என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் முன்சி
- திருமணத்திற்குப் பின்னர் கணவர் பணியாற்றிய “தி ஸ்டூடன்ட்” இதழின் நிருபராக ஆனார் வித்யா முன்சி.
- பிளிட்ஸ் பத்திரிகையில் பணியாற்றும்போது புலனாய்வுக் கட்டுரைகளை எழுதி பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார் வித்யா முன்சி.
"நான் பத்திரிகைத் துறையில் இருக்கவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெண்களின் பிரச்சினைகளுக்காக நான் குரல் கொடுத்தால் என்னைக் கண்டிக்கிறார்கள். பெண்களின் பிரச்சினைகளுக்காக பொறுப்பு ஏற்றுக்கொண்டு பெண்களே போராட முன்வராமல் இருந்தால், ஆண்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். நான் சொல்வதை நம்புங்கள், மாற்றங்களைக் காண்பதற்காக நாம் இன்னும் அவர்களைச் சார்ந்து இருந்தால், நாம் காத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்"–-வித்யா முன்சி.
பத்திரிகைத் துறை என்பதே மிகவும் சவால்கள் நிறைந்த துறை. அரசியல், சமூகம், பொருளாதாரம், நீதி, கலைகள், விளையாட்டு, வழிபாடு, இயற்கை பாதுகாப்பு, மொழி, இனம், மண்சார்ந்த உரிமைகள் என மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி நீதியையும், நேர்மையையும் வலியுறுத்த வேண்டிய, மக்களின் நியாயத்தை அனைத்து பிரிவுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய கடமையை உள்ளடக்கியது.
பொதுவாக மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து செய்திகள் சேகரித்து, அவற்றின் உண்மைத்தன்மையை அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புகளை எல்லாம் கண்டு அஞ்சாமல், உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டிய கடப்பாடு கொண்டது இந்தியாவின் நான்காம் தூணாக இருக்கும் பத்திரிகைத் துறை.
பத்திரிகைத்துறையில் குறிப்பாக நிருபராகவும், செய்தி ஆசிரியராகவும், கட்டுரைகள் வடிப்பவராகவும் பணியாற்றுவது என்பது பெரிதாக வருவாய் எல்லாம் எதிர்பார்க்காமல் வாழ்வை பணயம் வைத்துத்தான், பணியாற்றவேண்டும்.
ஆட்சி அதிகாரத்தினை தவறாக பயன்படுத்துவோர், மக்களைச் சுரண்டி கொழிக்கும் பெரும்செல்வந்தர்கள், சமூகநீதிக்கு எதிராக செயல்படுவோர், அடித்தட்டு மக்களின் நியாயதர்மங்களைப் பற்றி கவலைப்படாத அலுவலர்கள், இனம், மொழி, மதம்,சாதி அடிப்படையில் மக்களை இழிவாக நடத்தும் அகங்கர்வம் கொண்ட கூட்டம் என எல்லோரையும் சமாளித்துத்தான் உண்மை நிகழ்வுகளை எல்லோரிடமும் கொண்டு செல்லவேண்டும்.
இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறியுள்ள காலத்திலேயே எந்தத் துறையிலும் பெண்கள், ஆண்களைப் போல் இயல்பாக பணியாற்ற முடிவதில்லை எனும்போது அடிமை இந்தியாவில் ஒரு பெண், மருத்துவராகவேண்டும் என்ற தன் கனவை எல்லாம் மூட்டைகட்டிவிட்டு சவால்கள் நிறைந்த பத்திரிகைத் துறையில் பணியாற்ற முன்வந்து பேனாவை கையில் எடுத்து பல்வேறு எதிர்ப்புகளை எல்லாம் சந்தித்தாலும் விடாமல் நீதி நியாயத்தை எடுத்துரைக்க தன் வாழ்வு முழுக்க உழைத்து வந்தார் என்பது பெரிதும் போற்றுதலுக்குரியது அல்லவா!
பத்திரிகைத் துறையில் பணியாற்றுவது என்பது தனிப்பட்ட முறையிலும், குடும்பரீதியாகவும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்த சூழ்நிலையில்தான் அதனைக் கையில் எடுத்தார் ஒரு புரட்சி மங்கை.
மிகச்சிறந்த சமூகசேவகர், கல்வியாளர், எழுத்தாளர், கம்யூனிசத் தலைவர் என்று பன்முக ஆற்றல்வாய்ந்தவர். பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவர் குறிப்பாக பம்பாயில் இருந்து பல மொழிகளில் வெளிவந்த 'பிளிட்ஸ்' இதழில் பத்தாண்டுகாலம் பணியாற்றியவர். தன்னுடைய 87 வயதுவரையிலும் கூட பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு செய்திகளை படித்துவந்த நல்ல நினைவாற்றலோடும் விளங்கிய வித்யா முன்சிதான் பல சோதனைகளை சந்தித்து சாதனை படைத்த தொழில்முறை பத்திரிகையாளரான முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்கும் உரியவர் ஆவார்.
வித்யா முன்சியின் ஆரம்பகால வாழ்க்கை
குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவரான வித்யா கனுகா டிசம்பர் 5, 1919- ல் பம்பாயில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். தாயார் ஒரு சமூக ஆர்வலராக இருந்தவர். கல்வியில் சிறந்து விளங்கிய வித்யா பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தைப் பிடித்தார். பின்னர் பம்பாயில் இருந்த எல்பின்ஸ்டோன் கல்லூரியில் ஐ.எஸ்.சி. படிப்பில் சேர்ந்தார்.
உயர்கல்வியாக மருத்துவம் பயின்று டாக்டராக வேண்டும் என்று ஆசைகொண்ட வித்யா, மருத்துவக் கல்வி பயில லண்டன் செல்ல விரும்பினார். ஆனால் இளம்பெண்ணை தனியே லண்டன்வரை அனுப்பமுடியாதென வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. யாருமே எதிர்பாராத விதமாக வித்யாவின் தாய்வழி பாட்டி, "அவளிடம் தைரியம் இருக்கிறது; அவள் தந்தையிடம் பணம் இருக்கிறது. லண்டன் சென்று படித்தால் என்ன தப்பு?" என்று கேள்வி கேட்டு வித்யாவிற்கு ஆதரவு தெரிவித்தவுடன், வித்யாவின் பெற்றோர் வித்யாவை மருத்துவம் படிக்க 1938-ல் லண்டனுக்கு அனுப்பி வைத்தனர்.
நாம் நினைப்பதெல்லாம் எப்போதும் நடந்துவிடுவதில்லை அல்லவா! வித்யா லண்டன் சென்ற நேரம் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. மருத்துவப் படிப்பிற்கான முன்தேர்வுகளைக் கூட எழுத முடியவில்லை. நாடு திரும்பவும் முடியாத சூழ்நிலை. ஆனாலும் படிக்காமல் ஊருக்குத் திரும்பக்கூடாதென்ற முடிவில் துர்ஹாமின் நியுகேசில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்தார் வித்யா. அங்கேதான் அவருக்கு கம்யூனிச சித்தாந்தம் அறிமுகமானது.
கம்யூனிசத்தில் ஈடுபாடு
ஏதோ ஒரு துறையில் சேர்ந்து படித்து அதன்வழியே பணியாற்ற வேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் திருப்பம் நம்வாழ்வை மாற்றிவிடும்.
கம்யூனிச கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட வித்யா மூன்றாண்டுகளுக்கு மேல் படிப்பைத் தொடர முடியாத அளவிற்கு லண்டனிலேயே முழுநேர சமூக செயற்பாட்டாளர் ஆக மாறினார். இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த பாசிசக் கொடூரங்கள் வித்யாவை கம்யூனிசத்தில் நம்பிக்கை கொள்ளவைத்து சமூகத்தின் மேல் அக்கறை கொள்ளவைத்தது.
கல்வியா? கம்யூனிசமா? எதைத் தொடர்வது என்ற கேள்வி எழுந்தபோது வித்யா சமூகசேவைபால் ஆழமாக வேரூன்ற வேண்டுமென்றால் கம்யூனிசமே தன்வழி என்ற முடிவுக்கு வந்தார். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள இந்திய மாணவர் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளராக ஆனார். மிக விரைவாகவே 1942-ல் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனார். இங்கிலாந்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்டுகள் மற்றும் தேசியவாதிகளுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு இந்திய மக்களின் நலன்குறித்தும் பேசிவந்தார். இளம்பெண்ணான வித்யாவின் எதிர்கால வாழ்வை இச்சூழல்கள்தான் வடிவமைத்தது. பாசிசத்திற்கு எதிராக வலிமையான குரல் கொடுக்கும் பெண்ணாக மாறினார் வித்யா.
சமூகப் பணிகள்
1943-ல் வங்காளத்தில் பஞ்சம் வறட்சி ஏற்பட்டதால் மக்கள் எந்தளவிற்கு பசி, பட்டினியால் வாடினார்கள் என்பதையும், ஆங்கில அரசாங்கம் மக்களைக் காக்க பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்காததையும் வெளிப்படுத்தி தன்னுடைய தோழமைகளுடன் இணைந்து இங்கிலாந்தில் போஸ்டர் கண்காட்சியை நடத்தினார் வித்யா. அக்கண்காட்சியில் வசூலான தொகையை வங்காளத்தின் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார்.
1945 அக்டோபர்-நவம்பரில் லண்டனில் நடைபெற்ற உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தொடக்க மாநாட்டில் 67 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் இந்திய மாணவர் கூட்டமைப்பின் சார்பாக வித்யா கனுகா, கேதாயுன் பூம்லா, ஏ.எச் சேடர் ஆகியோர் பங்கேற்றனர். இந்திய மாணவர் கூட்டமைப்பின் செயலாளரான வித்யா, இம்மாநாட்டில் "உலகெங்கும் நிலையான மற்றும் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும்" என்ற குறிக்கோளை முன்னிலைப்படுத்தினார்.
சர்வதேச மகளிர் ஜனநாயகக் கூட்டமைப்பு 1945 நவம்பர் 26 முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தோற்றுவிக்கப்பட்டு நடைபெற்றது. மகளிர் சர்வதேச ஜனநாயகக் கூட்டமைப்பில் இந்திய மகிளா ஆத்மரக்ஷா சமிதியின் பொதுச் செயலாளர் இலா ரீட்டுடன் பங்கேற்றார் வித்யா. மாபெரும் மாநாடான இதில் வித்யாவும், இலாரீட்டும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இந்தியா திரும்பிய வித்யா கனுகா, "தி ஸ்டூடன்ட்" இதழின் ஆசிரியரும், புவியியலாளருமான சுனில் முன்சியை மணந்து கொண்டார்.
பத்திரிகையாளராக உருவெடுத்தல்
திருமணத்திற்குப் பின்னர் கணவர் பணியாற்றிய "தி ஸ்டூடன்ட்" இதழின் நிருபராக ஆனார் வித்யா முன்சி. இந்த இதழ் மூலமாகத்தான் வித்யா ஒரு சிறந்த பத்திரிகையாளராக வளர்ந்துவந்தார். பின்னர் கொல்கத்தாவுக்குச் சென்று 1952 முதல் 1962 வரை அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் மற்றும் புலனாய்வு பத்திரிகையில் சிறந்து விளங்கும் பம்பாய் வார இதழான பிளிட்சின் கொல்கத்தா நிருபராக இருந்தார். ஏற்கனவே அறிவாளியாக விளங்கிய வித்யா, பத்திரிகைத் துறையில் நுழைந்ததன் வாயிலாக தலைசிறந்த அறிவாளியாக வெளிப்பட்டார்.
வித்யாவின் முக்கியமான புலனாய்வு கண்டுபிடிப்புகள்
பிளிட்ஸ் பத்திரிகையில் பணியாற்றும்போது புலனாய்வுக் கட்டுரைகளை எழுதி பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார் வித்யா முன்சி. அவற்றில் முக்கியமான இரண்டு செய்திகள் உண்டு.
ஹாங்காங்கில் இருந்து வந்த விமானம் ஒன்றில் கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டு விமானிகள் தங்கத்தைக் கடத்தி வந்து கொல்கத்தாவுக்குக் கடத்துவதற்காக சுந்தரவனக் காடுகளில் உள்ள ஒரு தீவில் தங்கத்தை இறக்கினர். இவ்விவரத்தை தோண்டியெடுத்த வித்யா இந்தச் செய்தியை பிளிட்சில் வெளியிட்டார்.
அடுத்ததாக வித்யாவின் எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்து மறைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணர்ந்தது அசன்சோலில் உள்ள சினாகுரி சுரங்கப் பேரழிவு பற்றியதாகும். நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு நீதிகேட்டு வித்யா செய்திகளை வெளியிட்டார். இந்த சோக நிகழ்வைத்தான் பிரபல நாடக ஆசிரியரும் நடிகருமான உத்பல் தத், 'அங்கார்' எனும் சிலிர்க்க வைக்கும் நாடகமாக எழுதினார்.
கல்கத்தாவில் பணியாற்றும்போது வங்கமொழி சரியாகத் தெரியாதபோதும் 'சாலார் பதே' என்ற பெங்காலி பத்திரிகையின் ஆசிரியராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் வித்யா முன்சி. ஆனால் மனச்சான்றுபடி மொழி தெரியாமல் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்க முடியாது என்று கருதிய வித்யா வங்க மொழியை எழுதவும் பேசவும் கற்றுக்கொண்டார்.
சோதனைகளின் அழுத்தமும் வித்யாவின் துணிச்சலும்
ஒருமுறை அவர் கலந்துகொண்ட பேரணியில் பத்திரிகையாளர்களை போலீசார் தாக்கியதுடன், மூத்த நிருபர்களை காயப்படுத்தி அவர்களின் கேமராக்களையும் அடித்து நொறுக்கினர். வித்யாவிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியபோது, பிளிட்ஸ் மீது குற்றம்சாட்டியதை, அதனை ஏற்றுக்கொள்ளுமாறு தந்த அழுத்தத்தை வித்யாமுன்சி தீவிரமாக எதிர்த்தார். அவரது துணிச்சல் ஊடகவியலாளர்களை கவர்ந்ததுடன் வித்யா முன்சியை மேலும் பிரபலமாக்கியது.
இறுதிவரை சமூகத்தின் மீதான அக்கறை
வித்யா முன்சிக்கு 87 வயது ஆகும்போது அவரை பேட்டி எடுத்தவர்கள் அப்போதும் கூட விடாமல் வாசிக்கின்றார், வெள்ளிபோன்ற தன் முடிகளை ஒதுக்கியவாறு சமூகத்தின் மீதான தன் அக்கறையை வெளிப்படுத்தி பேசினார் என்று கூறுகின்றனர்.
2000-வது ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைமை பொறுப்பை வகித்த வித்யா முன்சி 2014 ஜூலை 8-ம் நாள் தன் வாசிப்பை நிறுத்தினார். இன்றைய ஊடகவியல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கெல்லாம் அவர் ஒரு முன்னோடியாய் விளங்கினார் என்பதில் ஐயமில்லை.
தொடர்புக்கு:
ruckki70@yahoo.co.in






