என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தியாக சீலர் திருப்பூர் குமரன்

- வேதாரண்யத்தில் தலைவர் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள குமரன் விரும்பினார்.
- உயிர்பிரியும் வேளையிலும் தாய்நாட்டின் கொடியை கீழே விடாமல் கைகளில் பற்றியதால் திருப்பூர் குமரன் என்று பெயர் பெற்றார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் திருப்பூர் குமரனுக்கு நீங்கா இடம் உண்டு. ஆங்கிலேய போலீசாரின் தடியடியில் தலை உடைந்து ரத்தம் கொட்டி மயங்கிய நிலையிலும் தாய்நாட்டுக்கொடியை கீழே விழாமல் கையில் ஏந்தியபடி இன்னுயிர் ஈந்தார். இதனால் கொடிகாத்த குமரன் என்ற பெயரை பெற்றார்.
அவர் ஈரோடு அருகே சென்னிமலையில் ஒரு ஏழை கைத்தறி குடும்பத்தில் கடந்த 1904-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி பிறந்தார். தந்தை பெயர் நாச்சிமுத்து. தாயார் கருப்பாயி. பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் குமாரசாமி. விடுதலைப்போரில் ஈடுபட்டு உயிர்நீத்த பிறகே குமாரசாமி என்ற பெயர் குமரன் என்றானது. சென்னிமலை போர்டு உயர்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்த குமரனுக்கு அதற்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் குடும்பத்தின் வறுமை. பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு தனது தாய்மாமன்கள் வீட்டில் தங்கியிருந்து நெசவுத்தொழில் பயின்றார். சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற குமரன், நெசவுத்தொழிலை கற்று பட்டுச்சேலை நெய்வதில் நிபுணத்துவம் பெற்றார். சொந்த ஊரான சென்னிமலைக்கு சென்று தொழில் செய்தார். 1923-ம் ஆண்டு தனது 19 வயதில் திருப்பூரை சேர்ந்த ராமாயி அம்மாள் என்பவரை திருமணம் செய்தார்.
குடும்பம் நடத்த தேவையான வருமானம் குமரனுக்கு நெசவுத்தொழிலில் கிடைக்கவில்லை. இதனால் திருப்பூருக்கு வந்தார். பஞ்சு வியாபாரத்தில் பெயர் பெற்ற சென்னியப்ப முதலியார், ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் குமரனுக்கு வேலை கொடுத்து ஆதரித்தனர். பஞ்சை எடைபோடும் குமாஸ்தா வேலையை குமரன் செய்தார். குமரன் காலமெல்லாம் காந்தியின் போதனைகளை கற்றறிந்து அவற்றை பின்பற்றியே தம் வாழ்க்கையை நடத்தி வந்தார். திருமணம் முடிந்த குமரனுக்கு குழந்தைப்பேறு இல்லை. திருப்பூரில் குடியேறிய நாள் முதல் குமரன், கதர் ஆடையை மட்டும் அணிந்து வந்தார். நாள்தோறும் கைராட்டையில் நூல் நூற்று வந்தார். தனது மனைவியையும் கைராட்டையில் நூல் நூற்க வைத்தார். சிக்கனமாக வாழ்க்கை நடத்தி கிடைத்த சொற்ப பணத்தை வைத்து செம்மையாக வாழ்ந்து வந்தார். குமரனுக்கு வீரமும், தியாகமும் இயற்கையாகவே அவரிடம் இருந்தது.
1930-ம் ஆண்டு வேதாரண்யத்தில் தலைவர் ராஜாஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ள குமரன் விரும்பினார். ஆனால் குமரனின் குடும்பத்தினர், வேலை கொடுத்த முதலாளிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதன்காரணமாக உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்க முடியாமல் போனதால் குமரன் மிகவும் வருந்தினார். இதற்காக ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து பிராயசித்தம் தேடிக்கொண்டார். காந்தி இர்வின் சமாதான காலத்தில் திருப்பூரில் நடந்த சாத்வீக மறியல் போராட்டங்களில் குமரன் கலந்து கொண்டு பணியாற்றினார்.
கடந்த 1932-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி காந்தி, ஆங்கிலேய அரசால் சிறை செய்யப்பட்டதும், 6-ந் தேதி திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் உள்ள காந்தி கட்டிடத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜனவரி மாதம் 10-ந் தேதி சட்ட மறுப்பு இயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் மக்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக அவர்களை அச்சுறுத்தும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரிசர்வ் போலீஸ் படையை வரவழைத்து வீதிகளில் துப்பாக்கிகளுடன் போலீசார் வலம் வந்தனர். 1932-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவான பி.டி.ஆஷர், பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காலை 8.30 மணிக்கு மங்கள விலாஸ் ஜின்னிங் பேக்டரியில் இருந்து தியாகி பி.எஸ்.சுந்தரம் தலைமையில் 9 வீரர்கள் ஊர்வலமாக கொடிபிடித்து சென்றனர். குமரன் தாய்நாட்டுக்கொடியை கையில் ஏந்தி முன்வரிசையில் நின்று வீறுநடை போட்டார். தற்போதைய வடக்கு போலீஸ் நிலையம் எதிரில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது 30 போலீசார், 2 காவல்துறை அதிகாரிகள் பாய்ந்து வந்தனர். எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் ஊர்வலமாக சென்றவர்களை கண்மூடித்தனமாக தடியால் தாக்கினார்கள். போலீசாரின் குண்டாந்தடியின் முதல் அடி முன்னே சென்ற குமரனுக்கு விழுந்தது. இடதுபுறம் காதுக்கு நேராக அவருடைய தலை உடைந்து ரத்தம் கொட்டியது. வந்தே மாதரம் என்று வீர முழக்கமிட்டபடி குமரன், தனது இரு கைகளில் கொடியை பற்றிக்கொண்டார். காவலரின் தாக்குதல் நடந்தாலும் குமரன் ஊர்வலமாக செல்ல முயன்றார். அவர் மீது பல அடிகள் விழுந்தது. ரத்தம் அதிகம் வெளியேறியதால் மயங்கிய குமரன், தனது கையில் பற்றிய கொடியுடன் கீழே சாய்ந்தார். ஆனால் கையில் இருந்த கொடியை அவர்விடவில்லை.
காவலர்களின் கண்மூடித்தமான தாக்குதலில் நிலைகுலைந்து படுகாயத்துடன் கிடந்த குமரன் உள்ளிட்டவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர், குமரனுக்கு பல்வேறு இடங்களில் எலும்புகள் உடைந்து இருப்பதாக தெரிவித்தார். அபாயகட்டத்தில் இருப்பதாக கூறினார். தீவிர சிகிச்சை அளித்தும் குமரனின் உயிர் நள்ளிரவில் பிரிந்தது. குமரன் உடலை அடக்கம் செய்ய அவருடைய உறவினர்களிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர். அதுவும் ஊர்வலமாக உடலை கொண்டு சென்றால் பிரச்சினை வரும் என்று நினைத்து கம்பில் தொட்டில் கட்டி, அதில் குமரனின் உடலை வைத்து நகரின் சந்து, சந்தாக யாருக்கும் தெரியாமல் இடுகாட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
உயிர்பிரியும் வேளையிலும் தாய்நாட்டின் கொடியை கீழே விடாமல் கைகளில் பற்றியதால் திருப்பூர் குமரன் என்று பெயர் பெற்றார். தாய்நாட்டுக்காக இன்னுயிர் கொடுத்த தியாக சீலர் திருப்பூர் குமரன் பிறந்தநாளான இன்று (புதன்கிழமை) அவரின் தியாகத்தை போற்றுவோம்.