என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தோஷங்கள் நீக்கும் ஆலய வழிபாடு: தோஷங்களின் வகைகள்
- ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது என்ற நிலை வரும். அப்போதுதான் பரிகாரத்தை பற்றி நினைத்துப் பார்ப்பார்கள்.
- கிரக அமைப்புகள் எந்த இடங்களில் அமர்ந்து இருக்கின்றன என்பதை பொறுத்துதான் தோஷம் உள்ளதா? என்பதை ஜோதிடர்கள் கணிப்பார்கள்.
நீங்களும், நானும் சந்தோஷமாக இருக்க முடியாவிட்டால் ஏதோ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம். தோஷம் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயமாக சந்தோஷமாக இருக்கவே முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தோஷம் இருக்கும். அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களுக்கு ஏற்ப தோஷம் ஏற்பட்டு அவை தற்போதைய வாழ்க்கையில் கஷ்டங்களை கொடுப்பதாக பொதுவாக சொல்லப்படுகிறது.
ஒருவரது வாழ்க்கை நடைமுறைகளை வைத்தே அவருக்கு எந்த மாதிரியான தோஷம் ஏற்பட்டு இருக்கும் என்பதை மூதாதையர்கள் மிக மிக எளிதாக கண்டுபிடித்து சொல்லி விடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அது மட்டுமின்றி அந்த தோஷத்துக்குரிய பரிகாரத்தையும் வரையறுத்தனர்.
பெரும்பாலும் வாழ்க்கையில் கஷ்டம் வந்தால் அது நம் தலைவிதி என்றுதான் பலரும் கடந்து சென்று விடுகிறார்கள். கஷ்டத்தை தீர்க்க எவ்வளவுதான் போராடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது என்ற நிலை வரும். அப்போதுதான் பரிகாரத்தை பற்றி நினைத்துப் பார்ப்பார்கள்.
அதற்கு பதில் கஷ்டம் உருவாகுகிறது என்றால் உடனே அதற்கு பரிகாரம் தேடிவிட்டால் அந்த கஷ்டத்தை உடைத்தெறிந்து விட்டு நிம்மதியாக வாழ முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தோஷங்களை விரட்டும் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு முதலில் நமக்கு என்ன தோஷம் இருக்கிறது என்று தெரிய வேண்டும். அதை எப்படி தெரிந்து கொள்வது? ஜாதகம்தான் அதை நமக்கு துல்லியமாக காட்டும்.
திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, தொழில், பதவி உயர்வு, நிம்மதி, குடும்ப வாழ்க்கை, வெளிநாட்டு பயணம் என்று எதை எடுத்தாலும் அது தொடர்பான தோஷங்களை ஜாதகத்தை வைத்து கண்டுபிடித்து விட முடியும். அது மட்டுமின்றி அந்த தோஷத்துக்கு ஏற்ப பரிகாரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
ஜாதக அடிப்படையில் பார்த்தால் பல வகையான தோஷங்கள் தெரிந்து விடும். ஒருவருடைய ஜாதகம் எவ்வளவுதான் சுத்தமான, யோகமான ஜாதகமாக இருந்தாலும் தோஷம் வந்து விட்டால் அந்த ஜாதகக்காரருக்கு கிடைக்க வேண்டிய உரிய பலன்கள் கிடைக்காமல் போய் விடும். எனவே தோஷத்தை முதலில் கணித்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
ஜாதகத்தை பார்த்தால் 12 கட்டம், 12 ராசி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கட்டங்களில் லக்னம், சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று எழுதப்பட்டு இருக்கும். இந்த கிரக அமைப்புகள் எந்த இடங்களில் அமர்ந்து இருக்கின்றன என்பதை பொறுத்துதான் தோஷம் உள்ளதா? என்பதை ஜோதிடர்கள் கணிப்பார்கள்.
ஜாதகத்தில் ராசி கட்டத்தில் உள்ள 12 கட்டங்களும் 4 விதமாக பிரிக்கப்படும். அதாவது தர்மம், கர்மம், காமம், மோட்சம் என்று 4 வகையாக பிரிக்கப்படும். மேஷம், சிம்மம், தனுசு 3 ராசிகளும் தர்மத்தை குறிக்கும். ரிஷபம், கன்னி, மகரம் 3 ராசிகளும் கர்மத்தை குறிக்கும். மிதுனம், துலாம், கும்பம் 3 ராசிகளும் காமத்தை குறிக்கும். கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய 3 ராசிகளும் மோட்சத்தை குறிக்கும்.
இந்த ராசிகள் அடிப்படையில்தான் தோஷங்கள் கண்டுபிடிக்கப்படும். தோஷத்தில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் ஜோதிடர்கள் திருமணம் தாமதம் ஆகும்போது விதவிதமான தோஷங்களை சொல்வார்கள்.
செவ்வாய் தோஷம்
ராகு-கேது தோஷம்
மாங்கல்ய தோஷம்
சூரிய தோஷம்
களத்ர தோஷம்
சர்ப தோஷம், காலசர்ப தோஷம் என்றெல்லாம் சொல்வார்கள்.
இந்த தோஷங்களுக்கு ஏற்ப என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆலய வழிபாடுதான் இந்த தோஷங்களை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக இருக்கும். பரிகாரங்கள் செய்ய செய்ய நிச்சயம் பலன் கிடைக்கும்.
இந்த தோஷங்கள் தவிர பித்ரு தோஷம், புத்திர தோஷம், பிரம்மகத்தி தோஷம், நாக தோஷம், நவக்கிரக தோஷம், சகட தோஷம் என்றெல்லாம் தோஷங்கள் இருக்கின்றன. இத்தகைய தோஷங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது தாமதமாகும். அல்லது குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.
மூதாதையர்களை மறந்து விட்டாலோ அல்லது அவர்களுக்கு உரிய தர்பணங்கள் செய்யாவிட்டாலோ பித்ரு தோஷம் ஏற்பட்டு விடும். அவற்றை நிவர்த்தி செய்ய உரிய பரிகாரங்கள் இருக்கின்றன. இதே போன்று மற்ற தோஷங்களின் பரிகாரங்களையும் நாம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
ஆனால் சில தோஷங்களை சிலர் வாழ்க்கையில் கேள்விபட்டே இருக்க மாட்டார்கள். வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், பிரணகால தோஷம் என்ற பெயர்களில் எல்லாம்கூட தோஷங்கள் இருக்கின்றன. குடும்ப உறவுகளால் வரும் தோஷங்கள் இவை. இந்த தோஷங்களை அடித்து விரட்டவும் பரிகாரங்கள் இருக்கின்றன.
அது போல குடும்ப தோஷம் என்று கூட ஒரு தோஷம் இருக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் 2-ம் இடம் குடும்ப ஸ்தானமாகும். 2-ம் இடத்தில் ராகு, 8-ல் கேது இருந்தால் மிகப்பெரிய குடும்ப தோஷம் என்பார்கள். இப்படிதான் வாக்கு தோஷம் என்று ஒரு தோஷம் இருக்கிறது.
மனை தோஷம், பிரேத சாபம், குல தெய்வ தோஷம், மாந்தி தோஷம் ஆகியவையும் முக்கியமானவையாகும். இந்த தோஷங்கள் ஏற்பட்டால் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது. தினம் தினம் போராட்டமாகத்தான் இருக்கும்.
ஒவ்வொரு வகை தோஷமும் ஒவ்வொரு வகையான துன்பத்தை ஏற்படுத்தும். எனவே தோஷங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டியது அவசியமாகும். சில தோஷங்கள் நுட்பமானவையாக இருக்கும். அதாவது கிரக அமைப்புகளின் இடங்களுக்கு ஏற்ப அந்த தோஷங்கள் வலுவாக அமைந்து விடும்.
அதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அதை விட முக்கியம் அந்த தோஷத்தை விரட்டுவதற்கு நூறு சதவீதம் சரியான பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதுதான்.
பெரும்பாலும் பரிகாரங்களுக்கு ஆலய வழிபாடுதான் முதன்மையாக உள்ளது. ஆலயங்களுக்கு சென்று உரிய வகையில் பரிகாரம் செய்தால் அல்லது பிரார்த்தனை செய்தால் தோஷத்தை விரட்ட முடியும்.
சில தோஷங்கள் நோய்களை தந்து கொண்டே இருக்கும். எல்லா வகை செல்வம் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாதபடி உடல்நலம் பாடாய்படுத்தி விடும். அந்த தோஷத்தை கண்டறிந்து பரிகாரம் செய்தால் வாழ்க்கையை இன்பமாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஜாதக அமைப்புகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் தோஷங்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யும் பரிகாரங்களுக்காகவே தமிழகம் முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. எல்லா ஆலயங்களிலும் எல்லா வித பரிகார வழிபாடுகளையும் செய்து விட முடியாது.
ஒவ்வொரு தோஷத்துக்கும் என்று குறிப்பிட்ட ஒவ்வொரு ஆலயங்கள் இருக்கின்றன. அதை சரியாக தேர்வு செய்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்கள் தோஷத்தை மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரிடம் உள்ள தோஷங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அதுபற்றிதான் இனி வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை பார்க்க போகிறோம்.
பொதுவாக தோஷம் என்றவுடன் எல்லோருடைய மனதிலும் தோன்றுவது செவ்வாய் தோஷம்தான்.
செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி செவ்வாய் தோஷம் காரிய தடைகளை செய்து கொண்டே இருக்கும் என்றும் சொல்வதுண்டு. அதனால்தான் செவ்வாய் தோஷம் மிக முக்கியமான தோஷமாக கருதப்படுகிறது.
செவ்வாய் தோஷத்தை எப்படி கண்டு பிடிப்பது? எத்தகைய பரிகாரங்கள் மூலம் அந்த தோஷத்தை விரட்டுவது என்பதை அடுத்த வாரம் காணலாம்.






