என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சர்வமும் சக்தி மயம்- சொல்லும் பொருளுமாக விளங்கும் சுந்தரநாயகி
- அம்பிகைக்கு யாழின்மொழியாள், வீணாவாத விதூஷிணி, வேதநாயகி போன்ற திருநாமங்களும் உள்ளன.
- சக்தி பீடங்களில், இது சுந்தரி பீடம். சொல் என்பது எவ்வாறு உணரப்படவேண்டியதோ, அது போன்றே ‘அழகு’ அல்லது ‘சௌந்தர்யம்’ என்பதும் உணரப்படவேண்டியதாகும்.
சொல் ஒன்றைச் சொல்கிறோம்; அந்தச் சொல்லுக்குப் பொருளும், தொனியும், பெருமையும், மேன்மையும் எங்கேயிருந்து வருகின்றன? சொல்லுக்குள்ளேயிருந்துதானே வரவேண்டும்? உண்மைதான். – இருப்பினும், பொருளும் தொனியும் இல்லையென்றால், அது சொல் இல்லை; வெற்று எழுத்துகளின் வெற்று உச்சரிப்பு. எனவேதான், ஐயனையும் அம்மையையும் வர்ணிக்கும்போது, 'சொல்லும் பொருளும் போல்' என்று பெரியோர்கள் வர்ணித்தார்கள்.
சொல்லின் பொருளும் மேன்மையுமாக இவளே திகழ்கிறாள் என்பதை விளக்குவதுபோல், அம்பிகை எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்தான் அருள்மிகு யாழைப் பழித்த மொழியாள் என்னும் திருவடிவம்.
திருமறைக்காடு என்றழைக்கப்படும் வேதாரண்யத் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மையின் திருநாமம், யாழைப் பழித்த மொழியாள் என்பதாகும். யாழும் வீணையும் இன்னிசை தருபவை; மனத்தை வருடுபவை; துயரத்தைப் போக்கி ஆறுதல் அளிப்பவை.
ஆயின், அம்மையின் மொழி, இத்தகைய இசைக்கருவிகளைக் காட்டிலும் இனிமையானது. இதனை விளக்குவதற்காக, திருமறைக்காட்டுத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சரஸ்வதி தேவியும் கரத்தில் வீணையில்லாமல் இருக்கிறாள்.
அம்பிகைக்கு யாழின்மொழியாள், வீணாவாத விதூஷிணி, வேதநாயகி போன்ற திருநாமங்களும் உள்ளன.
சாதாரணமான பேச்சையும் அன்றாட வழக்குகளையும் எடுத்துக் கொள்வோம். ஒரு சொல்லைச் சொல்லும்போது, அதன் பொருளும் தொனியும் எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் அறிவோம். ஒரே சொல்லை வெவ்வேறு தொனிகளில் கூறமுடியும்;
உச்சரிப்புகளை மாற்றினால், சொல்லின் பொருளையும் மாற்றமுடியும். எப்படியாயினும், சொல்லின் எழுத்துகளைக் காட்டிலும், அந்த எழுத்துகளின் தனி ஒலியிலும் அவற்றின் கூட்டொலியிலும் அவை தரும் பொருளிலும்தான், அந்தச் சொல்லின் பெருமையும் மேன்மையும் அடங்கியுள்ளன.
டாக்டர் சுதா சேஷய்யன்
இதனை உணர்ந்ததாலேயே, நம்முடைய முன்னோர்கள், வேதம் உள்ளிட்ட அனைத்துவகைச் சொற்களுக்கும் ஒலியும் உச்சரிப்பும் தொனியும் முக்கியம் என்றார்கள். இதனாலேயே, சிவனாரைச் சொல் என்று வர்ணித்தபோதெல்லாம், அம்பிகையின் சொல்லின் பொருள் என்றும் சொல்லின் ஆற்றல் என்றும் வர்ணித்தனர்.
சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாது. நமக்குத் தெரிந்த ஒருவரின் பெயரை உச்சரிக்கிறோம்; அவர் எதிரிலோ அருகிலோ இல்லைதான்; இருந்தாலும், அவரின் உருவம் கண்ணுக்குள்ளும் மனத்துக்குள்ளும் தோன்றுகிறது இல்லையா? ஒரு சொல்லை உரைக்கிறோம்; அந்தச் சொல் சுட்டுகிற பொருள் அல்லது செய்தி, உள்ளுக்குள் ஊசலாடுகிறது இல்லையா? எனவேதான், சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாது. ஐயனையும் அம்மையையும், சிவனையும் சக்தியையும் பிரிக்க முடியாது.
எந்தவொன்றாக இருந்தாலும், அதன் தன்மையையும் ஆற்றலையும் அதனிடமிருந்து பிரித்துவிட முடியாது என்னும் தத்துவத்தையே அருள்மிகு யாழைப் பழித்த மொழியாள் உணர்த்துகிறாள். இந்தத் திருத்தலத்தில், இப்படியொரு திருநாமத்தோடு அம்பிகை எழுந்தருள்வதற்கு என்ன காரணம்?
திருமறைக்காடு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசர், மறைக்காட்டீசர் ஆவார்; வேதநாயகர், வேதாரண்யேச்வரர், வேதபுரீசர், மறைநாதர் – அதாவது, வேதங்களால் வழிபடுபவரும் வேதப்பொருளாக விளங்குபவரும் ஆனவர். 'வித்' (கல்வி) என்னும் வேர்ச்சொல்லிலிருந்தே வேதம் என்னும் சொல் உருவானது. அங்கு இங்கு எனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை உணர்த்துபவையே வேதமும் கல்வியும் ஆகும். எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளை, சராசரியான நாம் ஒருவருக்கொருவர் அறிந்து அறிவித்து, உணர்ந்து உணர்த்துவிப்பதற்கான எழுத்து / சொல் வடிவமே வேதம். வேதத்தின் மேன்மை, அதன் எழுத்தில் மட்டுமன்று; அதன் பொருளிலும் ஆற்றலிலுமே உண்டு. எனவேதான், வேதநாயகரின் திருவாட்டி, சொல்லோடும் ஒலியோடும் தொடர்பு கொண்டவளாக எழுந்தருள்கிறாள். ஆணும் பெண்ணும், ஆண்மையும் பெண்மையும் இணைவது திருமணம்; சக்தியும் சிவமும் பிரிவில்லாதவை என்பதை உணர்த்துவது திருமணத்தன்மை; இதனாலேயே, சுவாமிக்கு இங்கே மணாளர் (மறைக்காட்டு மணாளர்) என்றொரு பெயரும் உண்டு.
நல்ல சொல்லிலே இறைவன் இலங்குவதைத் திருமூலர் சுட்டிக்காட்டுவார். மஹேச்வரனுக்குப் பூஜை செய்யும் வழிமுறைகளில், வேறேதும் இயலவில்லையென்றாலும், பிறருக்கு நல்ல சொல் சொன்னால் அதுவே போதும் என்பார் – யாவர்க்குமாம் பிறர்க்கு இன்சொல் அதாமே!
அருள்மிகு யாழைப் பழித்த மொழியாள், இருவகைகளில் நமக்கு வழிகாட்டுகிறாள். முதல் வழி – அன்றாட வாழ்வின் லௌகீக வழி. குடும்பங்களிலும் சரி – சமூகத்திலும் சரி, உறவுகளிலும் சரி – நட்புகளிலும் சரி, சிக்கல்கள் பலவற்றுக்கான காரணங்கள், கடுஞ்சொல்லும் இனிமையற்ற பேச்சும் எனலாம். மாறாக, முன்பின் தெரியாதவர்களிடம்கூட, இன்சொல் ஒன்றைச் சொல்வதால், மதிப்பும் மரியாதையும் கூடுவதைக் காணலாம்.
ஏதேனும் ஒன்றைச் செய்வதற்காகப் புறப்படும் ஒருவரிடம், அந்தச் செயலுக்கு நம்மால் உதவ முடியவில்லை என்றாலும், ஊக்கம் தரும் சொல்லைச் சொல்லி அனுப்பினால், அதையே வெற்றிக்கான காரணமாக அவர் கருதுவார்.
லௌகீகம் இப்படியென்றால், ஆன்மீகமும் இதுவே. பிறரிடம் இனிய சொற்களைக் கூறும்போது, அதுவே, அவர்களுக்குள் இருக்கும் இறைமைக்கு நாம் செய்யும் வழிபாடு.
இந்த இரண்டு பாதங்களையும், அம்பிகை யாழைப் பழித்த மொழியாள், தன்னுடைய திருநாமத்தின் வாயிலாகவே நமக்குப் பயிற்றுவிக்கிறாள்.
சக்தி பீடங்களில், இது சுந்தரி பீடம். சொல் என்பது எவ்வாறு உணரப்படவேண்டியதோ, அது போன்றே 'அழகு' அல்லது 'சௌந்தர்யம்' என்பதும் உணரப்படவேண்டியதாகும். இதைச் சுட்டும்படியாகவோ என்னவோ, சுந்தரி பீடத்தில் யாழினியாளாக அம்பிகை எழுந்தருளியிருக்கிறாள்.
இவள், சகல சௌபாக்கியங்களும் அருள்பவள். இறைவனின் ஆற்றல் சக்தியாகவே எழுந்தருளியிருப்பதால், தடைப்பட்ட திருமணங்களும் இவள் அருளால் மீண்டும் கைகூடும்; இவளின் கடைக்கோடி பார்வை பட்டாலே பிள்ளைப்பேறு கிட்டும்.
நல்ல வாக்கையும் நல்ல செயலையும் நல்ல மனத்தையும் நல்குகிற அருள்மிகு யாழைப் பழித்த மொழியாளை வணங்குவோம்; வளமையெல்லாம் பெறுவோம்.
தொடர்புக்கு:-
sesh2525@gmail.com






