என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
சிவன் சொத்து குல நாசம்
- வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார்கள்.
- நாம் வாழும் பூமிக்கு “தர்ம, கர்ம” பூமி என்று பெயர்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கடவுளுக்கு அடுத்தபடியாக பலர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கடைசி வரைக்கும் இதே கஷ்டம்தானா? என பலரும் ஜோதிடரிடம் கேட்கும் ஆதங்கமான கேள்வி. தர்மசாஸ்திர நியதிப்படி ஒருவர் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலன் உண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலன் உண்டு. ஆக கர்ம வினைக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனைவருக்கும் பொருந்தும். ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்கு காரணம் முற்பிறவியிலே செய்த பாவ, புண்ணியமாகும்.
அதை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம" பூமி என்று பெயர். ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே செய்து விடுகிறார்கள். வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச பார்க்கிறோம். ஒரு ஆத்மா தன்னுள் நிறுத்தும் கர்மா சொத்து, காமம், காசு என்ற மூன்று வழியாகவே உருவாகுகிறது. இந்த மூன்றும் தந்தை, தாய் வழி கர்ம வினை மற்றும் முன் பிறப்பின் கர்ம வினை மூலமாக ஒரு ஆன்மாவில் இயங்குகிறது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் கர்ம வினை தாக்கத்தால் வருபவை.
சிவன் சொத்து குல நாசம்
ஒரு கோவில் சொத்தை அபகரித்தால் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது தான் சாஸ்திர நியதி. சிவன் கோவில் மட்டுமல்ல அனைத்து கோவில் சொத்து மேல் ஆசைப்படுபவர்கள் சந்ததிகளும் அடியோடு நாசமாகி சீர்குலையும் என்பதாகும். அதாவது வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே கையை வைத்த பஸ்மாசுரன் நிலை தான் கோவில் சொத்தை அபகரித்தவர்களுக்கும் ஏற்படும். இதனால் தான் பலர் சிவன் கோவில் பிரசாதமான விபூதியை கூட வீட்டிற்கு கொண்டு வருவது இல்லை என்பதும் ஒரு சிறு காரணமாக இருக்கலாம். உளவியல் ரீதியாக கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரும்.சிலர் தர்ம காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள சந்தர்ப்பம் தேடி அலைகிறார்கள்.
பலர் கோவில் சொத்தை பராமரிக்க அரும்பாடுபடுகிறார்கள். உண்மையில் சிவன் சொத்து குல நாசம் என்பதன் பொருள் இதுவல்ல. சிவன் என்றால் சிவம்.
சிவம் என்பது இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருளாகும். மெய் பொருள் என்பது ஒவ்வொரு உயிரிலும் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா. சிவம் எனும் மனசாட்சிக்குப் புறம்பாக செய்யும் அனைத்துச் செயல்களும் வினையில் பதிவாகும். இதைத்தான் சிவன் (சிவம்) சொத்து குல நாசம் என்று கூறி வைத்தனர். அதாவது ஆன்மாவில் நிற்கும் சிவம் செத்தால் (மனசாட்சி செத்தால்) குலம் நாசமாகும் என்பதே இதன் பொருள். உடலும் (சந்திரன்), உயிரும் (சூரியன்) கலந்த சிவம் எனும் ஆன்மாவிற்கும் உள்ளுணர்விற்கும், மனசாட்சிக்கும் எதிராக செயல்பட்டவர்களுடைய வாழ்நாள் கொடூரமான நரக வேதனை மிகுந்ததாக இருக்கும்.
உடலும், உயிரும் துன்புறும் வகையில் பல துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
பல பெரும் பண வசதி படைத்தவர்கள் வாரிசுகளால் தீராத மன வேதனை அனுபவிப்பதற்கு இதுவே காரணம். சென்ற பிறவிகளில் தீராத தீர்க்க முடியாத பாவங்களை புரிந்தவர்கள் இந்த பிறவியில் மீள முடியாத தண்டனையை பல்வேறு வழிகளில் அனுபவித்து தீர்க்கிறார்கள்.
யாரும் தான் செய்த தவறை ஒத்துக் கொள்வதில்லை என்பதால் தான் பிரபஞ்சம் கடந்து வந்த ஜென்ம நினைவுகளை மனிதர்களிடம் இருந்து அகற்றி விடுகிறது. அதே போல் எவ்வளவு பரிகாரம் செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிப்பவர்களின் ஜாதகத்தில் நிச்சயம் கிரகண தோஷம் இருக்கும். அல்லது சூரியன், சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருக்கும்.
கிரகண தோஷம்
விண்வெளியில் உள்ள அனைத்து கோள்களும் சூரியனின் ஒளியை பெற்று இயங்குவதால் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் அகச் சிவப்பு கதிர்களே பூமிக்கு பரிபூரண இயக்கத்தை தருகிறது. இந்த சூரிய ஒளியை நிழல் கிரகங்களான ராகு, கேதுக்கள் மறைக்கும் போது பூமிக்கு கிடைக்கும் ஒளி சக்தி திறன் குறைகிறது. அதனால் கிரகண காலத்திற்கு முன், பின் 7 நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும்.கிரகண காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு சற்று கடுமையாக இருக்கும்.
பூமியில் ஜனனமாகும் ஒரு ஆன்மா தன் வினைப் பதிவு முழுமையாக அனுபவிக்க கூடிய கிரக நிலவரம் எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் பிறப்பு எடுக்கும். சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தை வழி கர்மாவையும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய் வழிக் கர்மாவையும் அதிகம் சுமந்து பிறக்கும். கிரகணம் சம்பவிக்கும் போது ராகு, கேது, சூரியன், சந்திரன் இணைவு பெறும் கிரகங்களும் அந்த சொந்த பாவகமும், நின்ற பாவகங்களும் பாதிக்கப்படும்.
கிரகணத்தில் பிறந்த ஜாதகருக்கு சூரியன் + ராகு, கேது அல்லது சந்திரன் + ராகு, கேது சேர்க்கை இருக்கும். இந்த கிரக இணைவை குரு பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ சூட்சம சக்திகள் இருக்கும் . தீய சக்திகள், பில்லி சூனியம், மாந்தரீகம், செய்வினை எளிதில் தாக்காது. புண்ணிய பலன் மிகுந்து கொண்டே இருக்கும்.
கிரகணத்தில பிறந்தவர்களுக்கு சூரியன் + ராகு, கேது சேர்க்கையுடன் சனி, செவ்வாய் தொடர்பு பெற்றால் உடல் ஊனம் நோய் தாக்கம், மன வளர்ச்சி குறைவு, ஆயுள் குறைவு, தீராத கடன், வறுமை, வம்பு வழக்கு, முன்னேற்றக் குறைவு, போதிய கல்வியின்மை, திருமணத்தடையாலும் பெரும் பாதிப்பை அடைகின்றனர். திருமணத் தடையை சந்திப்பவர்களில் தலைகீழாக நின்றும் திருமணமே நடக்காதவர்கள் சிலர் கிரகண காலங்களில் பிறந்தவர்கள்.
அப்படி என்ன பாவம் செய்து கிரகண காலத்தில் பிறந்தார்கள் என்ற கேள்வி வாசகர்களுக்கு இங்கே எழும். மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் மற்றும் பிரபஞ்ச நியதிக்கு எதிரான பின்வரும் காரியங்களில் ஈடுபட்டதன் வினைப் பதிவாகும். வட்டித்தொழில் செய்தவர்கள், காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது,பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது, பசுக்களை, விலங்குகளை வதைப்பது, இயற்கையை மாசுபடுத்துவது, நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்றவையாகும்.
தீர்வு
இதற்கு தீர்வு உண்டா? முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்.
கிரகண தோஷத்தை பாதிப்பை கிரகண கால வழிபாட்டின் மூலமே தீர்க்க முடியும்.
சூரிய கிரகணம் 2022
ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான சுப வருடம் ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 திருக்கணித பஞ்சாங்கப்படி செவ்வாய்கிழமை அமாவாசையன்று பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் காலபுருஷ 7-ம் இடமான துலாம் ராசியில் சம்பவிக்கப் போகிறது. இந்தியாவில் தெரியும் இந்த சூரிய கிரகணம் 2022-ம் ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம்.
சூரியன், சந்திரனுக்கு ராகு, கேது சம்பந்தம் இருப்பது கடுமையான பித்ரு தோஷம்.அந்த கிரகண நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும். ஜனன கால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷத்தால், கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாக பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும். சூரிய கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வதால் ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும்.
ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ஆக தாய், தந்தை வழி முன்னோர்களின் மரபுவழி பாவங்கள் என்பதை அறியலாம்.
" ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்'' என்பது சிலப்பதிகார வரி எனவே ஆன்றோர்களே, சான்றோர்களே உங்கள் வழித்தோன்றல்களுக்கு புண்ணிய பலன் கிடைக்க முயலுங்கள்.
எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டு விடும். கால பகவான் கூட தனக்கு சொந்தமான உயிரை மட்டுமே பறித்துக்கொண்டு உடலை விட்டு விடுகிறார். ஆகவே நாமும் நமக்கு சொந்தமாகாதவற்றை அனுபவிக்க ஒருபோதும் இடம் கொடுக்க வேண்டாம். அனைத்து விதமான ஆசைகளையும் அடக்கி, பந்த பாசங்களை அறுத்து, மனசாட்சிக்கு பயந்து முழுமையாக தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்கள் எளிதாக பிறவிப் பிணியிலிருந்து மீள முடியும்.அறிந்தும் அறியாமலும் பிறரின் மனதை எந்த சூழ்நிலையிலும் வேதனை படுத்தக்கூடாது. ஆகவே நமக்குச் சொந்தமான பொருளைத் தவிர மற்றவருக்குச் சொந்தமான பொருளை எங்கு எப்படி எடுத்தாலும் பாவம் பின்தொடரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்