என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சனிப் பெயர்ச்சி சனி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்
    X

    சனிப் பெயர்ச்சி சனி தோஷம் நீக்கும் பரிகாரங்கள்

    • அசைவ உணவுகள் உண்பதால் செரிமான சக்தி குறைந்து மனக்குழப்பம் அதிகமாகும்.
    • தினமும் காலையில் அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி செய்வது சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வது புத்துணர்வை ஏற்படுத்தும்.

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

    சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம்

    வாழ இன்னருள் தா தா

    நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15ம் நாள், சனிக்கிழமை 29-03-2025 அன்று இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3ம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4ம் பாதத்திற்கு பெயர்ச்சி யாகிறார். தனது 3ம் பார்வையால் கால புருஷ 2ம்மிடமான ரிஷப ராசியையும், 7ம் பார்வையால் கால புருஷ 6ம்மிடமான கன்னி ராசியையும்,10ம் பார்வையால் கால புருஷ 9ம்மிடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.

    வருட கிரகங்களில் சனி கிரக பெயர்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஒரு ராசியில் அதிக வருடம் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் சனி பகவான் என்பதால் சனிப்பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்போது கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா? என்ற கேள்வி உள்ளது இயல்பு.

    ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அது அவரவர்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தை அமையும். இந்த ஜென்மத்தில் ஜாதகர் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான்.

    ஒருவர் எந்த மனத்தாங்கலும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும் கோச்சாரத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள் அதே நேரத்தில் சதா சர்வ காலமும் நிலையான தொழில் உத்தியோகம் நிம்மதியான வாழ்க்கையில் இல்லாமல் மன நிம்மதியாக இருந்தால் சுய ஜாதகத்தில் கோச்சாரத்திலும் சனி பகவானின் தாக்கம் உள்ளது என்று பொருள். எப்பொழுதுமே யாராக இருந்தாலும்

    ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறு சிறு மனவேதனை படக்கூடிய சம்பவங்கள் நடந்து தீரும் அப்பொழுது ஆறுதலாக நிழலாக இருப்பது பரிகாரங்களே. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அடுத்த இரண்டரை வருடத்திற்கு அனைவரும் சுகமாக வாழ இங்கே சில எளிய பரிகார முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி சிறப்புடன் வாழ நல்வாழ்த்துகள்.

    உளவியல் ரீதியான பரிகாரங்கள்

    ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்வில் சில எளிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க பெரும்பான்மையான நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும்.

    தினமும் காலையில் எழுந்தவுடன் நல்ல தரமான மூலிகைகளை கொண்டு பல் துலக்க வேண்டும். வெது வெதுப்பான தண்ணீர் குறைந்தது 1 டம்ளர் குடிக்க வேண்டும். பின் உடல் கழிவுகளை நீக்க வேண்டும். உடல் கழிவுகளை வெளியேற்றாவிட்டால் மன அழுத்தம் அதிகமாகும்.

    குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.

    அவரவர் குல சம்பிரதாயப்படி இஷ்ட குலதெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும். தீராத தீர்க்க முடியாத பிரச்சினைகளை பிரபஞ்ச சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும்.

    தினமும் வீட்டில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹிருதயம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும். லலிதா சஹஸ்ரநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்க அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். எதிர்வினைகளின் பாதிப்பு இருக்காது. தினமும் அன்று சமைத்த புதிய உணவுகளை சாப்பிட வேண்டும். இயன்றவரை பழைய உணவுகளை தவிர்த்தல் நல்லது.

    அசைவ உணவுகள் உண்பதால் செரிமான சக்தி குறைந்து மனக்குழப்பம் அதிகமாகும். ஏழரைச் சனி அஷ்டம சனி காலங்களில் அசைவ உணவை தவிர்த்தால் மிகவும் நல்லது. அசைவ உணவை சாப்பிடும்போது அந்த பட்சிகள் விலங்குகளின் கர்மாவையும் கலந்து உண்ண நேரும்.

    தினமும் இயன்ற தான தர்மங்கள் பண்ண வேண்டும். குறிப்பாக பட்சிகளுக்கு விலங்குகளுக்கு உணவிடுவது வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது அதிக நன்மையை ஏற்படுத்தும்.

    வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடும்போது நல்ல அதிர்வலைகள் உடலிலும் உள்ளத்திலும் சுற்றுப்புறத்திலும் இருக்கும்.

    வீட்டில் வேலையாட்கள் சமைத்தால், வேலையாட்கள் என்ன மனநிலையில் உள்ளார்களோ அந்த உணர்வு சமைக்கும் உணவில் கலந்து விடும். அந்த உணவை சாப்பிடும்போது சமைத்தவரின் உணர்வையும் உங்களுள் சென்று உடலாலும் மனதாலும் அசவுகரியத்தை அனுபவிக்க செய்யும். நாள் முழுவதும் சமைத்தவரின் உணர்வுகளை உங்களுள் பிரதிபலிக்கும். எனவே குடும்ப உணர்வு உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிக் கொண்டே சமைக்க அன்றைய உணவு உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.

    பெண்கள் குளிக்காமல் சமைக்கக்கூடாது. மனதில் தான் சமைக்கும் இந்த உணவை தனக்கு புண்ணிய பலன்களை வழங்கும் என்று நம்பிக்கையுடன் சமைக்க குடும்ப உறவுகள் வலுப்படும். உணவு சமைத்த பாத்திரங்களை உடனே சுத்தம் செய்ய வேண்டும். அவரவர் சாப்பிட்ட தட்டுகளை அவரவரே சுத்தம் செய்ய வேண்டும்.

    வெளியில் இருந்து வீட்டுக்கு வருபவர்களுக்குக் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அதே போல் வீட்டை விட்டுவிட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். வெளியில் தண்ணீர் குடிக்காமல் தாகம் எடுக்கும்போது கொண்டு சென்ற தண்ணீரையே குடிக்க வேண்டும்.

    தினமும் இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து அதிகபட்சம் 10 மணிக்குள் படுக்கைக்கு செல்வது நல்லது. செல்போனில் தேவையில்லாத ஷார்ட்ஸ், ரீல்ஸ்கள் பார்க்கும்போது மன பாதிப்பு அதிகமாகும் அதில் பார்த்த கெட்ட சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும்.

    அதேபோல் எந்த வீட்டில் 24 மணி நேரமும் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறதோ அந்த சீரியலில் நடக்கும் சம்பவங்கள் நடந்து மன உளைச்சல் அதிகமாகும். அதே கெட்ட சம்பவங்கள் உங்கள் வீட்டில், குடும்பத்தில் எதிரொலித்து பிரச்சினையை அதிகரிக்கும்.

    தினமும் காலையில் அல்லது மாலையில் நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி செய்வது சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்வது புத்துணர்வை ஏற்படுத்தும். வீட்டில் அனைத்துப் பகுதிகளையும் குப்பை கூலங்கள் சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    உடுத்தும் ஆடை மிக சுத்தமாக இருக்க வேண்டும். தலை விரித்து போட்டுக்கொண்டு கோவிலுக்கு செல்லுதல் நிச்சயம் கூடாது. இனி ஜோதிட ரீதியான பரிகாரங்களை பார்க்கலாம். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு சிரமம் இருப்பவர்கள் சனிக்கிழமை மவுன விரதம் இருக்க வேண்டும். சனிக்கிழமை சனி ஓரைகளில் காலை 6 - 7 மதியம் 1 - 2 இரவு 8 - 9 சமைக்கக்கூடாது சாப்பிடக்கூடாது.

    நேரம் கிடைக்கும் போது சிவன் கோவில் உழவாரப்பணி செய்தால் சனி பகவான் மிகவும் நல்ல பலனைத் தருவார். சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும்.

    சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். சனிக்கிழமை சனி ஓரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    சனிக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமை பித்ருக்களை வழிபட வேண்டும். சனிக்கிழமை குளத்து மீன்களுக்கு பொரியிட வேண்டும்.

    சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் நல்லெண்ணெய் தீபம் 6 ஏற்றி முருகப் பெருமானை வழிபடவும். சனி தசா, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி காலங்களில் அசைவ உணவை தவிர்த்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும்.

    சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தேவையான மருத்துவ உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குல தெய்வ கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆல ,அரச மரங்களை நட்டு வளர்க்கவும்.

    ஜென்ம நட்சத்திரம் நாளில் அவரவர் நட்சத்திர விரட்சங்களை வழிபட எந்த தீவினையும் நெருங்காது. பவுர்ணமி நாட்களில் குலதெய்வ, சிவ வழிபாடு செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.

    நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்கள்,மேலும் குடும்பத்தில் அனைத்து விதமான உள்ள அசவுகரியங்களும் குறைய பவுர்ணமி நாட்களில் சத்ய நாராயணர் பூஜை செய்தால் உன்னதமான பலன்கள் உண்டாகும்.

    சனிக்கிழமை சூரிய ஓரையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    கோசாலையில் உள்ள பசுக்களுக்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை வழங்குவது சிறப்பானதாகும். வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

    குறிப்பிட்ட பிரார்த்தனைகள் வேண்டுதல்களை நினைத்து 48 நாள் ஒரு மண்டலம் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது நிச்சயம் நிறைவேறும்.

    நவக்கிரக வழிபாட்டு முறையில் எதிலும் வெற்றி பெறலாம். விநாயகர், ஆஞ்சநேயர் இவர்கள் இருவரையும் பூஜித்தால் சனி தோஷம் நெருங்காது சனிக்கிழமை அல்லது சனி ஓரைகளில் விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தரிசிக்க பூஜை செய்து வழிபட சகல சங்கடங்களும் விலகி நிம்மதி கூடும்.

    வயது முதிர்ந்தவர்கள் அனாதை ஆசிரமத்தில் வாழ்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் அழுக்கு உடையுடன் இருப்பவர்கள் மனநிலை பாதித்தவர்கள் இவர்களுக்கு உதவ சனி பகவானால் கெடுபலன்கள் நடக்காது.

    தொழில், உத்தியோகத் தடை விலக கடன் பிரச்சினை குறைய சனிக்கிழமைகளில் ஒரு மீட்டர் கருப்பு அல்லது நீலத்துணியில் 64 எள் பொட்டலம் செய்து தனிச் சன்னதியாக உள்ள சனி பகவானுக்கு விளக்கேற்ற வாழ்க்கை வளமாகும்.

    நல்லெண்ணெய், இரும்பு சட்டி, கைத்தடி, செருப்பு போன்றவற்றை தானம் வழங்க நன்மை பெருக்கும். புனித நீர் நிலைகளில் நீராடுதல் முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணங்கள் செய்து வருதல் சனி கிரகத்திற்கு நல்ல பிரீதியாகும்.

    உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ சகல இடையூறுகளும் தீரும். சனிக்கிழமை 21 முறை வன்னி மரத்தை வலம் வர வளமான எதிர்காலம் உருவாகும்.

    சனிப் பிரதோஷ நாட்களில் உண்ணா நோன்பு இருந்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.

    சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட சனி தோஷம் குறையும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட, சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட சகல காரியத்திலும் வெற்றி உண்டாகும்.

    மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால் தந்தை மகன் கருத்து வேறுபாடு அகலும். நளன் சரித்திரத்தை படிப்பதும், கேட்பதும் சிறப்பானது.

    வாழும் காலத்தில் ஏற்படும் இன்னல்கள் விலக பரிகாரம் மிக அவசியம். உரிய பரிகாரங்களை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.

    Next Story
    ×