என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
ரத்தம் இல்லாமல் யுத்தம் செய்த கவிஞர்
- சிறு வயதில் ராமலிங்கம் பிள்ளை படிப்பை விட ஓவியம் வரைவதில் வல்லவராக விளங்கினார்.
- கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
இன்று (அக்டோபர் 19-ந்தேதி) கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள்.
தமிழக அரசின் முதல் அரசவை கவிஞராக திகழ்ந்தவர் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை.
"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!" "கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது," போன்ற தேசப்பக்தி பாடல்களை பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றினார். தமிழக மக்களால் காந்திய கவிஞர் எனப் போற்றப்பட்ட ராமலிங்கம் பிள்ளை 1888-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
ஓவியர்
சிறு வயதில் ராமலிங்கம் பிள்ளை படிப்பை விட ஓவியம் வரைவதில் வல்லவராக விளங்கினார். 1912-ம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி டெல்லியில் நடந்த ஓவிய கண்காட்சியில் ராமலிங்கம் பிள்ளை வரைந்த ஓவியம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
திருச்சி கல்லூரியில் பி.ஏ. படித்தார். படிப்பை விட இலக்கியத்தில் நாட்டம் கொண்ட ராமலிங்கம் பிள்ளை கிட்டப்பா நாடகங்களுக்கு பாட்டு எழுதிக்கொடுத்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
1932-ல் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு வருடம் சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைவாசம் அனுபவித்து வந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் உள்பட மற்ற தலைவர்களுக்கு கம்பராமாயணம், திருக்குறள் பாடங்களை நடத்தினார். திருக்குறளுக்கு புதிய உரை எழுதினார்.
பாரதியார் பாராட்டு
புதுச்சேரியில் இருந்து தமிழகம் திரும்பிய பாரதியாரை காரைக்குடி அருகே கானாடு காத்தான் என்ற ஊரில் சந்தித்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் ராமலிங்கத்தை பாரதியாரிடம் இவர் பாடல்கள் எழுதுவார் என்று கூற, ஏதாவது நீர் இயற்றிய பாடலை கூறும் என்று பாரதியார் கேட்டுக்கொண்டார்.
உடனே ராமலிங்கம் கிட்டப்பாவின் லங்காதகனம் நாடகத்துக்கு எழுதிய 'தம்மரசை பிறர் ஆளவிட்டு விட்டுதான் வணங்கி கைகட்டி நின்ற பேரும்' என்ற பாடலின் முதல் வரியை பாடிய உடனே' "பலே பாண்டியா!' பிள்ளை நீர் ஒரு புலவன் ஐயமில்லை'!' என்று தட்டிக்கொடுத்து பாராட்டினார் பாரதியார்.
ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுவதற்கென்றே' கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற பாடலை எழுதித்தந்தார். அது காங்கிரஸ் தொண்டர்களிடையே வேதமந்திரமாக ஒலித்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கவிஞரின் நாட்டுப்பற்றை போற்றும் வகையில் மாநில அரசு அவரை முதல் அரசவைக்கவிஞராக நியமித்தது. மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதளித்து போற்றியது.
2 தடவை தமிழக மேல்சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். சாகித்ய அகாடமியின் நிர்வாகக்குழுவில் தமிழ் பிரதிநிதியாகவும் இடம்பெற்று இருக்கிறார்.
மலைக்கள்ளன்
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து இருந்தனர். "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே 'என்ற இனிமையான பாடல் இடம்பெற்ற இந்தப்படம் எம்.ஜி.ஆருக்கு" "சூப்பர் ஹீரோ" அந்தஸ்தை பெற்றுத்தந்தது.
இந்தப்படத்துக்கு கலைஞர் மு.கருணாநிதி திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருந்தார்.
படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று குடியரசுத்தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் பெற்றது. ராமலிங்கம் பிள்ளை தன் சுயசரிதையை 'என் கதை' என்ற பெயரில் எழுதியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட நாவல்கள், கவிதை தொகுப்பு, நாடகங்கள் எழுதியிருக்கிறார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் படைப்புகள் தமிழக அரசால் 1998-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
நினைவுத்தூண்
1948-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் காந்தியடிகள் நினைவாக நினைவுத்தூண் ஒன்று நிறுவினார். அதன் திறப்பு விழாவில் மாலை நடந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரை தலைமை வகிக்கச்செய்து அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணா சொற்பொழிவு ஆற்றினார்.
அண்ணாவும், நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்குநேர் சந்தித்து பேசினர். அப்போது "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்று அண்ணா நாமக்கல் கவிஞருக்கு புகழாரம் சூட்டினார். கவிஞரின் எழுத்தாற்றலை சிறப்பித்து பாராட்டி மகிழ்ந்தார்.
தமது பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும், மக்கள் மனதில் நாட்டுப்பற்றை ஊட்டிய கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 24-8-1972 அன்று காலமானார்.
தமிழக அரசு, கவிஞர் வாழ்ந்த நாமக்கல் இல்லத்தை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கி உள்ளது. சென்னை அரசு தலைமைச்செயலக 10 மாடி கட்டிடத்துக்கு இவரது பெயரை சூட்டி உள்ளது. நாமக்கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.