search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பும்ராவுக்கு எதிராக விளையாடியதை பேரக்குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்- டிராவிஸ் ஹெட்
    X

    பும்ராவுக்கு எதிராக விளையாடியதை பேரக்குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்- டிராவிஸ் ஹெட்

    • பும்ரா பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
    • நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 8 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

    இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் 30 வயதான டிராவிஸ் ஹெட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெர்த் டெஸ்டில் 89 ரன்கள் விளாசிய அவர் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளில் தொடரின் முதல் டெஸ்டில் தோற்று, அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி தொடரை வென்ற அணிகள் நிறைய உள்ளன. கடந்த ஆண்டில் நாங்கள் சில சவாலான டெஸ்ட் போட்டி மற்றும் தொடர்களை எதிர்கொண்டு விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு வாரம் சரியில்லாமல் போய் விட்டது. அது பரவாயில்லை. மேலும் 4 வாய்ப்புகள் உள்ளன. முந்தைய ஆண்டுகளில் செய்தது போல் கடினமான சூழலில் இருந்து மிக வேகமாக மீண்டெழுந்து வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கிரிக்கெட் வரலாற்றில் அனேகமாக தலைச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார். அவர் பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு சவாலாக இருக்கிறார் என்பதை பார்த்து வருகிறோம். அவருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, நாங்கள் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறோம் என பேரக்குழந்தைகளிடம் சொல்வது நன்றாக இருக்கும். மிகுந்த சவால் அளிக்கக்கூடிய அவரை இன்னும் சில முறை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

    முதலாவது டெஸ்டில் தடுமாறிய எங்களது பேட்ஸ்மேன்கள் என்னிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்பார்களா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் அதற்காக என்னை அணுகமாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணியில் ஆடக்கூடியவர்கள். இனி 2-வது டெஸ்டுக்கு தயாராவது குறித்து அடுத்த 3-4 நாட்கள் நாங்கள் விவாதிப்போம். உண்மையிலேயே பும்ரா மற்ற பந்து வீச்சாளர்களை காட்டிலும் தனித்துவமானவர். அவரை திறம்பட சமாளிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தங்களுடைய வழியை கண்டறிய வேண்டும்.

    2020-ம் ஆண்டு இதே அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் இந்தியாவை 36 ரன்னில் சுருட்டி வெற்றி பெற்றோம். அதில் எல்லாமே சீக்கிரம் முடிந்து விட்டது. அந்த வெற்றியை ரொம்ப உற்சாகமாக கொண்டாடினோம். அது போன்று மீண்டும் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடக்குமா? என்பது தெரியாது.

    இவ்வாறு ஹெட் கூறினார்.

    Next Story
    ×