search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    18-வது இரட்டை சதம்.. பிராட்மேன், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த புஜாரா
    X

    18-வது இரட்டை சதம்.. பிராட்மேன், சச்சின் போன்ற ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த புஜாரா

    • புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார்.
    • முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதம் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இதில் 2-வது லீக் ஆட்டம் ஒன்றில் சவுராஷ்டிரா-சத்தீஷ்கார் (டி பிரிவு) அணிகள் மோதிய ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்தது. சத்தீஷ்கார் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 578 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 75 ரன்னுடனும், ஷெல்டன் ஜாக்சன் 57 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த புஜாரா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷெல்டன் ஜாக்சன் 62 ரன்னிலும், அர்பித் வசவதா 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று கலக்கிய புஜாரா இரட்டை சதம் விளாசினார்.

    இது அவருக்கு ரஞ்சி போட்டியில் 9-வது இரட்டை சதமாகவும், முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதமாகவும் பதிவானது. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (டெஸ்டையும் சேர்த்து) அதிக இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் புஜாரா 4-வது இடத்துக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (37 இரட்டை சதம்), இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (36), ஹென்ட்ரென் (22) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    அத்துடன் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார். கவாஸ்கர், டெண்டுல்கர், டிராவிட் ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார்.

    36 வயதான புஜாரா 234 ரன்களில் (383 பந்து, 25 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷசாங்க் சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அப்போது சவுராஷ்டிரா அணி 137.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 478 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் இந்த ஆட்டம் இரு அணி கேப்டன்கள் சம்மதத்துடன் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சே முடியாததால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன.

    Next Story
    ×