என் மலர்
கிரிக்கெட் (Cricket)

11 அரையிறுதியில் 9-ல் தோல்வி.. தென் ஆப்பிரிக்காவை துரத்தும் சோகம்

- நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது.
- ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்து விட்டது. முதல் அரையிறுதி ஆஸ்திரேலியா - இந்தியா மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அரையிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது. இதில் 1999-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது.
மற்ற ஒன்பது அரை இறுதியில் தோல்வியும், ஒரு அரையிறுதியில் டிராவும் ஆகி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் அரையிறுதி போட்டிகளில் அதிக முறை தோல்வியை தழுவிய அணி என்ற சோகமான சாதனையை தென் ஆப்பிரிக்க அணி படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 2000, 2002, 2006, 2013, 2025 ஆகிய 4 ஆண்டுகளிலும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் 1992, 2007, 2015, 2023 ஆகிய ஆண்டுகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 1999-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டி டிரா ஆனது.