என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
தமிழை ஆட்சி மொழியாக்கிய காமராஜர்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
கல்விக்கூடங்களில் பயிற்று மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட காமராஜர் அத்தோடு நின்று விடாமல் தமிழை ஆட்சி மொழி ஆக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
1957 பொது தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அதாவது 27. 12 .1956 அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதாவை கொண்டு வர ஏற்பாடு செய்தார். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இதனை வரவேற்று ஆதரித்து நிறைவேற்றிக் கொடுத்தனர்.
மசோதாவை சமர்ப்பித்த அமைச்சர் சி.சுப்பிரமணியம் தமிழன்னை அரியாசனத்தில் அமரும் திருநாளாகவே இதனை பார்க்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட அடிமை வாழ்வு நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை ஒரு பணிப்பெண் நிலைமையிலே தான் வைத்திருந்தார்கள்... இன்று நம் தாய்மொழி அரசு மொழியாக அரியாசனத்தில் அமருகிறது... என்று குறிப்பிட்டு அவர் பேசியபோது அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்களின் அமோகமான ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
ஒரு வகையில் பார்க்கப்போனால் நாட்டிற்கு, நமக்கு கிடைத்திட்ட சுதந்திரத்தைப்போல இதுவும் நமக்கு கிடைத்திட்ட ஒரு சுதந்திர சின்னம் என்று குறிப்பிட்டு பேசி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். ஒருவனுக்கு நண்பனாக இருக்க வேண்டும் என்றால் இன்னொருவனுக்கு பகைவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது நாம் காட்டுகிற அளவற்ற அன்பினால் மற்ற மொழிகளின் மீது நமக்கு வெறுப்பில்லை என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என்று தனது கருத்தினை பதிவு செய்தார் சி.சுப்பிரமணியம்.
இந்த மசோதாவை 29.12.1956 அன்று தாக்கல் செய்து பேசி நிறைவு செய்த அந்த இனிய நிகழ்வினை முடிக்கும் போது சி.சுப்பிரமணியம் அவர்கள்
"வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு'' என்ற பாரதியாரின் பாடலை மூன்று முறை தொடர்ந்து சொல்ல உறுப்பினர்களும் அதனை உற்சாகத்தோடு வரவேற்று தொடர்ந்து முழங்கினர் என்று அந்த நாள் தினமணி நாளேடு செய்தி வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தது.
கட்சி பாகுபாடு இன்றி அனைத்து உறுப்பினர்களும் முதல்-அமைச்சர் காமராஜரையும் மசோதாவை முன்மொழிந்து பேசிய சி.சுப்பிரமணியத்தையும் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர். தமிழ்நாட்டின் சரித்திரத்தில் இந்நாள் ஒரு பொன்னால் என்று புகழ் மாலை சூட்டினர். சட்டசபை வரலாற்றிலும் இதுபோன்ற ஒரு மகிழ்வான சூழ்நிலை இதற்கு முன்னர் அமைந்ததில்லை என்று அகமகிழ்வு கொண்டனர்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் எல்லாம் தமிழ் அதிகாரப்பூர்வமாக புழங்க ஆரம்பித்தது... அரசு அதிகாரிகள், அலுவலர்கள் எல்லோரும் உற்சாகத்தோடு தமிழிலேயே தங்களது கடிதத் தொடர்புகளை நடைமுறைப்படுத்தினர். பொதுமக்களும் தங்களது மனுக்களை கோரிக்கைகளை தமிழிலேயே வழங்கினர்... உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால் கவர்மெண்ட் ஆர்டர் என்பது அரசாணை என்று எழுதப்பட்டது பையில் என்பது கோப்பு என்று எழுதப்பட்டது. இப்படி ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் தமிழ் பதம் கண்டுபிடிக்கப்பட்டு மெல்ல மெல்ல தமிழ் மொழி அரசு நிர்வாகத்தில் புழக்கத்திற்கு வர ஆரம்பித்தது.
உடனடியாக ஆட்சிமொழி அமல் குழு (Official language act implementation committee) என்ற ஒரு குழுவை காமராஜர் ஏற்படுத்தினார். அது மட்டுமல்ல ஆட்சி சொல் அகராதி ஒன்றும் தேர்ந்த மொழி வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டது அதிகாரிகளும் அலுவலர்களும் தட்டச்சு செய்பவரும் தங்கள் பணிகளில் தேவையான சொற்களைத் தேடிப்பிடித்து ஆட்சி சொல் அகராதியில் மூலமாக பொருத்தமான சொற்களை பயன்படுத்தி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உற்சாகம் தொய்வில்லாமல் பயணித்தது. 1957-58-ம் ஆண்டிற்கான வரவு செலவுக்கான நிதிநிலை அறிக்கையை அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் சட்டமன்றத்திலே சமர்ப்பித்து ஒரு புதிய வரலாற்றையே தோற்றுவித்தார். நிதிநிலை அறிக்கையில் தேவையான தமிழ் சொற்களைத் தேடிப்பிடித்து பயன்படுத்தி இடம் பெறச் செய்தார். அதற்காக மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 1959-ம் ஆண்டு "தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி கழகம்" (Tamil Development Research council) என்ற 39 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினையும் காமராஜர் ஏற்படுத்தி அந்த குழுவிலே எதிர்க்கட்சியிலே இருந்த அண்ணாவையும் நெடுஞ்செழியனையும் இடம் பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் வளர்ச்சி கழகம்" என்ற ஒரு இலாகாவை 26.1.1959 அன்று உருவாக்கி சிறந்த தமிழ் அறிஞர்களின் நூல்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டத்தையும் ஏற்படுத்தினார் காமராஜர். கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை வெளியிட முடியாத ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்கள் படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வழங்கலாம் என்றும் அதனை சரிபார்த்து "தமிழ் வளர்ச்சி கழகம்" வெளியிடும் என்ற அறிவிப்பினையும் வெளியிட்டார் காமராஜர் . இந்த ஏற்பாட்டின் காரணமாக நிறைய நூல்கள் அரசின் உதவி மூலம் வெளிவந்து தமிழறிஞர்கள் மத்தியில் ஒரு பெரிய உற்சாகத்தையே ஏற்படுத்தியது. மேலும் தமிழில் வெளிவரும் அறிவியல் நூல்களுக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டன.
தலைசிறந்த தமிழ் அறிஞரும் முன்னாள் துணைவேந்தருமான "கலைக்கதிர்" இதழின் ஆசிரியராக இருந்த ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் தலைமையில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், தமிழ் அறிஞர் மு.அறம் முதலானவர்களை உறுப்பினராகக் கொண்ட ஒரு குழுவையும் அமைத்தார் காமராஜர். இக்குழு வானியல், இயற்பியல், சமூகவியல், வேதியியல், புள்ளியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு கலைச்சொற்களை தயாரித்து "கலைச்சொல் அகராதி" என்ற பெயரில் வெளியிட்டது. கல்லூரிகளில் இனிமேல் அனைத்து பாடங்களும் தமிழிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அதனை ஒரு முன்னோடி திட்டமாக கோவை அரசினர் கல்லூரியில் பி.ஏ வகுப்பு உள்ள அனைத்து பாடங்களும் தமிழில் தயாரிக்கப்பட்டு 1960-61-ல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இது படிப்படியாக தமிழ்நாடெங்கும் விரிவுபடுத்தப்பட்டது. தமிழை பயிற்று மொழியாக கொண்டு படிக்கும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்குவதென்ற அரசாணையும் வெளியிடப்பட்டது இதன் மூலம் தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்து படித்திட மாணவர்கள் மத்தியில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.
அரசு நிர்வாகத்தில் ஆட்சி மொழி குழு சிறப்பு அலுவலர் (ஆய்வு ) மற்றும் ஆட்சி மொழி குழு சிறப்பு அலுவலர் (மொழியாக்கம்) என்ற இரண்டு பதவிகள் ஏற்படுத்தப்பட்டு இவர்கள் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ் ஆட்சி மொழி செயலாக்கம் பற்றி ஆய்வு செய்து சிக்கல் இருந்தால் அதற்கு தீர்வு காணுவது என்ற நோக்கில் செயல்பட்டனர். அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் தமிழ் ஆட்சி மொழி அகராதியும் அதற்கு இணையான ஆங்கிலச் சொல் அகராதியும் வழங்கப்பட்டு தட்டச்சர்களுக்கு சிறப்பான பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் உள்ள அனைத்து சட்டங்களையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்கின்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இப்படி இருநூறு ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் நசிந்து போய் கிடந்த தமிழ் மொழியை செம்மைப்படுத்தி அரசு நிர்வாகத்திலும் பள்ளி, கல்லூரி என அனைத்து நிர்வாகத்திலும் நடைமுறையிலும் செயல்படுத்தினார் காமராஜர். இன்று எல்லா இடங்களிலும் கேட்கிற 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழக்கத்திற்கு அன்றே வித்திட்டவர் தான் நமது காமராஜர்...
தமிழில் சென்னை மாகாணம் என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் வழங்கி வந்ததை நீக்கிவிட்டு "தமிழ்நாடு" என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழரசு கழகத்தலைவர் மா.பொ.சிவஞானம், அறிஞர் அண்ணா, தியாகி சங்கரலிங்கனார், இன்னும் பல தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் அரசிடம் வலியுறுத்திய வண்ணம் இருந்தனர்.
இது குறித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் சி .சுப்பிரமணியன் அவர்கள் 24.2.1961 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரை மிக முக்கியமானதாகும். அதன் சாராம்சம் பின்வருமாறு:-
மொழிவாரி மாகாண பிரிவினையின்போதே நமது மெட்ராஸ் ஸ்டேட் காங்கிரஸ் கமிட்டி என்று அழைக்கப்பட்டதை "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி" என்று மாற்றிய பெருமை தமிழக காங்கிரசுக்கு உண்டு.. எனவே மெட்ராஸ் ஸ்டேட்டை தமிழ்நாடு என்று அழைப்பதில் காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. தமிழ்நாட்டு பற்றிலும் தமிழ் வளர்ச்சியிலும் காங்கிரஸ்காரர்கள் யாருக்கும் பின் தங்கியவர்கள் அல்ல என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்...
ஒரு சொல்லை அடிக்கடி சொல்லி பழகி விட்டால் அந்த பழக்கத்தை நம்மால் எளிதில் விட்டு விட முடிவதில்லை... சென்னை மாநகரை மெட்ராஸ் என்றே அழைத்து நாம் பழகிவிட்டோம் அடுத்த மாகாணத்துக்காரர்களும் நமது சென்னை மாகாணத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றே அழைத்து பழகிவிட்டனர் இருந்தாலும் தமிழ் ஆட்சி மொழி சட்டம் நாம் இயற்றியதற்கு பின்னாலே அனைத்தையும் தமிழ் படுத்திக்கொண்டு வருகிறோம்.
இனிமேல் மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடுகிற இடத்தில் சென்னை ராஜ்ஜியம் என்று குறிப்பிடுவதற்கு பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... இவ்வாறு சி. சுப்பிரமணியம் சட்டமன்றத்தில் அறிவித்தபோது அதனை வரவேற்று மிகுந்த ஆரவாரம் எழுந்தது... காலப்போக்கில் 'தமிழ்நாடு சட்டசபை' 'தமிழ்நாடு அரசு' என்று அழைத்து மகிழும் காலம் வெகு தொலைவில் இல்லை... இதனை எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த முடிவினை எடுத்து இருக்கிறோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார் சி. சுப்பிரமணியம்.
எனவே இனிமேல் மெட்ராஸ் ஸ்டேட் என்கிற இடத்தில் "தமிழ்நாடு" என்று தாராளமாக எழுதலாம். இது சட்டத்திற்கு விரோதமாக இருக்கப் போவதில்லை என்பதால் இதற்காக சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார். சி.சுப்பிரமணியம்... இந்த அறிவிப்பின் அடிப்படையில் மெட்ராஸ் என்று இருந்த இடமெல்லாம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக உதகையில் உள்ள அரசு மாளிகைக்கு தமிழகம் என்று பெயர் சூட்டப்பட்டது.
ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது சி சுப்பிரமணியம் அவர்களுக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதில் இருந்த ஆர்வம் அதை சட்டபூர்வமாக செய்ய வேண்டும் என்பதில் இல்லாமல் போய்விட்டதே என்பதை நினைக்கும்போது வருந்தாமல் இருக்க முடியவில்லை. சட்டபூர்வமாக இந்த மாற்றம் செய்யப்படாத காரணத்தால் இந்த தமிழ்நாடு பெயர் மாற்றம் முழுமையான பலனை தரவில்லை என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று தனது நூலான "காமராஜர் ஒரு சகாப்தம்" என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் கோபண்ணா அவர்கள். ஆனால் முதல்வர் பொறுப்பினை 1967-ல் ஏற்ற அண்ணா இந்த பிரச்சினைக்கு உடனேயே முடிவு கட்ட வேண்டுமென விரும்பினார்.
இது தமிழ் மக்களின் உணர்ச்சிகரமான பிரச்சினை என்பதை புரிந்துகொண்ட முதல்வர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்தை 1967 ஜனவரி 18 -ல் ஏகமனதாக நிறைவேற்றி சட்டப்பேரவை தலைவர் ஆதித்தனார் அவர்களின் அனுமதியுடன் அனைத்து உறுப்பினர்களையும் "தமிழ்நாடு வாழ்க" என்று குரல் எழுப்ப சொல்லி சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தை தோற்றுவித்தார் என்று தான் சொல்ல வேண்டும்... தீர்மானம் நிறைவேற்றிய கையோடு அது சட்டபூர்வமான அங்கீகாரம் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அதனை தொடர்ந்து கண்காணித்து மத்திய அரசு தமிழ்நாடு என்று அறிவிக்கும் வகையில் போராடி பேரெடுத்த பெருமை அண்ணாவையே சாரும்... 'தமிழால் முடியும்' என்று நூல் எழுதிய சி. சுப்பிரமணியம் ஏன் இதனை முழுமையாக செய்யவில்லை என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை. காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய பெருமை அண்ணா எடுத்த அரிய முயற்சியால் தி.மு.க.வுக்கு கிடைத்தது மட்டுமல்ல, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த உடனேயே இந்த சாதனையை அண்ணா நிகழ்த்தியதால் தி.மு.க.வின் ஆட்சிக்கு நல்ல பேரும் புகழும் கிடைத்தது.
ஆனால் காமராஜர் மனதில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் நம்மால் முடிந்தவரை தமிழுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் நமது மகாகவி பாரதியாரின் 81வது பிறந்த நாளை சென்னை மாநகரமே வியக்கும் வண்ணம் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது காமராஜரின் வரலாற்று சாதனைகளில் ஒன்றாகும்.
- அடுத்த வாரம் சந்திப்போம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்