search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    காமராஜர் செய்த விவசாயப் புரட்சி- முனைவர் கவிஞர் இரவிபாரதி
    X

    காமராஜர் செய்த விவசாயப் புரட்சி- முனைவர் கவிஞர் இரவிபாரதி

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கிளை நதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டதுதான் மணிமுத்தாறு திட்டம்.
    • பெரியார் நீர்த்தேக்கத்தில் இருந்து பிரிக்கப்படும் கூடுதல் நீரை இணைத்து, மிகுந்த பாதுகாப்போடு வைகை ஆற்றின் குறுக்கே 2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது தான் வைகை அணை திட்டம்.

    காமராஜருடைய தோற்றத்தைப் பார்த்தால் பழமையில் ஊறித் திளைப்பவரைப் போல் தோன்றும். ஆனால் புதுமைகளை வரவேற்பதிலும், அவற்றினை நடைமுறைப்படுத்துவதிலும், அவர் தயங்கியதே இல்லை.

    விவசாயம் என்பது நமது பாரம்பரியமான தொழில். மனித குலத்திற்கே உயிர்நாடியான தொழில். அந்த விவசாயம் தழைத்தால் தானே மக்கள் பசியின்றி வாழ முடியும். தமிழகத்தில் விவசாய நிலங்களுக்குப் பஞ்சமில்லை. அதற்கேற்றாற்போல தமிழகத்தில் நீர்வளம் இருந்தால் தானே விவசாயத்தைப் பெருக்க முடியும்.

    1953-ல் ஆந்திர மாநிலம் பிரிந்தபோது மிகப்பெரிய நதிகளான கிருஷ்ணாவும் கோதாவரியும் அவர்களுக்குப் போய் விட்டது. கையிலே கிடைத்தது காவிரி ஒன்றுதான். அதிலும் நீர்ப்பங்கீட்டில் நமக்கும் கர்நாடகத்திற்கும் இன்றளவும் பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் காமராஜர் அவைகளைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இருக்கவே இருக்கிறது உள்ளூர் நதிகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள். இவற்றை சீர்திருத்தி, மேம்படுத்தி விவசாயத்தை எப்படிப் பெருக்குவது என்ற சிந்தனைதான் அவர் மனதிலே ஓடிக்கொண்டிருந்தது.

    மாகாணப் பிரிவினையின்போது ஆந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 406 லட்சம் ஏக்கராகவும், சென்னை மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 385 லட்சம் ஏக்கராகவும் இருந்தது. நம்மிடமிருந்த நிலப்பரப்பில் மைசூர் (கர்நாடகா) மாகாணத்திற்கு மேலும் 25 லட்சம் ஏக்கர் பரப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால் மக்கள்தொகை எண்ணிக்கை கணக்கில் ஆந்திராவுக்கு 2.57 கோடியாகவும், தமிழகத்திற்கு 3.57 கோடியாகவும் இருந்தது.

    மக்கள் தொகைக் கணக்கில் சென்னை மாகாணம் கூடுதல் எண்ணிக்கையில் இருந்தாலும், அவ்வளவு பேருக்கும் உணவு, குடிநீர் என்று எல்லாத் தேவைகளையும் மாநில அரசு தானே வழங்கி ஆக வேண்டும். தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் அதற்கும் காமராஜர் தானே தீர்வு கண்டாக வேண்டும்.

    நிலப்பரப்பு என்று வரும்போது, ஊருக்காக ஒதுக்கப்படுகிற இடத்தையும், தரிசாகக் கிடக்கிற இடங்களையும் மற்ற உபயோகத்திற்காக ஒதுக்கப்படுகிற இடங்களையும் கழித்து விட்டுப்பார்த்தால் தமிழகத்தில் விவசாயத்திற்காக கிடைத்த இடம் 204 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே.

    அப்போதைய சென்னை மாகாணத்தின், மக்கள்தொகை 3 கோடியே 37 லட்சமாக இருந்தது. பயிர் விளைவிக்கப்படுகிற 143 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், 53 லட்சம் ஏக்கர் மட்டுமே நீர்ப்பாசன வசதி பெற்றிருந்தது. இவற்றில் 40 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகிற ஏரி, குளம், வாய்க்கால்களில் இருந்து பாசன வசதி கிடைத்தது. மீதி உள்ள 13 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, விவசாயிகளுக்குச் சொந்தமான கிணறுகளில் இருந்து நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது என்ற செய்தியை அப்போதைய அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் 2.10.1961-ல் வெளியான நவசக்தி நாளிதழில் ஒரு பேட்டியில் தெரிவித்ததை இங்கு பதிவிட்டுள்ளேன்.

    ஆக, சென்னை மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த வேண்டுமென்றால், உணவுப் பொருள் உற்பத்தியில் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்டார் காமராஜர். எனவே நீர்ப்பாசனத் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார்.

    நீர்ப்பாசனத் திட்டம் என்றால் அணைக் கட்டுக்களை உருவாக்க வேண்டும். கோடிக்கணக்கில் அதற்காக ஏராளமான நிதி தேவைப்படுகிறது. கால்வாய்கள் மூலம் நீரைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு நிதி தேவைப்படாது. எனவே எங்கெங்கு அணைக்கட்டுகள் கட்ட வேண்டும், எங்கெங்கு கால்வாய்கள் வெட்ட வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொண்டு களத்திலே இறங்கினார் காமராஜர்.

    பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திற்கு காமராஜர் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, தேக்கடி என்ற ஐந்தாறுகளையும், ஆழியாறு என்ற ஆற்றையும் இணைத்து உருவாக்கப்பட்ட உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்தில் 6 பெரிய அணைகளும், கால்வாய்களும், சிறிய அணைகளும் அடங்கி இருந்தன.

    தமிழகத்தின் ஆனைமலையில் உற்பத்தியாகும் நீர், கேரளா வழியாக அரபிக்கடலிலே போய் வீணாகச் சேருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தி நீர்ப்பாசனத்திற்கும், மின் உற்பத்திக்கும் பயன்படும் வகையில், இரண்டு மாநிலங்களும் பலன்பெறும் வகையில், கேரள அரசோடு பேசி ஓர் உடன்பாட்டினை ஏற்படுத்தினார் காமராஜர். இந்தத் திட்டம் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம் பெற்றது. இதன் மதிப்பீடு 48 கோடியாகும். இதனால் 2.40 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைத்ததுடன் 1,85,000 கிலோ வாட் மின்சாரமும் உற்பத்தியானது.

    சென்னை, கேரளா, இரண்டு மாநிலங்களின் நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திட்டத்தை 1961-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் நாளில் மிகுந்த மகிழ்ச்சியோடு பாரதப் பிரதமர் நேரு வருகை தந்து தொடங்கி வைத்தார். இத்திட்டம் கையெழுத்தானபோது கேரள முதல்வர் கோவிந்தமேனன் உட்பட அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று கைதட்டி காமராஜரைப் பாராட்டினர்.

    1948-ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது. நடுவிலே பணிகளில் தொய்வு ஏற்பட்டது. காமராஜர் ஆட்சிக்கு வந்து, கவனம் செலுத்தியதற்குப் பின்பு தான் 1958-ல் இப்பணி முடிவடைந்தது. இதன் மதிப்பீடு ரூ.10 கோடியாகும். இத்திட்டத்தின் மூலம் 1,94,000 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது. மேலும் உணவுப் பொருட்களும், பருத்தியும் உற்பத்தி செய்யப்பட்டன.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கிளை நதியான மணிமுத்தாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டதுதான் மணிமுத்தாறு திட்டம். இத்திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 1.03 லட்சம் ஏக்கர் பயிரிடப்படும் பயிர்கள் பயன்பெறும். ரூ.5.05 கோடி செலவில் மதிப்பீடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய கே.டி.கோடல்ராம் அவர்கள் காமராஜருக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டதோடு பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த செய்தியினை "காமராஜர் ஓர் வழிகாட்டி" என்ற நூலில் ஆலடி அருணா (முன்னாள் எம்.பி.) பதிவு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

    பெரியார் நீர்த்தேக்கத்தில் இருந்து பிரிக்கப்படும் கூடுதல் நீரை இணைத்து, மிகுந்த பாதுகாப்போடு வைகை ஆற்றின் குறுக்கே 2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது தான் வைகை அணை திட்டம். இத்திட்டத்தின் மூலம் மதுரை, திருமங்கலம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற்றன. 20,000 ஏக்கருக்கு மேல் பயன் பெற்றன. 1959-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான செய்தி என்னவென்றால், திட்டமிடப்பட்ட மதிப்பீட்டுத் தொகையில் 50 லட்சம் ரூபாய் மீதமாக இருந்தது தான்.

    மதுரைக்கு செல்லும்போது எல்லாம் வைகை அணைக்கட்டு வேலைகள் எப்படி நடக்கிறது என்று நேரிலே காமராஜர் சென்று பார்வையிடுவார். அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்துவார். அதன் பயனாக மிஞ்சியதுதான் இந்த 50 லட்சம் ரூபாய்.

    இந்த செய்தியை காமராஜரின் கவனத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். சற்று யோசித்த காமராஜர், வைகை அணையை சுற்றி மிகச் சிறப்பான வகையிலே, அதன் எழிலை கூட்டும் வகையிலே, பூங்கா ஒன்று அமைத்திடுங்கள். ஒரு சுற்றுலா தளமாகவே அதை ஆக்கிடுங்கள். அதன் மூலம் அரசுக்கு வருவாய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று யோசனை சொல்லி உத்தரவிட்டார்.

    அதன்படி அதிகாரிகள் மிகுந்த வேகமாக செயல்பட்டு வைகை அணையை சுற்றி அழகான பூங்காவை அங்கே உருவாக்கினர். பார்த்தவர்கள் எல்லோரும் வியந்து நிற்கும் வகையிலே அந்தப் பூங்கா உருவானது. அதை பார்வையிட பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து சாரை சாரையாக வர ஆரம்பித்தனர். இதிலே குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் திரைப்படத்துறையினர் காதல் காட்சிகளுக்கான படப்பிடிப்புகளை இங்கே அடிக்கடி நடத்தினர். காமராஜர் ஏற்கனவே சொன்னது போல அரசாங்கத்திற்கு வருமானமும் அதன் மூலம் கிடைத்தது.

    அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த திருவள்ளூர் தாலுகாவில் அடங்கியுள்ளது தான் ஆரணி ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டு முதற்கட்டமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலத் திற்கும் படிப்படியாக 13 ஆயிரத்து 600 ஏக்கருக்கும் பாசன வசதி கிடைக்குமாறு அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் விவசாயம் பெருகியது.

    கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே 2.97 கோடி மதிப்பீட்டில் ஒரு நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 7,550 டன் உணவுப் பொருட்களின் விளைச்சலுக்கு வழி வகுக்கப்பட்டது. 21,923 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இந்த திட்டம் 1958-ல் முடி வடைந்து ஆகஸ்ட் முதல் தேதியில் நடைமுறைக்கு வந்தது.

    வட ஆற்காடு மாவட்டத்தில் (தற்போது திருவண்ணாமலை மாவட்டம்) சாத்தனூர் அருகே ஓடும் தென்பெண்ணை குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கிட திட்டமிடப்பட்டது. 2.89 கோடி முதலீட்டில் ஏறக்குறைய 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

    ஒகேனக்கல்லில் இருந்து வரும் உபரி நீர் வீணாக போகாமல் கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 7,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் 1956-ல் தொடங்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு 1957-ல் பயன்பாட்டுக்கு வந்தது.

    மேட்டூர் கால்வாய் திட்டம் ஒன்று பன்னோக்கு பயனுறும் வகையிலே உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள் பயன்பெறும் வகையிலே இந்த திட்டம் 5.45 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டது.

    மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு அதற்கு காவிரி கழிமுக வடிகால் திட்டம் என்று பெயரிடப்பட்டு பல நீர் கால்வாய்களை இத்துடன் கொண்டு வந்து இணைக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு 3.8 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு இவைகள் உருவாக்கப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை பயன்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டது. ஒரு கோடியே 57 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலம் 24,114 ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெற்றது.

    காவிரியின் மேல் அணைக்கட்டில் இருந்து இருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு, லால்குடி உடையார் பாளையம் தாலுகா வழியே இது அமைக்கப்பட்டது. அதனால் அப்பகுதி விவசாயம் தழைத்தது.

    திண்டிவனம் அருகே உள்ள வீடூர் கிராமத்தில் 1958-ல் இந்த வீடூர் அணைக்கட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. அப்படி பாசன வசதி பெற்ற கிராமங்களில் புதுவை மாநிலத்தில் உள்ள 1000 ஏக்கர் நிலமும் இதிலே அடங்கும்.

    புதிய மேல்நிலைக் கால்வாய்த் திட்டம் ஒன்று 86 மைல் நீளம் கொண்ட அளவிலே வெட்டப்பட்டு 8,622 ஏக்கர் நிலங்கள் திருச்சி மாவட்டத்திலே பயன் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொடையாறுப் பகுதியில் வாய்க்கால்களை மறுசீரமைப்புச் செய்து 16 லட்சம் செலவிலே 2.92 லட்சம் ஏக்கர் பலன் பெறும் வகையிலே, ஏரிகளைப் புதுப்பிக்கும் வேலைகள் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 2-வது கட்டமாக கிட்டத்தட்ட 41 லட்சம் செலவிலே 9,200 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் வகையிலே உருவாக்கப்பட்டன.

    இவை போக இன்னும் பல ஆறுகள், குளங்கள் கண்மாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு விவசாயம் தழைக்கும் வகையிலே, அல்லும் பகலும் சிந்தித்துப் பாடுபட்டார் காமராஜர்.

    இப்படியெல்லாமா? காமராஜர் தமிழகத்தின் பாசனத்தை உயர்த்துவதற்குப் பாடுபட்டார் என்பது இக்கால இளைஞர்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் 100 சதவீதம் உண்மையான நிகழ்வுகளாகும். இவையெல்லாம் இன்றும் நடைமுறையில் நமக்குப் பலன் கொடுத்து பயணித்து வருகிறது. நம்மை வாழ வைத்து வரும் திட்டங்களாகும். ஒரு மனிதன் மன உறுதியுடன் செயல்பட்டால், உலகத்தையே தனது விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். சாதித்துக் காட்டலாம் என்ற "கோதே" என்ற அறிஞரின் பொன்மொழிதான் காமராஜரைப் பொறுத்தவரை நினைவுக்கு வருகிறது.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×