search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நோயை குணப்படுத்துவதில் துணைபிரியும் பத்தியமுறை
    X

    நோயை குணப்படுத்துவதில் துணைபிரியும் பத்தியமுறை

    • உள் மருந்து செய்முறைகளில் சித்தர்கள் அறிவியல் திறனோடு நெறிப்படுத்தினர்.
    • பல்வேறு வேதியல் ஆய்வுகளை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

    சித்த மருந்தியல் நெறி:

    மருந்தியல் நெறி என்பது மருந்தின் குணம், மருந்து மற்றும் நோய்க்கு ஏற்ற துணை மருந்து, மருந்தினை உண்ண தகுந்த காலம், இடம், அளவு, உணவு முறை, வாழ்வியல் முறை, எதிர் விளைவு, அதனை முறிக்கும் முறை என விரிவாக அமைந்துள்ளது. (தேரையர் யமக வெண்பா, மருத்துவாங்கச் சுருக்கம் போன்ற நூல்களில் இவை பற்றிய விளக்கங்களை சான்றுடன் அறியலாம்).

    சித்த மருந்தியல்:

    நோய் தீர்க்கும் மருந்து உடலில் எவ்வகை மாற்றங்களை உண்டாக்க வல்லவை என்பதை உணர்த்தும் மருந்தியல் திறன்களை சித்தர்கள் மிக நுட்பமாக அறிந்திருந்தனர்.

    நஞ்சு நூல் எனும் தொகுப்பில் காணப்படும் பலவகை தாவர, சங்கம(கடல்), தாது, உலோக நஞ்சுகள் பற்றிய விளக்கங்கள் தமிழர்களின் மருந்தியல் புலமையை புலப்படுத்தும்.

    நஞ்சுத் தன்மை மட்டுமின்றி மருந்து செய்முறைகளையும் சித்தர்கள் அறிந்திருந்தனர்.

    தட்ப வெப்பநிலை, துணை மருந்துகள் எனப்படும் அனுபான முறை மூலம் மருந்துகளை நெறிப்படுத்தி பயன்படுத்தினர்.எடுத்துக்காட்டு பற்பம், செந்தூரங்களை நேரடியாக கொடுக்காமல் தேன், பால், நெய், மூலிகை குடிநீர் போன்ற அனுபான மருந்துகள் மூலம் கொடுத்தனர்.

    மருந்துகளின் அளவும் , மருந்தினை உட்கொள்ளும் கால அளவு , மருந்து உட்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய உணவு, வாழ்வியல் முறைகளையும் கூறியுள்ளனர். இச்சா பத்தியம், குடும்ப பத்தியம், கடும் பத்தியம் எனும் பத்திய முறைகள் மருந்தின் குணத்திற்கு ஏற்ப அமைந்தவை. அனைத்துக்கும் மேலாக மருந்தின் தீய விளைவினை முறிக்கக் கூடிய முறிப்பு மருந்துகளையும் அறிந்து வைத்திருந்தனர்.

    சித்தர்களின் மருந்து செய்முறைகளில் உள்ள அறிவியல் திறன்:

    சித்தர்கள் மருந்தினை உள் மருந்து 32, வெளி மருந்து 32 ஆக பிரித்து பிரித்து 64 வகையான மருந்து செய்முறைகளை கூறியுள்ளனர்

    உள் மருந்து செய்முறைகளில் சித்தர்கள் அறிவியல் திறனோடு நெறிப்படுத்தினர். எந்த மருந்து தன்னளவில் கெடாமல் இருக்கின்றதோ, அந்த மருந்துதான் நோயை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்த மருந்து என கருதிய தமிழ் மருத்துவர்கள், அத்தகைய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு வேதியல் ஆய்வுகளை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

    சித்த மருந்துகளின் காலக்கெடு (Excpiry Date) அவற்றின் நீண்ட நாள் கெடாமல் இருக்கும் பக்குவம் சித்தர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்துகிறது. எடுத்துகாட்டு தைல வகைகள் - 1 ஆண்டு, மெழுகு, குழம்பு - 5 ஆண்டுகள், ரசம் பதங்கம் - 10 ஆண்டுகள், செந்தூரம் - 75 ஆண்டுகள், பற்பம், கட்டு, களங்கு - 100 ஆண்டுகள், சுண்ணம்- 500 ஆண்டுகள், கற்பம், குரு, குளிகை - காலக்கெடு கடந்தவை.

    நவீன மருத்துவத்தில் சிக்கல் நிறைந்த அபாயம் என கருதப்படும் உலோக மருந்துகள் சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்தறிவியல் மூலம் அவற்றின் நச்சுத்தன்மையை சுத்தி செய்து கொடிய நோய்களில் இருந்து உயிரை காக்கும் உயரிய மருந்துகளாக பயன்படுத்துகின்றது.

    பாதரசம் மிகக் கடுமையான நஞ்சுள்ள உலோகமாகவும் அதனை மருந்தாக்கும் முறைகள் சித்த மருத்துவத்தில் இருப்பது சிறப்பம்சமாகும்.

    வேதியல் சார்ந்த மருந்து முறைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சித்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு அகத்தியர், போகர், தேரையர் ஆகியோர் கூறியதாக கருதப்படும் பாடல்களில் காணலாம்.

    இவையின்றி பிணி வராமல் தடுக்க உதவும் கற்ப மருந்துகள், நீண்ட நாள் வாழ உதவும் குரு மருந்துகள் போன்றவை இக்கால மருத்துவர்கள் சிந்தித்து அவர்களின் ஆராய்ச்சியை புதிய பாதைக்கு உந்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளது.

    சுத்தி முறை முக்கியத்துவம்:

    உள் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்பட்ட மூலப் பொருட்களை, அவற்றின் வாதம், பித்தம், ஐயம் எனும் உயிர் தாதுக்களின் நிலைகளை அறிந்தே மருந்து செய்ய பயன்படுத்தினர். அதனுடன் ஒவ்வொன்றுக்கும் இயல்பாய் இருக்கும் நஞ்சுத் தன்மையை மிக தெளிவாக அறிந்து அதனை போக்கும் நுட்பங்களையும் கூறியுள்ளனர்.

    மருந்து செய்முறையில் முதல் விதி மூலப்பொருட்களின் நஞ்சு தன்மையை அறிதல், அடுத்த விதி நஞ்சு தன்மையை நீக்குதல் அதாவது சுத்தி செய்தல் ஆகும். சுத்தி செய்யாமல் மருந்து செய்யக்கூடாது என்பதை சித்தர்கள் வகுத்த சித்த மருத்துவத்தின் முக்கிய விதியாக வைத்துள்ளனர்.

    மிளகு, சுக்கு, கடுக்காய் எனப்படும் சாதாரண தாவர பொருட்களில் இருந்து வீரம், பூரம், ரசம், தாளகம், லிங்கம் என விரியும் அத்தனை மூலப் பொருட்களையும் சுத்தி செய்த பின்னரே மருந்து செய்ய பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

    சித்த மருத்துவத்தில் அனுபானம் கூறுவது ஏன்?

    இந்த சூரணத்தினை ஏன் நெய்யில் கலந்து சாப்பிட சொல்றீங்க? இந்த மருந்தை ஏன் வெண்ணெயில் கலந்து சாப்பிட சொல்றீங்க? இதனை ஏன் தேனில் சாப்பிட சொல்றீங்க? என நவீன அறிவியல் ஆய்வாளர்கள் வியந்து பார்க்கும் படியாக நம் துணை மருந்தின் அனுபானக் கோட்பாடு உள்ளது.

    சித்த மருத்துவத்தில் அனுபானம், துணை மருந்து பங்கு அதிகம். எப்படியானால் செல்ல வேண்டிய இடத்திற்கு தனியாக செல்வதற்கும், ஒரு வழிகாட்டியுடன் சேர்ந்து செல்வதற்கும் உள்ள வித்தியாசம் தான்.

    சில சித்தர் மருந்துகளை ஒரு சில மருந்துடன் சேர்த்து தரும்போது தான் பலன் நன்றாக கிடைக்கிறது. எல்லா மருந்துக்கும் பால், தேன், நெய் மட்டுமே அனுபானம் கிடையாது. உதாரணத்திற்கு நிலவேம்பினை தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம். ஏனெனில் நிலவேம்பின் பைடோகெமிக்கல், ஹைட்ரோபிலிக் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருட்கள் நீரில் காய்ச்சும் போது மருத்துவத் தன்மைகளை வெளிப்படுத்துவதால் கஷாயமாக காய்ச்சி குடிக்கிறோம்.

    கரிசலையை எண்ணையாக காய்ச்சி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது லிபோபிலிக் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.

    இது மாதிரி நெய் பற்றி கூறும் போது சிறுவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள் எல்லாம் பிரமி நெய், வல்லாரை நெய், தூதுவளை நெய் போன்றவற்றில் நெய்யினை சேர்ப்பதால் மூலிகை சாற்றை நெய் உள்வாங்கி பிளட் பிரைன் பேரியர் என்று சொல்லக்கூடிய மூளை உரையைத் தாண்டி செல்லக்கூடிய ஆற்றல் நெய்க்கு உண்டு. இதை தண்ணீரில் சாப்பிட்டால் பலன் கிடையாது. இதிலிருந்து எவ்வளவு கைதேர்ந்தவர்களாக சித்தர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று நம்மால் அறிய முடிகிறது...

    ஒரு உலோகம் மூலம் கொண்டு செய்யப்படும் பற்பம், அணு அளவிற்கும் நுண்ணியமானவை என்பதையும், நெய்யின் துணையோடு மூளையை சென்றடைகிறது என்கிற அறிவியல் உண்மையையும் இக்கால அறிவியல் உலகமே வியந்து பார்க்கிறது.

    சித்த மருத்துவத்தில் பத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

    சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வருவோரில் பெரும்பாலானவர்கள் முதலிலே கேட்கும் கேள்வி பத்தியம் இருக்கனுமா ? ஆமாம் என்று சொன்னால் சிலர் என்னால் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் பத்தியம் என்பது என்ன என்று சரியான புரிதல் இல்லாதது.

    பத்தியத்தை இரண்டு விதமாக பார்க்கலாம்:

    1. நோய்க்கு அல்லது மருந்துக்கு ஒத்துக்கொள்ளாததை நீக்குவது.

    2. நோய் உள்ளபோது சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்.

    இந்த இரண்டு முறையுமே விரைவில் நோய் குணமாகவும், நோயினால் பாதிக்கப்பட்ட உடல் தேறவும் அவசியமாகும்.

    ஜுரம் உள்ளபோது கஞ்சியும், வெந்நீரும் உட்கொள்வது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு, மாவுப் பொருட்களை நீக்குவது, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உப்பினை உணவில் குறைத்துக் கொள்வது என்பதெல்லாம் நோய்க்கான பத்தியம்.

    உலகத்தில் உள்ள அனைத்து மருத்துவத்திலும் நவீன மருத்துவம் உள்பட நோயிற்கு ஏற்ற உணவு, வாழ்வியல் முறைகளை அவர்கள் மொழியில் கூறுகிறார்கள்.

    சற்று கடினமான நாட்பட்ட நோய்களுக்கு சற்றே பெரிய மருந்துகள் கொடுக்கும்போது கோழிக்கறி, பாகற்காய், அகத்திக்கீரை, நண்டு முதலியவற்றை நீக்குவது மருந்துகளுக்கான பத்தியம் ஆகும்.

    பால், மோர், நெய், பிஞ்சு காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நோயினால் மெலிந்த உடலை தேற்றவும், மருந்தினால் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதற்குமான பத்தியமாகும்.

    குறிப்பிட்ட ஒரு நோய்க்கு தகுந்த பத்தியத்துடன் மருந்து உட்கொண்டால் அந்த நோய் விரைவில் தீரும்.

    தகுந்த பத்தியம் இல்லாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டு மருந்து உட்கொண்டால் நோய் குணமாக நீண்டகாலம் ஆகும். இத்துடன் பணமும் விரையம் ஆகும். மருத்துவர் மற்றும் சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும்.

    இவ்வாறு பத்தியம் காக்காமல் மருந்து சாப்பிடுவது என்பது ஓட்டை பானையில் நீர் நிரப்புவதற்கு சமம்.

    சித்த மருத்துவத்தில் நோயாளியை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்தியம் கூறவில்லை. நோயினை நீக்குவதற்கு காரணமாகவே பத்தியம் கூறுகின்றனர். இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நோயை விட பத்தியும் ஒன்றும் அவ்வளவு கொடூரமானது அல்ல. நோயின் கொடூரத்தை உணரும்போது இது புரியும்.

    இக்காலத்தில் நவீன மருத்துவம் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து வகை மருத்துவத்திலும் நோயிற்கான உணவு,பழக்கவழக்க முறைகள் கூறி மருத்துவம் செய்கிறார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்த மருத்துவத்தில் பத்தியத்தின் முக்கியத்துவத்தை கூறி மருத்துவம் செய்ததை பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. மனக்கட்டுப்பாட்டோடு பத்தியம் காத்துக்கொண்டால் நலம் உங்களை நாடி வரும்.

    Next Story
    ×