search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கணையத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
    X

    கணையத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?

    • கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
    • புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கணையம் ஓர் உறுப்பா? உடலில் இது எந்த பாகத்தில் இருக்கிறது? இதன் பணிதான் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அறிகுறிகள் யாவை? இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கலாம்.

    ஒரு மனிதன் உயிர்வாழ இதயம், மூளை போன்ற உறுப்புகள் எந்த அளவுக்கு முதன்மையோ அதே அளவுக்குக் கணையமும் முதன்மை வாய்ந்தது.

    இது உறுப்பா? எனக்கேட்டால், இலைவடிவில், ஒரு சுரப்பி என்றே சொல்லலாம். வயிற்றின் தொப்புள் பகுதிக்குப் பின்புறத்தில் இருக்கும் இந்த கணையம், டியோடினம் என்று அழைக்கப்படும் சிறுகுடலின் முதல் பிரிவில் இருக்கிறது.

    கடுகு சிறிதாக இருந்தாலும் காரம் பெரிது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த உறுப்பின் செயல்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் உள்ளன.

    உடலில் ஹார்மோன்கள் மற்றும் உணவு செரிமானத்திற்கான நொதி என்ற திரவத்தைச் சுரக்கச் செய்வது போன்ற பல பணிகளை இந்தக் கணையம் செய்கிறது. இதன் குறிப்பிட்ட 2 முதன்மை வாய்ந்த செயல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    நொதிகளை சுரக்கும் கணையம்:

    நொதி என்பது நாம் உண்ணும் உணவுகளைச் செரிக்க செய்யும் ஒரு வகை நீர்மமாகும். இதைச் சுரக்கச் செய்யும் பணியைக் கல்லீரல், குடல், மற்றும் இரைப்பையுடன் சேர்ந்து கணையமும் செய்கிறது. உணவு மனிதன் உயிர்வாழ எவ்வளவு தேவையோ, அவ்வளவு அதன் சத்துகள் முழுமையாக உடலைச் சென்றடையக் குடலில் நடக்கும் செரிமானச் செயல்பாடுகளும் தேவை.

    அந்தப் பணியைத்தான் கணையம் செய்கிறது. இந்த நொதிகள் கணையத்தில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று சிறுகுடலின் மேல்பகுதியில் கலக்கின்றன. அதனைத் தொடர்ந்து, குடலில் இருக்கும் உணவில் உள்ளபுரதம், கொழுப்புமாவு சத்துகளைப் பிரித்துச் செரிக்க உதவுகிறது.

    லிபேஸ் -இந்த நொதி உணவில் உள்ள கொழுப்பைக் கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தத்துடன் இணைந்து உடைக்கிறது.

    புரோட்டீயேஸ் - இந்த நொதி புரதங்களை உடைக்கிறது. அமிலேஸ் -இந்த நொதி மாவுச்சத்தைச் சர்க்கரையாக மாற்றுகிறது.

    ஹார்மோன்களைச் சுரக்கும் கணையம்:

    எங்குப் பார்த்தாலும் நீரிழிவு நோய். இன்றளவில் நீரிழிவு நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது வருவதற்கு என்ன காரணம்? நம்மில் பலருக்கு நீரிழிவுநோய் என்றால் உடலில் இன்சுலின் அளவு குறைவாகச் சுரப்பதால் வருவது என்றுதான் தெரியும். ஆனால் இந்த இன்சுலினைச் சுரப்பது கணையம் என்று தெரிவதில்லை.

    நாளமில்லாச் சுரப்பியாகச் செயல்படும் இந்தக் கணையம் இன்சுலின், குளுகோகான் என்ற இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அதில் இன்சுலின் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், குளுகோகான் சர்க்கரையின் அளவைக் அதிகரிக்கவும் செய்து, உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைச் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது.

    இதுவரை கணையத்தின் முதன்மை, அதன் பணிகள் குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து கணையத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கணையத்தைப் பாதிக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள்

    கணைய அழற்சி, கணையப் புற்றுநோய், சிஸ்டிக் பைப்ரோசிஸ், மது மற்றும் பித்தப்பைக் கற்களால் ஏற்படும் நோய்கள் கணையத்தைப் பாதிக்கிறது.

    கணைய அழற்சி (Pancreatitis):

    கணையத்தைப் பாதிக்கும் நோய்களில் மிகவும் முதன்மையானது கணைய அழற்சியாகும். இந்த நோயின் காரணத்தால் ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

    பித்தப்பைக் கற்கள் அல்லது அதிக மது அருந்துதல் பொதுவாகக் கணைய அழற்சிக்குக் காரணமாக அமைகின்றன. அதுமட்டுமன்றி, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும் போதும் (உயர் டிரைகிளிசரைடு டி.ஜி.எல். அளவு) கணைய அழற்சி ஏற்படுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    இதன் அறிகுறிகள். வயிற்றின் மேல் பகுதியில் வலி உணர்வு, உணவு உட்கொண்டபின் ஏற்படும் வயிற்று வலி, முதுகு பகுதிக்கும் பரவுதல், உடல் எடை குறைவது, சில நேரங்களில் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஆகும்.

    கணையப் புற்றுநோய்:

    புற்றுநோய் என்பது இக்காலத்தில் மனிதர்கள் இடையே நாளுக்கு நாள் கூடி வருகிறது. பலவகையான புற்றுநோய்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கணையப் புற்றுநோய். கணையத்தில் உள்ள செல்கள் தம் கட்டுப்பாட்டை இழந்து பல்கிப் பெருகுவதால் கணையப்புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தநோய் முற்றும் போது அதன் செல்கள் பிறபாகங்களுக்கும் பரவுகின்றன.

    இதன் அறிகுறிகள், முதுகில் பரவும் வயிற்று வலி, பசியின்மை அல்லது எதிர்பாராத எடை இழப்பு, தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் ஏற்படுவது (மஞ்சள் காமாலை), வெளிர் நிற மலம், கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர், தோல் அரிப்பு, உடலில் ரத்தக் கட்டிகள்.நீரிழிவு நோயின் அறிகுறிகள் (மீறியப் பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மீறிய தாகம்)

    கணையச் சிக்கல்களை கண்டறிவது எப்படி?

    அழற்சியைத் துல்லியமாகக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பித்தப்பைக் கற்கள் மற்றும் அழற்சியைக் கண்டறிய டோமோகிராபி (சி.டி.), ஊடுகதிர் (ஸ்கேன்), ரத்த ஆய்வுகள்.

    கணையத்தைப் பாதுகாக்கும் வாழ்வியல் வழிமுறைகள்:

    * மது மற்றும் புகைபழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    * கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    * புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    * இரவில் கால தாமதமாய் உணவு உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.

    * நினைக்கும் நேரங்களில் எல்லாம் கிடைத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * வாரத்திற்கு ஒருமுறையாவது உண்ணாநோன்பு இருப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    * உடல் பருமனாவதைத் தவிர்க்கத் தேவையான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    * மிகவிரைவாக உடல் எடையைக் குறைக்க முயலாமல், பொறுமையாக ஒரு மாதத்திற்கு 2 முதல் 4- கிலோகிராம் வரைமட்டுமே எடையைக் குறைக்க வேண்டும்.

    * உணவுப் பொருட்களைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

    * அன்னாசி, பப்பாளி, மாம்பழம், தேன், வாழைப்பழம், வெண்ணெய், மற்றும் இஞ்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இயற்கையாகவே நொதிகளைச் சுரக்கச் செய்யும் தன்மை உண்டு. இதனால் அந்த உணவுகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    இது போன்ற வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் கணையத்தை நலத்துடன் பாதுகாக்க முடியும். கணையம் தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

    Next Story
    ×