என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஏலத்தில் விலைபோகாத வீரர்: அதிவேக சதமடித்து அன்மோல்பிரீத் சிங் சாதனை
- லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த இந்தியர் ஆனார் பஞ்சாப்பின் அன்மோல்பிரீத் சிங்.
- பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.
அகமதாபாத்:
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சி பிரிவில் இடம்பெற்ற பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அன்மோல்பிரீத் சிங் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தார். இவர் 35 பந்தில் சதமடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார்.
இறுதியில், பஞ்சாப் அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் (35), அன்மோல்பிரீத் (115 ரன்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் அன்மோல்பிரீத். பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.
சர்வதேச அளவில் அன்மோல்பீரீத் சிங் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவின் மெக்குர்க் (29 பந்து), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (31 பந்து) உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள அன்மோல்பிரீத் சிங், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.