என் மலர்
விளையாட்டு
வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன் - மனு பாக்கர்
- மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.
- மனு பாக்கருக்கு சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
சென்னை:
ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் சென்னை வந்தார்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கிரீடம் அணிவித்து பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்தனர்.
அப்போது மாணவர்களுடன் மனு பாக்கர் உரையாடினார். மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அவர் அதற்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் குறித்து மனு பாக்கர் பேசினார்.
"வினேஷ் எனக்கு அக்கா போன்றவர். மரியாதைக்குரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர் அவர். கடந்த காலங்களில் அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார்" என்று அவர் தெரிவித்தார்.