என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் சாதகங்கள்- பாதகங்கள்
- இருபத்தேழு நட்சத்திரங்களில் 2வது நட்சத்திரம் பரணி.
- பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்ரன்.
பரணி
இருபத்தேழு நட்சத்திரங்களில் 2வது நட்சத்திரம் பரணி. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்ரன். இதன் ராசி அதிபதி செவ்வாய். பரணி என்றால் தாங்கிப்பிடிப்பது அல்லது தாங்குவது என்று பொருள்.
வானில் முக்கோண வடிவ அடுப்பு போல் நமது கண்ணிற்கு காட்சி தருவதால் இதற்கு பரணி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் நீச்சமடையும் கிரகம் சனி.
பரணி என்பது ஒரு பெண் நட்சத்திரம் ஆகும். இப்பெண் நட்சத்திரம் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறது.
பரணி நட்சத்திர பொது பலன்கள்
செவ்வாயின் வீட்டில் உள்ள சுக்ரனின் நட்சத்திரம் பரணி என்பதால் இதில் பிறந்தவர்கள் கட்டுமஸ்தான உடல்வாகை பெற்றிருப்பார்கள். பார்த்த மாத்திரத்தில் பிறரை கவரும் வீரம், தைரியம் அழகு நிரம்பியவர்கள்.
பரணி, தரணி ஆளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வார்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பார்கள். சமயோசித புத்தியைப் பயன்படுத்துவார்கள். தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், புகழுடன் வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.
அதேபோல், இந்த நட்சத்திரக்காரர்கள், மனோ தைரியம் உள்ளவராகவும், அனைத்து விஷயங்களை யும் அறிந்தவராகவும் திகழ்வார்கள் இசை,நடனம், நாட்டியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள். வாசனைத் திரவியங்கள் ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புவார்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவற்றை ரசித்துச் சாப்பிடுவார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றால் சிறு வயது முதலே குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். சுயமுயற்சி, தன்னம்பிக்கை, பெரும்புகழ் உண்டாகும். அயல்நாட்டு பிரயாணங்கள் ஏற்படும்.
மிகுந்த செல்வச் செழிப்புடன் பொருளாதார கஷ்டம் இல்லாமல் மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள்.விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். பல தொழில் முனைவோர்களுக்கு ரோல் மாடலாக வாழ்வார்கள்.
வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர்களின் குலத்தொழில் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். உள்ளுணர்வு மிகுந்தவர்கள். எதையும் தெளிவாக யோசித்து திறம்பட செய்யும் ஆற்றல் உண்டு. விசுவாசமான, நம்பிக்கையான வேலையாட்கள் நிரம்பப் பெற்றவர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள்.
சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் இளம் வயதில் கஷ்டம் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்தால் வாலிப வயதில் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தீராத நோய், கடனில் உழல்கிறார்கள். இளம் வயதில் வறுமையை அனுப வித்தவர்கள் வாலிப வயதில் பொறுப்பான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறார்கள்.
கல்வி
அழகிற்கு முக்கியத்துவம் தரும் இவர்கள் கல்வியை இரண்டாம் பட்சமாகவே நினைப்பார்கள். சுய ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் பலம் பெற்றால் நன்றாக அரசியல், நிர்வாகம், மருத்துவத்துறையில் கண், முகம் சார்ந்த படிப்பு, சிவில் என்ஜினியரிங், விவசாயம் சார்ந்த படிப்புகள், அழகுக் கலை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற படிப்புகள் பலன் தரும்.கலை மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்கள்.
தொழில்
தொழில் நெளிவு, சுழிவுகள் தெரிந்தவர்கள். மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதில் அதிக விருப்பம் இல்லாதவர்கள். கடின உழைப்பு மற்றும் ஆர்வ மிகுதியால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த தொழிலிலும் சிறந்து விளங்குவார்கள்.
நிர்வாக வேலைகள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வணிகம் , கலைத்துறை போன்றவை அவர்களுக்கு மிகவும் விருப்பமான துறையாகும்.எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர்கள், தம்மை பின்பற்றும் வகையில் ஒரு வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பதவிகளை வகிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள்" என்ற பழமொழிக்கு ஏற்ப பிறவியில் நல்ல வசதியான சுகமான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். சுக, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரும்பான்மையாக இல்லை என்ற நிலை இருக்காது. இவர்கள் பேச்சில் காதலும், கவர்ச்சியும் நிரம்பி இருக்கும். வசீகரமான பேச்சால் அனைவரையும் வசப்படுத்தும் தந்திரவாதிகள். உணவுப் பிரியர்கள். ரசித்து, ருசித்து சாப்பிடுவதில் நிறைய ஆர்வம் உள்வர்கள்.
சுக்ரன், செவ்வாய் பலம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். இளம் வயதில் திருமணம் உண்டு. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். குடும்பத்தை அரவணைத்து வழி நடத்தும் பண்பாளர்கள். வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பார்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றி கொள்ளும் குணம் கொண்டவர்கள். அறிவுத் திறனும், திறமையும் உண்டு. சிறுசிறு உடல் நல பாதிப்பு இருக்கும். தீர்க்க ஆயுள் உள்ளவர்கள். எந்த விசயத்தையும் திட்டமிட்டு செயல்ப டுத்துவார்கள். வீடு, வாகனம், சொத்து சேர்க்கை உள்ளவர்கள்.
தசாபலன்கள்
சுக்ர தசா
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்ர தசா முதலில் வரும். இது 20 வருடம் உள்ள மிகப் பெரிய தசாவாகும்.
ஒவ்வொருவருக்கும் பிறந்த காலத்தில் ஆரம்பமாகும் முதல் தசை ஜன்ம நட்சத்திரத்தின் முழு காலமும் இருக்காது. அந்த நட்சத்திரம் கடக்கும் விநாடியை பொருத்தது. கர்ப்ப செல் இருப்பை கணிப்பை வைத்துதான் தசா நாட்கள் கண்டறிய முடியும்.
இளமை கால வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலோ அல்லது ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தாலோ மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சூரிய தசா
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டாவதாக வருவது சூரியதசா. மொத்தம் 6 ஆண்டுகள். இது சம்பத்து தாரையின் நட்சத்திரம். பிறப்பில் சுக்ர தசா அதிக வருடம் நடப்பில் இருந்தால் இளம் பருவத்தில் சம்பாதிக்க துவங்குவார்கள். பால்ய வயது மற்றும் பள்ளிப் பருவமாக இருந்தால் தந்தைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். படிப்பில் சுட்டியாக இருப்பார்கள். நல்ல தேக சுகம், ஆரோக்கியம் நிறைந்தவர்கள்.
சந்திர தசா
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாவதாக சந்திர தசா நடக்கும். இது விபத்து தாரையின் தசாவாகும்.எதிலும் எதிர் நீச்சல் போட்டு திட்டமிட்டு முன்னேற வேண்டும். இந்த தசையில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும். நல்ல விருப்பமான மனதிற்கு பிடித்த இடப்பெயர்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்களின் அனுசரணை இருக்கும். மத்திம வயதினருக்கு பாகப்பிரிவினை சொத்து கிடைக்கும்.
செவ்வாய் தசா
நான்காவதாக செவ்வாய் தசை வரும். இது சேஷம தாரையின் நட்சத்திரம். இந்த தசையில் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். அரசு வேலை வாய்ப்பு, அரசாங்க காண்டிராக்ட், அரசு வழி ஆதாயம், அரசியல் பதவி என அவரவரின் வயதிற்கு ஏற்ற சுப பலன்கள் உண்டு.
பிறவியில் சுக்ர தசை மிக குறுகிய காலம் மட்டும் இருந்தால் திருமணம், குழந்தை, நல்ல தொழில், உத்தியோகம் என நல்ல யோகங்கள் கூடி வரும்.எந்தத் துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியை போல் செயல்படுவார்கள்.
ராகு தசா
ராகு தசாவின் பலனை ஐந்தாவது தசையாக பரணி நட்சத்திரதாரர்கள் அனுபவிப்பார்கள். இது பிரத்யக் தாரையின் நட்சத்திரம்.சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் பெரும் வாழ்வியல் மாற்றம் உண்டு. எதிர்பாராத பல சம்பவங்கள் இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும்.
பிறரை அடக்கியாளும் எண்ணம் அதிகமாகும்.வெற்றி வீரராக லட்சியவாதியாக முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் உள்ளவர்கள் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள்.துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும். சிலர் வெளிநாட்டில் வாழ்வார்கள்.
குரு தசா
பரணி நட்சத்திரதாரர்கள் ஆறாவது தசையாக 16 வருடம் குரு தசையை சந்திப்பார்கள். இது சாதக தாரையாகும்.இந்த காலகட்டத்தில் பிறந்த கால சுக்ர தசைக்கு ஏற்ப 40 முதல் 60 வயது வரையில் இருப்பார்கள்.தோல்வியால் சரிந்து போன நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.
வணிகவியல், காது, கண் ஆகிய துறைகளிலும் பைனான்ஸ், வணிக மேலாண்மை போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்ட வர்களாக இருப்பார்கள்.
சனி தசா
ஏழாவது தசையான சனி தசை 19 ஆண்டுகள் நடக்கும். இது தாரை நட்சத்திரமாகும்.
வைராக்கியம் மிகுதியாக இருக்கும். மனதிற்குள் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை புரிந்து கொண்டு வாழ்வார்கள். பூர்வீகம் தொடர்பான மன உளைச்சல் முன்னோர்களின் பரம்பரை நோய் தாக்கம் உண்டாகும்.
ஆயுள், ஆரோக்கியம் சம்பந்தமான எண்ண ஓட்டம் இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாகும். எட்டாவது தசையான புதன் தசையும், 9-வது தசையான கேது தசையும் பெரும்பான்மையானவர்கள் சந்திப்பதில்லை.
பரணி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்.
மேஷ ராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் அடுப்பு , முக்கோணம் போன்று காட்சியளிக்கிறது .
இந்த நட்சத்திரதாரர்கள் முதன் முதலாக. புதியதாக கட்டிய வீட்டில் அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்கு, சாந்தி முகூர்த்தத்திற்கும், செங்கல் சூளைகளில் நெருப்பிடுவதற்கும், மாந்திரீக சக்கரம் வரைவதற்கு மாந்திரீக தகடுகளை பிரதிஷ்டை செய்வதற்கும், ஆயுதப் பிரயோகம் செய்வதற்கும் ,போர் புரிவதற்கும் உகந்த நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் நீசம் அடைவதால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது பரணியில் வேலைக்கு அமர்த்தினால் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள்.
தொழிலாளர்களால் பிரச்சினைகள் வரும் போதும் தொழிலாளர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர் போராட்டங்களை முறியடிக்க உகந்த நட்சத்திரம் ஆகும். இதில் திருமணம் செய்வது சிறப்பல்ல. ஆனால் திருமண தடைகள் நீங்க வழிபாடு செய்யலாம்.
பரணி நட்சத்திரத்தன்று காஞ்சிக்கு தொடர்ந்து 3 மாதங்கள் சென்று காமாட்சியை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.
நட்சத்திர பட்சி: காகம்
யோகம்: ப்ரீதி
நவரத்தினம்: வைரம்
உடல் உறுப்பு:கீழ் பாதம்
திசை: கிழக்கு
பஞ்சபூதம்: நிலம்
அதிதேவதை: துர்க்கை
நட்சத்திர மிருகம்: ஆண் யானை
நட்சத்திர வடிவம்: அடுப்பு, முக்கோணம்
பரணிக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்
தாரைகள் சம்பத்து தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
சேம தாரை: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.
சாதக தாரை: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.
பரம மிக்ர. தாரை: அஸ்வினி, மகம், மூலம்.
பொதுவான பரிகாரங்கள்
பரணி சுக்ரனின் நட்சத்திரம் என்பதால் தினமும் சுக்ர ஓரையில் மகாலட்சுமி அல்லது பெண் தெய்வ வழிபாட்டை கடைபிடிப்பது அம்மன் சுலோகங்களை கேட்பதாலும், படிப்பதாலும் மேன்மையான பலன்கள் உண்டு. இவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் பால், தயிர், சந்தனம், வைரம் போன்றவற்றை, தானம் செய்தால் நன்மை உண்டாகும்.
தினமும் வலம்புரிச் சங்கில் புனித நீர் தயாரித்து காமாட்சியம்மன் படத்தின் முன்பு வைத்து அருந்த வாழ்க்கை வளம் பெறும்.பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். நெல்லிக்காய் மரக் கன்று தானம் செய்யலாம். காகம், யானைக்கு உணவிடலாம்.
ஓயிட் ஜெர்கான் ரத்தின மோதிரம் அணியலாம். உங்களின் சாதக தாரையான 6-வது நட்சத்திரமான புனர்பூசத்தன்று ஸ்ரீ ராமரை வழிபட வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்