப்படியும் சற்று தூரத்தில் நிழல் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் எங்கும் ஓடி தேடினாலும் நிழலை பார்ப்பது அரிது தாகம் வந்தால் தண்ணீர் கிடைக்காது. இப்படியும் ஒரு பிரதேசம்... இங்கும் உயிர்கள் வாழ்கிறது கண்முன்னால் ஒட்டகம் செல்கிறது. இவை தண்ணீருக்கு என்ன செய்யும்? எப்படித்தான் இந்த வெயிலை தாங்குகின்றதோ என்றெல்லாம் என் மனதுக்குள் ஓடியது.

    உறைய வைக்கும் பனி பிரதேசத்தில் பனிக்கரடிகள் வாழவில்லையா அதேபோலத்தான் இந்த வெயிலையும் தாக்குப் பிடிக்கும் வகையில் இந்தப் பிரதேசத்தில் உயிர்கள் வாழ்கின்றன இறைவன் படைப்பில் எத்தனை அதிசயங்கள்...? நினைத்தாலே ரொம்ப ஆச்சரியமாக இருக்கி றதல்லவா?

    வாழ்க்கையில் நாம் சாதிக்கும் எத்தனையோ சம்பவங்கள் நமக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஷூட்டிங் நடந்த இடம் ரொம்ப தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவன மணலில் நடந்தே செல்ல வேண்டும்.

    அந்த மணலில் நடந்து செல்ல ஏது வான செருப்பு அணியாததால் நடக்கும் போது கால் மணலில் புதைந்ததால் நெருப்பில் கால் வைத்தது போல் இருந்தது. சூடு தாங்க முடியவில்லை. கால்களில் கொப்புளமே வந்துவிட்டது.

    தொடர்ந்து இந்த மாதிரி சாதாரண சப்பல் போட்டு நடிக்க முடியாது என்பதை உணர்ந்து இரவோடு இரவாக சென்று ஷூ வாங்கி போட்டேன்.

    ஷூ போட்டு நடக்கும் போதும் கால் மணலில் புதையும் போது மணல் சிறிதளவு உள்ளே சென்று விடும். இருந்தாலும் பரவாயில்லை.

    அந்த படத்தில் இடம் பெற்றுள்ள `ஓ பிரேமா...' என்ற பாடல் பாலைவனத்தில் பட மாக்கப்பட்டது. எப்படியோ அந்த படக்காட்சி முடிந்து விட்டது.

    அந்த படத்தில் இடம் பெற்ற 'கும்தலகிடி கும்மா குமதம்...' என்ற மற்றொரு டூயட் பாடல் சூப்பர் ஹிட்டானது. அந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது ரொம்ப சுவாரஸ்யமானது.

    எதிர்பாராத காரணங்களால் டைரக்டருக்கு வர முடியாமல் போனது. மறுநாள் ஷூட்டிங்குக்கு எனக்கு என்ன காஸ்ட்யூம் சொல்லி இருக்கிறார் என்று கேட்டேன். எதுவும் சொல்லவில்லை என்றார்கள். அப்போ நான் எப்படி நடிப்பது?

    வேறு வழியில்லை. காட்சிக்கு ஏற்ற காஸ்ட்யூமை நானே முடிவு செய்தேன். இந்த கலர் சேலை, இந்த கலர் ஜாக்கெட், அது இந்த மாடலில் இருக்க வேண்டும். பாவாடை இந்த கலரில் வேண்டும் என்று போன் மூலம் ஐதராபாத்தில் இருந்த டிசைனரிடம் கூறுவேன்.

    இந்த காலத்தில் என்றால் வாட்ஸ் ஆப்பில் தெளிவாக டைப் செய்தும், மாடல்களை அனுப்பியும் சொல்ல முடியும். அது டிசைனருக்கும் புரியும்.

    நான் போனில் சொன்னது அவருக்கு எந்த மாதிரி புரிந்தது என்று தெரியாது. அவர் இரவோடு இரவாக தயார் செய்து விமானத்தில் அனுப்புவார். காலை 6 மணிக்கு முதல் விமானம் வரும்.

    ஒருவர் விமான நிலையத்துக்கு சென்று அதை வாங்கி வருவார். இப்படியே நான்கைந்து நாட்கள் விமானத்திலேயே வரவழைத்து சமாளித்தேன். 8 காஸ்ட்யூம்களில் ஆடினேன். 'கும்தலகிடி கும குமதா...' பாடலும் சூப்பராக அமைந்தது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த பாடல் மனசுக்கு பிடித்த பாடல். இப்போதும் விரும்பி கேட்பதுண்டு.

    இன்னொரு சுவாரஸ்யமான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×