என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனசோர்வை நீக்கும் தியானம்
    X

    மனசோர்வை நீக்கும் தியானம்

    • உங்கள் முகம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
    • குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், பகைவர்கள் இவர்கள் முகம் எல்லாம் ஞாபகம் வரும்.

    இன்று இப்போது இதனை நீங்கள் படிக்கும் இந்த நொடியில் ஒரு சிறு பயிற்சியினை, முயற்சியினை செய்து பார்க்கலாமா? அமைதி யாய் உங்களுக்கு வசதியான முறையில், இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு முயற்சி என்று சொல்லும் போதே உடல் ராணுவ வீரர் போல் இறுகி, முறுக்கேறி விடும். அப்படி இருக்க வேண்டாம். உடலை தளர்வாய் இயல்பாய் இருக்கச் செய்யுங்கள்.

    இதன் பொருள் தொய்ந்து மடங்கி இருக்கலாம் என்பதல்ல. உடல் டென்ஷன் இன்றி இயல்பாய் இருக்க வேண்டும் என்பதுதான். காலை மடித்தோ, நாற்காலியிலோ அவரவர் வயது உடல் நலத்திற்கேற்ப அமரலாம். கண்களை மென்மையாய் மூடிக் கொள்ளுங்கள். நிதானமாய் மூச்சினை ஓர் 5 முறை உள்வாங்கி, வெளி விடுங்கள். அனைத்தும் இயல்பாய், மென்மையாய் இருக்கட்டும்.

    இப்போது உங்கள் முகத்தினை, உங்கள் உருவத்தினை உங்களுள் காண முயலுங்கள். இப்படி அமர்ந்திருக்கும் நிலையில் தான் காண வேண்டும் என்பதல்ல. உங்கள் உருவம் தெளிவாக உங்களால் காணப்பட வேண்டும். உங்கள் முகம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். அநேகருக்கு இது இயலாது. குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், பகைவர்கள் இவர்கள் முகம் எல்லாம் ஞாபகம் வரும்.

    தன் முகம் காண்பது என்பது கடினமாக இருக்கும் அல்லது சற்று மங்கலாக இருக்கும். நம் கவனம் நம் மீது எந்த அளவு குறைவாய் இருக்கின்றது என்று உணரலாம். இது புற அழகினை கூட்டிக் கொள்வதற்கான பயிற்சி கிடையாது. அக வலுவினை கூட்டிக் கொள்வதற்கான பயிற்சியாகும்.

    நடிப்பு துறையில் இருப்பவர்கள், பேச்சாளர்கள் இவர்களை பெரிய கண்ணாடி முன் அவர்களை பேசி, நடிக்கச் செய்வார்கள். இது அவர்களை தன்னை மேலும் செதுக்கிக் கொள்ளவும் தன்னம்பிக்கையினை கூட்டிக் கொள்ளவும் சிறந்த செயலாற்றலினை கொடுக்கவும் உதவும். இங்கு நாம் கூற முற்படுவது அக வலிமையினை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சி. இதற்கு உங்களுக்கு தேவையான விதத்தில் ஒரு கண்ணாடி ஒன்றியை வாங்கி சுவரில் பொருத்திக் கொள்ள வேண்டும். தினமும் அக்கண்ணாடி முன் அமர்ந்து உங்களையே நீங்கள் கவனியுங்கள். முதலில் என் மூக்கு சரியில்லை, நிறம் குறைவு இப்படி குறை நிறைகள் வரும். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, உங்களை நீங்கள் பார்த்து அமைதியாய் இருங்கள். சற்று பெரிய கை கண்ணாடியினை வைத்து பயிற்சி செய்பவர்களும் உள்ளனர். சிறு விளக்கினை ஏற்றி வைத்து கண்ணாடி பயிற்சி செய்பவர்களும் உண்டு. இங்கு நான் குறிப்பிடுவதன் மூலம் இப்பயிற்சியினை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். தெரிந்தவர்களுக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றேன்.

    வேதாந்த மகரிஷியின் மையம், தொண்டர்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கண்ணாடி பயிற்சியினை சிறப்பாக நடத்துகின்றனர்.

    நான் இங்கு குறிப்பிடுவது சற்று மருத்துவம் சார்ந்த மனப்பயிற்சி. இதனை மேலை நாடுகளில் பயன்படுத்துகின்றனர். கண்டிப்பாக இதனை 10 நிமிடங்களுக்கு மேல் செய்ய வேண்டாம்.

    இதனை பயிற்சி செய்பவர்களுக்கு மனச்சோர்வு, மன உளைச்சல் போன்றவை நன்கு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் இதனைச் செய்யும் போது தனது புற தோற்றத்திற்கு மிக அதிக கவனம் கொடுப்பதனை நன்கு குறைத்து, ஆழ்ந்த உணர்வுகள், அமைதி, உள்ளுணர்வு போன்றவற்றிக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தன்னைத் தானே கண்டு உணரச் செய்யும் என்று கூறப்படுகின்றது. தன்னைத் தானே ஆய்வு செய்து குறைகளை நீக்க உதவும். மிகவும் தன்னம்பிக்கை கொடுக்கும் பயிற்சியாகவும் கூறப்படுகின்றன.

    இதனை தகுந்த பயிற்சியாளர் மூலம் கற்றுக் கொள்வதே நல்லது என்பது மீண்டும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது.


    பயிற்சிகளில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும், எந்த மத வழியினைப் பின் பற்றினாலும், எந்த சித்தர் வழிமுறையில் சென்றாலும் அவை அனைத்தும் ஒருசேர கூறும் ஒரு கருத்து. 'அன்பு செய்' 'அனைத்து மக்களிடமும், ஜீவராசிகளிடமும் அன்பாய் இரு' என்பதுதான்.

    இதனை அழகாக 'அன்பே சிவம்' என்று கூறினர் நம் ஞானிகள், சித்தர்கள், திருமூலர் போன்றோர் நமது உள்ளத்தினுள் இந்த அன்பு வர வேண்டும். அப்படி நிகழ உள்ளே இருக்கும் அகந்தை, மமதை, பெருமை அகங்காரம் அழிய வேண்டும். கடவுள் பூஜையினைக் கூட பகட்டோடு, தம்பட்டம் அடிக்கும் ஆடம்ப ரத்தோடு செய்வதால் கூடுதல் கர்மவினைகள்தான் சேரும். ஆகவே தான் அகவழிபாடு-பிறர் அறியாத வழிபாடு, ஒழுக்கம் நிறைந்த வழிபாடு சிறந்ததாகக் கூறப்படுகின்றது. நினைத்துப் பாருங்கள்- உங்களுக்குள் சிந்தியுங்கள்- பிறரை மனம் புண்படும்படி பேசுவது, அலட்சியம் செய்வது இதனை தன் குடும்பத்திலும், வெளியுலகிலும் செய்பவர்கள் எத்தனை பேர்கள் உள்ளனர். இவர்கள் கடவுளிடம் செலுத்தும் பக்தி வியாபார பக்திதான். கனியிருக்க காய்தேடி செல்லக் கூடாது.

    அகந்தைதான் ஒருவரை மனம் போனபடி பேசவும், செயல்படவும் வைக்கின்றது.

    'நான் என்கின்ற அகந்தை வெட்டப்பட வேண்டும்' என்பதனைத்தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த அகந்தை இல்லாமல் கோவிலுக்கு செல்லும்போது தான் நல்ல அதிர்வலைகளை ஒருவரால் பெற முடியும். ஏனெனில் அநேக கோவில்களில் ஒரு சித்தரின் ஜீவ சமாதி இருக்கும். எந்த சித்தரும் ஜாதி, மதம் என பேசியதே கிடையாது. அப்படியானால் மனிதனின் அகந்தை தானே இவற்றையெல்லாம் உருவாக்கி உள்ளது. ஒருவரின் மனம் கூறுவதற்கேற்ப அவர் சில வழிமுறைகளை பின்பற்றலாம். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம யோகம் என எந்த வழிமுறையிலும் செல்லலாம். ஆனால் பிறரை மட்டும் குறை கூறாது, புண் படுத்தாது வாழ்ந்தால் அதுதான் மிகப்பெரிய யோகம். இறை நம்பிக்கை இல்லையா? எதுவும் தப்பில்லை. அன்பாக இருக்கக் கற்றுக் கொண்டால் போதும். இந்த அகந்தையை நீக்கத்தான் தியான பயிற்சி என்பது அவசியமாகின்றது.

    தியானம் என்று சொன்னாலே பலரும் தனக்கு ஒத்து வராத ஒரு வார்த்தையாகவே நினைக்கின்றனர். என்னால் சில நிமிடங்கள் கூட ஒரு இடத்தில் அமர முடியாது. கவனச் சிதறல் அதிகம் இருக்கின்றது. நேரமில்லை. இப்படி ஆயிரம் காரணங்களை தேடி கண்டு பிடிப்பவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்கள் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும்.

    பல மணி நேரம் அல்லது 20 நிமிடங்கள் தியானம் என்பதற்கு ஒரு மாற்றும் இருக்கின்றது. ஜென் தியான முறையிலும் (புத்தர் பயிற்சி முறையின் பிரிவாக) இதனை கற்பிக்கின்றனர். இதற்கு அதிக நேரம், கடும் தவம் எதுவும் தேவையில்லை. ஒவ்வொரு நொடியிலும் ஒருவர் அந்த நொடியோடு செய்யப்பட வேண்டிய வேலையினை செய்ய வேண்டும்.

    உதாரணமாக நீங்கள் காலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கின்றீர்கள். ஆனால் மனம் அன்றைய நாளைப் பற்றியோ, நேற்றைய நாளைப் பற்றியோ நினைக்கும். அதற்கு தொடர்பான பல நிகழ்வுகளை நினைத்து ஓடும். கை மட்டும் பல்லினை தேய்க்கும். வாய் கொப்பளிப்பது இவை எல்லாமே ஒரு எந்திர நிகழ்வு போல் நடக்கும். பல் சுத்தம் செய்தது கூட அரை குறை நினைவில் தான் இருக்கும். இப்படித்தான் சாவியை வைத்த இடம் மறந்து தேடி அலைக்கின்றனர். ஒன்று கடந்த காலம் அல்லது வருங்காலத்தினைப் பற்றிய கவலையிலேயே மூழ்கி இருக்கின்றனர். இதனால் இவர்களின் மனநலம் வெகுவாய் பாதிக்கப்படுகின்றது. கடந்த கால நிகழ்வினை ஒன்றும் செய்ய முடியாது. வருங்காலத்தினைப் பற்றிய கணிப்பு உறுதியானது இல்லை. ஆக இந்த நொடி உங்களின் ஒவ்வொரு நொடியினையும் முழு கவனத்தினையும் அதில் செலுத்தி வாழ்வதே ஒரு வகை தியானம் ஆகின்றது. இதனை சற்று முயற்சி செய்தால் மிக எளிதாகி விடும்.

    புத்த மதத்தின் பிரிவாக சீனா, ஜப்பான் இந்நாடுகளுக்கு பரவினாலும் அநேக அடிப்படை கொள்கைகள் தியான வகைகள், பிரிவுகள் இவைகள் புத்தரின் போதனைகளை கொண்டே அமைந்துள்ளது.

    இவர்கள் முறைப்படி

    * 'நான்' என்ற ஒன்று இல்லை

    * எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

    * நாம் உலக வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்பவை எல்லாம் ஒன்று மில்லாதவை.

    * இந்த அண்டம், பிரபஞ்சத்தில் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.

    * நமது தாக்கங்கள் தவறாகவே செல்கின்றன.

    * வலி மிகுந்த நிகழ்வுகள் ஏற்பட்டால் அந்த நிகழ்வினை ஏற்றுக் கொள்.

    * இந்த நொடியில் இரு. விழிப்ணர்வோடு இரு.

    * தியான முறையே விழிப்புணர்வினை கூட்டும்.

    * ஆசை, பேராசை இரண்டுமே வேண்டாம்.

    * வாழ்க்கை எளிமையான முறையில் இருக்க வேண்டும்.

    * எந்த தீய பழக்கத்தில் இருந்தும் தள்ளி இரு.

    * நல்லவைகளை கடை பிடி.

    * மனம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

    * எந்த ஜீவனையும் கொல்லாதே.

    * திருடக் கூடாது.

    * உன்னையும் ஏமாற்றிக் கொள்ளாேத. பிறரையும் ஏமாற்றாதே.

    * மனம் அமைதியாய் இருக்கட்டும்.

    ஜென் முறை பயிற்சியில் விழிப்புணர்வு என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவர்களின் தியான பயிற்சியில் பல பிரிவுகள் இருக்கின்றன. இதனை பயில விரும்புபவர்கள் தகுந்த பயிற்சியாளர் மூலம் மட்டுமே பயில வேண்டும். முதலில் தியானம் என்று ஆரம்பிப்பவர்களுக்கு இவர்களின் பயிற்சி முறையினை எளிதாய் பின்பற்ற முடியும். மேலும் அறிவோம்.

    -தொடரும்

    Next Story
    ×