என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நிதியா? நிம்மதியா?
    X

    நிதியா? நிம்மதியா?

    • கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என நாம் வகுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் நிதி ஆதாரம் அவசியம் தேவைப்படும்.
    • நாம் சம்பாதிக்கும் பணம் எப்போதும் நிலையாக நம்மிடம் மட்டுமே தங்கிவிடப் போவதுமில்லை.

    வாழ்வில் தேடிப் பெற வேண்டியது நிதியா? நிம்மதியா? என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாகக் காத்திருக்கும் வாசகர்களே வணக்கம்!

    வாழ்க்கையில் நிதியோடு இருப்பது என்பது, காசு, பணம், நில, புலன், நகை, வீடு, வாகனம் எனச் சகல நிலைகளிலும் வசதியோடு இருப்பது என்று பொருள். இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால், சேர்த்து வைத்த சொத்துப் பத்துக்களோடு நிம்மதியாகவும் அமைதியாகவும் சுகமாகவும் வாழ்வதும் ஆகும். நிம்மதியாக இருப்பது என்பது எந்தவிதமான ஆசைத் தேவைகளோ, பரபரப்புத் துன்பங்களோ, பொருள் பணம் குறித்த பேராசைகளோ இல்லாமல் நிம்மதியாக இருப்பது ஆகும். இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால், எந்த விதமான மருந்து மாத்திரை, உடல் பிரயத்தனமும் இன்றி, எந்த இடத்தில் படுத்தாலும் எந்த நேரத்தில் படுத்தாலும், படுத்த அடுத்த வினாடியே ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றுவிடுவது; கனவுகளற்று உறங்குவது; விழித்து எழுந்தவுடன் எந்தவிதமான பரபரப்புமின்றி அன்றாடக் கடமைகளில் முழு விருப்பத்தோடு ஈடுபடத் தொடங்குவதுமாகும்.

    நம்முடைய வாழ்வியல் முயற்சிகள் எல்லாமும், எந்த விதமான சிக்கலும் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகவும் சுகமாகவும் வாழ்க்கை அமைவதை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. காசில்லாமல் நமக்கு நிலைத்த நிம்மதி வாய்ப்பதில்லை என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிம்மதியை நோக்கிச் செல்கிறார்களோ இல்லையோ, அதைக் கொண்டு வருவதற்கு உதவுவதாகக் கருதப்படக்கூடிய நிதியைத் தேடி நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு செல்வந்தர் இருந்தார்; பெரும் பணக்காரர்; தங்கள் குடும்பத்தில், தான் மட்டும் வசதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்தால் போதாது; எல்லோரும் சொல்வது போல, அடுத்த ஒரு தலைமுறைக்காக மட்டுமல்லாது அடுத்து வரப்போகிற ஏழு தலைமுறையும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று அயராது பாடுபட்டார். விழித்திருக்கிற நேரமெல்லாம் நிதியை ஈட்டுகின்ற நேரமென்கிற அளவுக்கு அவரது உழைப்பின் கால அட்டவணை நீட்சி பெற்றிருந்தது. மாளிகை போன்ற வீடு. வங்கிகள் தோன்றாத காலம்; அதனால் தன்னிடமிருந்த காசு, பணம், நகை எல்லாவற்றையும் வீட்டின் அறைகளில் பத்திரமாகப் போட்டுப் பூட்டிவைக்கத் தொடங்கினர். அன்றாடம் வணிகம் முடித்து இரவு வீடு திரும்பியதும், அன்று கிடைத்த நிதி வருமானத்தையும் சேர்த்து, எவ்வளவு சொத்துக் கையிருப்புச் சேர்ந்துள்ளது என்பதையும் கணக்குப் பார்த்து, ஒரு தனிப் பேரேட்டில் குறித்துவைக்கவும் செய்வார்.

    அன்றொரு நாள் நண்பகல் உணவு உண்பதற்காக தன் வீட்டிற்கு வந்தார் செல்வந்தர். வருகின்ற வழியெங்கும் பசிகுறித்த சிந்தனை இல்லை; 'இதுவரை நாம் சேர்த்து வைத்திருக்கிற சொத்துக்களைக் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஆறு தலைமுறைக்குத் தாங்கும்; ஆறு தலைமுறை மக்கள் எல்லோரும் எந்தவிதமான உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே வசதியாக வாழவும், சாப்பிடவும் தேவையான நிதி ஆதாரங்களைச் சேர்த்து விட்டோம்; இனி ஏழாவது தலைமுறைக்கு வேண்டிய நிதியை எப்படிச் சம்பாதிப்பது?' என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் வரவேற்ற மனைவி, 'என்ன சிந்தனை பலமாக இருக்கிறது?' என்று கேட்டுவிட்டு," சரி, இந்தாருங்கள்; இந்தக் கேரியரில், ஒருநபருக்குத் தேவையான சாப்பாடு, சாம்பார், கறிகாய்கள் அனைத்தும் உள்ளன; நம் வீட்டிற்கு எதிர்த்தாற்போல உள்ள ஆசிரமத்திற்குப் புதிதாக ஒரு சாமியார் வந்திருக்கிறார்; நண்பகல் உணவாக இதை அவருக்குக் கொடுத்துவிட்டு வாருங்கள்' என்று கொடுத்தார்.

    புண்ணிய காரியம்தானே! என்று யோசித்துக் கொண்டே எதிரே உள்ள மடத்திற்குச் சென்று, துறவியைப் பார்த்துக் கேரியரைத் தந்தார் செல்வந்தர். துறவி, "என்ன இது?" கேட்டார். "சுவாமி! உங்களுக்கான இன்றைய மதியச் சாப்பாடு!" என்று பணிவாகச் சொன்னார் செல்வந்தர். "ஏற்கனவே இப்போதுதானே சாப்பிட்டு முடித்தேன். எனவே இப்போதைக்கு இந்த உணவு எனக்குத் தேவைப்படாதே!" தீர்க்கமாகச் சொன்னார் செல்வந்தர். " அப்படியானால், கேரியர் இங்கேயே இருக்கட்டும், உணவை இரவு சாப்பிடுவதற்காக வைத்துக் கொள்ளலாம்; கெட்டுப் போகாது" என்றார். முகம் நிறைந்த ஆச்சரியத்தோடு துறவி செல்வந்தரைப் பார்த்துக் கேட்டார், "இரவு உணவா? இரவு வருவதற்கு இன்னும் ஆறேழு மணிநேரம் இருக்கிறதே! அப்போது எனக்குத் தேவைப்படப் போகிற இரவு உணவிற்காக நான் ஏன் இப்போதிருந்தே கவலைப்பட வேண்டும்?: எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கின்றன. இந்தக் கேரியர் உணவை இப்போது எடுத்துச் செல்லுங்கள்!; இரவு வரும்போது அப்போதைக்கு யோசித்துக் கொள்வோம்!."

    துறவியின் உறுதியான வாசகங்களைக் கேட்ட செல்வந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது;' அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லை என்றாலும், அந்த உணவைப்பற்றி நான் ஏன் இப்போதே யோசிக்க வேண்டும்? என்று நிம்மதியாக இருக்கிற அந்தத் துறவி எங்கே?. ஆறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்து வைத்திருந்தாலும் அது போதாது என்று ஏழாவது தலமுறைக்கும் நிதி தேடி நிம்மதியைத் தொலைத்துக் கொண்டிருக்கிற நாம் எங்கே?. இனிமேலாவது எஞ்சியிருக்கிற வாழ்க்கையை நிம்மதியாக வாழப் பழகுவோம் என்று கேரியர் உணவுடன் வீட்டுக்குத் திரும்பினார் செல்வந்தர்; மனைவியிடம் நடந்ததைக் கூறி, இனிமேல் வாழ்க்கையில் நிதியைத் தேடுவதைக் குறைத்து நிம்மதியாக வாழ்வது எப்படி என்று திட்டமிடத் தொடங்கினார். நிம்மதிதான் வாழ்க்கையின் ஒட்டுமொத்த இலக்காக இருந்தாலும் அதனை அடைவதற்கான வழிமுறைகளையும் வாய்ப்புகளையும் நிதியைக் கொண்டுதானே உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது?!. உலகை அருள்மயமாகவும் அன்பு மயமாகவும் ஆக்கிவிட்டால் மனிதர்களின் ஒவ்வொரு மனமும் நிம்மதிமயமாக ஆகிவிடுமல்லவா? என்று சிலர் கேட்கலாம். இந்த வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஓர் அருமையான திருக்குறளை முன்மொழியவும் செய்கிறார் திருவள்ளுவர்

    "அருளென்னும் அன்பின் குழவி பொருளென்னும்

    செவிலியால் உண்டு"

    அன்பு வழியாக அருள் என்னும் பக்திப்பயிரைச் செழிக்கச் செய்து, ஆன்மீகத்தை வளர்ப்பதற்குக்கூடப், பொருள் என்னும் செல்வத் தாயின் அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்படுவதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். மேலும் " செய்க பொருளை!" என்று, எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் பணத்தை விளைவிக்க வேண்டும் என்று உறுதிபட ஊக்கமும் படுத்துகிறார்.

    நிதி நியாயமான வழிகளில் ஈட்டப்படுமேயானால், அதனைக்கொண்டு நமக்குத் தேவைப்படும் நிம்மதி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அடிக்கடி நலமின்றிப்போகும் உடலைத் தொய்வின்றி நலமாக்கிக் கொள்ளவும் நிதியாதாரம் முக்கியம்; நமக்கு வேண்டிய நியாயமான வாழ்க்கை வசதிகளை உருவாக்கிக்கொள்வதற்கும் அடிப்படையில் பணம் தேவை; உண்டு மகிழ, கண்டு மகிழ, களித்து மகிழ, ஏன் நிம்மதியாக உறங்கி மகிழ்வதற்கும்கூட பணத்தின் ஆதார உறுதி அவசியம் தேவை. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என நாம் வகுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் நிதி ஆதாரம் அவசியம் தேவைப்படும், நம்முடைய இலக்குகளை எந்தவிதமான தடையுமின்றி எட்டிப் பிடிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது. திட்டமிட அறிவும், செயல்படுத்த உடல் உழைப்பும் இருந்தாலும், முதலீடு செய்வதற்கு நிச்சயம் பணம் அவசியம். எனவே நிதிதேடுவதும் இன்றியமையாக் குறிக்கோள்களில் ஒன்றுதான். பணம் தேடுவதும் சேர்த்துவைப்பதும், நமக்கும் நம் வருங்கால சந்ததிக்கும் ஒரு நிலைத்த பாதுகாப்பு உணர்வை நல்குகிறது.

    உலகில் இன்பத்தின் உச்ச நுட்பத்தை விளக்கிக் காட்ட நினைத்த திருவள்ளுவர், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், வீட்டில் வாழ வேண்டும்! அதுவும் சொந்த வீட்டில் வாழ வேண்டும்! அப்படிச் சொந்த வீட்டில் வாழ்ந்தாலும், யாருடைய தயவுமின்றிச் சொந்தச் சம்பாத்தியத்தில் சோறாக்கிச் சாப்பிட வேண்டும் என்கிறார். " தம் இல் இருந்து தமது பாத்து உண்டற்றால்" என்பது வள்ளுவநெறி.

    சொந்தமாகக் கட்டியவீடு, சொந்த சம்பாத்தியத்தில் உணவு ஆகிய இரண்டு முக்கியமான இன்ப மகிழ்ச்சி நிம்மதிகளையும் அடைவதற்கு அவசியம் தேவைப்படுவது நிதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?. நிதியைக் கொண்டு இல்லத்தைக் கட்டிவிடலாம்; ஆனால் அந்த நிதியினால் மட்டுமே நிம்மதியான உறக்கத்தையும் தரமான வாழ்க்கையையும் வாங்கி விட முடியுமா?. நிதி கொண்டு ஆரோக்கியமான வசதியான உணவுப் பொருள்களை வாங்கிச் சுவையாகச் சமைத்தும் விடலாம்; ஆனால் பசித்த நேரத்தில் சரியாக ஒருவாய் உணவை உண்டு நிம்மதியாகத் திருப்தி அடைய முடியுமா?.

    முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

    பணத்தை ஈட்டுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன; நாம் சம்பாதிக்கும் பணம் எப்போதும் நிலையாக நம்மிடம் மட்டுமே தங்கிவிடப் போவதுமில்லை; சில நிமிடங்களோ அல்லது சில வருடங்களோ நம்மிடம் தங்கியிருந்துவிட்டுப் பிறகு சென்றுவிடும் குணம் உடையது செல்வம். அது நம்மோடு தங்கியிருக்கும் காலங்களில் நமக்கு நன்மையும் நிகழலாம்; தீமையும் விளையலாம்; செல்வத்தை நாம் எவ்வாறு கையாளுகிறோம்; நிர்வகிக்கிறோம் என்பதைப் பொறுத்தே பலாபலன்கள் விளைகின்றன. ஆக, நிச்சயமாக நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு துளிச் செல்வமும் நம்மை விட்டுப் பிரிந்து செல்லவே போகின்றன. போகின்ற செல்வம், பிரிவதற்குள் சில நன்மைகளைச் செய்துவிட்டுச் செல்ல வேண்டுமென்றால் நாம் சம்பாதிக்கும் வழிமுறை நேர்மை நெறியினதாக இருக்க வேண்டும்.

    அடுத்தவர்களை அழவைத்து, அவர்களின் வாயிலும் வயிற்றிலும் அடித்து நாம் செல்வம் சம்பாதித்தால், அந்தச் செல்வம் நம்மையும் அதே மாதிரி அழுது புலம்ப வைத்துவிட்டு, நம்மைவிட்டுப் பிரிந்து போய் விடும். "அழக் கொண்ட எல்லாம் அழப் போம்!" என்பது வள்ளுவ வாக்கு. பணம் ஈட்டுவது சிறுகச் சிறுக எறும்பு சேமிப்பதுபோல தாமத கதியில் இருந்தாலும், அது நியாய வழிப்பட்டதாக இருக்கும் பட்சத்தில், நீண்டகாலம் நம்மோடு இருந்து, நமக்கும் நம்மைச் சார்ந்திருக்கும் மற்றவருக்கும் நிலைத்த பலன்களைத் தந்து விட்டே செல்லும்.

    நிம்மதி என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் நிதியை மட்டுமே சார்ந்திருப்பதில்லை என்றாலும், நிலைத்த நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு நியாய வழியில் ஈட்டிய நிதியும் ஒத்தாசையாக இருக்க வாய்ப்புண்டு. எவ்வளவு சொத்துகளுக்கு நாம் அதிபதி? என்பதைவிட எத்தனை சொந்தங்களுக்கு நாம் அதிபதி ! என்பதில் நிம்மதி கூடு கட்டி வாழ்கிறது; பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுபற்றிய ஆசையோ தேடலோ இல்லாமல் வாழக் கற்றுக்கொண்டால், நிம்மதியும் நாம் தேடிப்போகாமல், நம் உடனேயே அமைதியுடன் குடியிருக்கும்.

    தொடர்புக்கு - 94431 90098

    Next Story
    ×